Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதல்களின் போது இனப்படுகொலை இடம்பெற்றது என்று வலியுறுத்தும் வடக்கு மாகாண சபையின் ‘இனப்படுகொலைத் தீர்மானம்’ சரியானது. நடந்த உண்மைகளை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நோர்வே உயர்ஸ்தானிகர் கிறீஸ்டா லோசனுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த சந்திப்பில், “ஆட்சி மாற்றமொன்று ஏற்பட்டுள்ள நிலையில் இனப்படுகொலைத் தீர்மானத்தினை வடக்கு மாகாண சபை ஏன் அவசரமாக நிறைவேற்றியது” என்று நோர்வே உயர்ஸ்தானிகர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

இன்றைய சந்திப்பு தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தற்போது நாட்டில் இருக்கும் அரசியல் சூழ்நிலையில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என கேட்டிருந்தார். அரசியல் சூழ்நிலையில் மாற்றம் இருப்பதை ஏற்றுக்கொண்டோம். புதிய ஆளுநர் எம்முடன் சேர்ந்து சகல திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றார்.

அதேபோல், வடக்கு மாகாண பிரதம செயலாளரும் எமது அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குகின்றார். அரசாங்கத்தில் பல நன்மை தரக்கூடிய நடவடிக்கைகள் நடந்து வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது என்று கூறியிருந்தேன்.

ஐக்கிய நாடுகள் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டதால், எமது உரிமை பிரச்சினைகள் தாமதப்படுத்தப்பட்டு மறைக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் எமது மக்கள் மத்தியில் இருக்கின்றது. அதனால் எமது எதிர்ப்புக்களை தெரிவித்திருந்தோம்.

இந்த விசாரணை பிற்போடப்பட்டது. தொடர்பாக நாட்டில் இருதரப்பும் வெவ்வேறு அபிப்பிராயங்களை கொண்டுள்ளன. அரசாங்கம் இது தொடர்பான ஒழுங்குமுறையை ஏற்படுத்தாமல் இருப்பது எமக்கு சரியாகப்படவில்லை. உள்ளக விசாரணை பக்கச்சார்பாக அமையும் என்ற கவலை தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்றது.

“ஐக்கிய நாடுகள் அறிக்கை ஒருமுறை தான் பிற்போடப்பட்டுள்ளது. செப்டெம்பர் மாதம் நிச்சயமாக அறிக்கை வெளிவரும் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. வெளிநாடுகள் அனைத்தும் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளன. அவை அறிவுபூர்வமான சிந்தனையைக் கொண்டுள்ளன. எனவே தமிழ் மக்களுக்கு தவறு இழைக்க ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. நீங்கள் இது தொடர்பாக கவலை கொள்ள வேண்டாம்.” என அவர் கூறியிருந்தார்.

தற்போது அரசியல் உங்களுக்கு சாதகமாக இருக்கின்ற நிலையில், ஏன் இன அழிப்பு தொடர்பான பிரேரணையை கொண்டு வந்தீர்கள் என கேட்டிருந்தார்.

தமிழ் மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாக இந்த ஆவணம் இருக்கின்றது. நடைபெற்றவற்றை ஆவணமாக வெளியிட்டோம். ஆவணத்தில் பிழை இருந்தால் எமக்கு கூறலாம். ஆனால், அவ்வாறு பிழை இருக்க முடியாது. ஏனெனில், சர்வதேச நாடுகளில் இருக்கின்ற நிறுவனங்கள் இனப்பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்து, அதன் அடிப்படையில் தயாரித்த அறிக்கையில் இருந்து பெற்றுத்தான் இந்த இன அழிப்பு ஆவணத்தை தயார் செய்திருந்தோம். இந்த உண்மையை அனைவரும் ஏற்றுக்கொண்டால் தான் நாட்டில் ஒற்றுமையோடு மக்களிடையே நல்லெண்ணத்தை ஏற்படுத்த முடியும். இது பாதகமான ஆவணம் இல்லை என எடுத்துக் கூறினேன்.

நாட்டில் அனைத்து மக்களிடையேயும் சகோதரத்துவம் நல்லெண்ணத்தை ஏற்படுத்துவது தான் சர்வதேசத்தின் எதிர்பார்ப்பு. எனவே அவற்றை பாதிக்காத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது என அவர் கூறினார்.” என்றுள்ளார்.

0 Responses to இனப்படுகொலைத் தீர்மானம் சரியானது; உண்மைகளை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com