Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு 8 ஆண்டுகள் ஆகியும் மகன் என்ன ஆனான் என்று தெரியாமல் வயதான பெற்றோர் வேதனையில் உள்ளனர்.

37 வயதான தமிழ் ஊடகவியலாளரான சுப்பிரமணியம் இராமச்சந்திரன் யாழ். வடமராட்சி கலிகை சந்தியில் வைத்து சிங்கள ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு எட்டு ஆண்டுகள் கடந்து விட்டன. ஒரு மாத காலத்திற்கு பின்னர் இலங்கை ராணுவத்தினரின் கடத்தல் தொடர்பாக பிரான்ஸை மையமாக கொண்டு இயங்கும் ஊடகங்கள் கண்காணிப்பக குழு (Reporters Sans Frontieres) கண்காணிக்க தொடங்கியது.

எட்டு ஆண்டுகள் கடந்த நிலையில், தனது மகனுக்கு என்ன நடந்ததென தெரியாமல் 85 வயதுடைய தந்தையும், 83 வயதுடைய தாயும் வேதனையில் இருக்கின்றனர்.

ராமசந்திரனின் 8, 9 வயதுடைய பிள்ளைகள் தங்கள் தந்தையின் வருகையை எட்டு வருடங்களாக ஏங்கிக் கொண்டு இருக்கிறார்கள். 'எங்கள் மரணத்திற்கு முன்னர் எனது மகனை பார்த்துவிட வேண்டும்' என்று யாழ்ப்பாணம் கரவெட்டி துண்ணாலை கிழக்கில் வசிக்கும் ஊடகவியலாளர் ராமசந்திரனின் பெற்றோர் கதறிக்கொண்டு இருக்கின்றனர்.

சர்வதேச ஊடக கண்காணிப்புக்குழுக்கள் தமது மகனை கைவிட்டு விட்டதாகவும், தன்னுடைய மகன் குறித்து உள்நாட்டு விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளவில்லை என்றும் ராமசந்திரனின் தந்தை குற்றம் சுமத்தியுள்ளார்.

உள்நாட்டு விசாரணைகள் தொடர்ந்து தாமதப்படுத்தப்பட்ட வண்ணம் செயற்படுவதாகவும், எனினும் விசாரணைகள் இதுவரை வடமராட்சியை நெருங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், 2007ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி பருத்தித்துறை கொடிகாமம் சந்தியில் வைத்து ராமசந்திரனை இலங்கை ராணுவத்தினர் கைது செய்துள்ளார்கள் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை ராணுவம் கைது செய்து ஈ.பி.டி.பி யினரிடம் ஒப்படைத்துள்ளனர். நாங்கள் கலிகை சந்தியில் மகனுக்காக காத்திருந்தோம். எனினும் அவன் வரவில்லை. ராமச்சந்திரன் காணாமல் போவதற்கு சில நாட்களுக்கு முன்னர் யாழ் தினக்குரலில் சிங்கள ராணுவ அதிகாரிகளின் சட்டவிரோத மணல் கொள்ளை குறித்து கட்டுரை ஒன்று எழுதப்பட்டிருந்தது.

இலங்கை ராணுவ புலனாய்வுக்கு பேர்போன பலப்பாய் முகாமிற்கு ராமசந்திரனை கொண்டு சென்றிருக்கலாம் என பிரதேச மக்கள் நம்பினார்கள். அவ்வூரில் நடத்தப்பட்ட கொலைகளை மறைப்பதற்காக, அப்பிரதேச மக்களை ஊரில் கிணறுகள் தோண்ற வேண்டாமென ராணுவத்தினர் எச்சரித்துள்ளனர். அவ்வூரில் 1999ஆம் ஆண்டு முதல் இலங்கை ராணுவம் நிலைகொண்டிருந்தது.

சமீபத்தில் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சர்வதேச ஊடகவியலாளர்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள், "இலங்கையின் வட பகுதியில் ஊடக சுதந்திரத்தில் முன்னேற்றம் காணப்பட்டாலும், ஊடகவியலாளர்கள் இன்னும் புலனாய்வுத்துறையினரின் கண்காணிப்பு மற்றும் அடக்கு முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். அதுமாத்திரமல்லாது யாழ் தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலை மற்றும் காணாமல் ஆக்கப்படுதல் குறித்த விசாரணைகளில் சர்வதேச ஊடக கண்காணிப்பு குழுக்கள் நேரடியாக தலையீடு செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

"தெற்கில் சில அபிவிருத்திகள் காணப்படவில்லை என்றாலும், ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை குறித்து புதிய அரசாங்கம் ஓரிரு வழக்குகளை தொடுத்து வெளி உலகிற்கு கண்துடைப்பு செய்கின்றது. எனினும் வடக்கு கிழக்கில் காணாமல் போகச்செய்யப்பட்ட மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் குறித்து புதிய அரசாங்கம் எவ்வித கரிசனைகளையும் காட்டவில்லை" என யாழ் ஊடகவியலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளார்கள்.

0 Responses to எட்டு ஆண்டுகளாக மகனை தேடும் தாயின் கதறல்! (வீடியோ இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com