Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கம் பாராளுமன்றத்தில் தனது முதலாவது தோல்வியை நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்துள்ளது.

400 பில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களை வெளியிட்டு அரசாங்கத்திற்கு கடன் பெறுவது தொடர்பான உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் மீதான தீர்மானத்தை அங்கீகரிப்பது தொடர்பான பிரேரணையின் மீதான வாக்கெடுப்பின் போதே 21 மேலதிக வாக்குகளினால் அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டது.

இந்த பிரேரணைக்கு ஆதரவாக 31 வாக்குகளும், எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டம் மீதான தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.

பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் நேற்று உரித்துப் பதிவுச் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகளை அனுமதிப்பது தொடர்பான விவாதம் நடத்த முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானத்தை அனுமதிப்பது தொடர்பான விவாதத்தை நடத்த இருப்பதாக சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல அறிவித்திருந்தார்.

இதன்படி நேற்று திறைசேரி உண்டியல் தொடர்பான விவாதம் நடத்தப்பட்டது. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இவ்விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றினார். எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா எதிர்க்கட்சி சார்பில் விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றினார். இவ்விவாதத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கருத்துத் தெரிவித்தனர். பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா பதிலளித்து உரையாற்றினார். இது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என சுயாதீன எம்.பி. அஜித் குமார கோரிக்கை விடுத்தார். இதற்கமைய வரிசைப்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதற்கு ஆதரவாக அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர். அதேநேரம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்த்தன, டியூ குணசேகர உள்ளிட்ட 49 பேர் எதிர்த்து வாக்களித்திருந்தனர். ஜே.வி.பி. உறுப்பினர் விஜித ஹேரத் எதிர்த்து வாக்களித்திருந்ததுடன் சுயாதீன எம்.பியான அஜித் குமாரவும் எதிர்த்து வாக்களித்தார்.

வாக்கெடுப்பு இடம்பெற்ற போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எவரும் சபையில் இருக்கவில்லை. வாக்கெடுப்பு நடைபெற்ற சமயத்தில் பிரதமர், நிதியமைச்சர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் பலரும் சபையில் இருக்கவில்லை.

0 Responses to பாராளுமன்றத்தில் மைத்திரி அரசின் முதல் தோல்வி; நிதிப்பிரேரணை 21 வாக்குகளினால் தோற்கடிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com