Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வலியாக மாறியதும் சிறிலங்கா அரசினால் மிகவும் திட்டமிடப்பட்டும், சர்வதேச நாடுகளின் அனுசரணையுடனும் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட இருபத்தியோராம் நூற்றாண்டின் அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்ததுமான தமிழீழத்தில், இறுதிவரை மண்டியிடாது போராடிய மாவீரர்களுக்கும், மக்களுக்குமான ஆறாம் ஆண்டு நினைவுகள் சுமந்த கவனயீர்ப்பு நிகழ்வான, மே 18 - தமிழின அழிப்பு நாள் பேர்ண் பாராளுமன்றம் அருகில் நேற்று நடைபெற்றது.

இதில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் வலி சுமந்த நினைவுகளை நெஞ்சினில் சுமந்து மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர். சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன், சுவிஸ் மற்றும் தமிமீழத் தேசியக்கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடரேற்றல், அகவணக்கம், உறுதிமொழியுடன், மலரஞ்சலி செலுத்தப்பட்ட வேளையில் நினைவுப்பாடலுடன் கவிவணக்கமும் இடம்பெற்றது.

நிகழ்வில் முள்ளிவாய்க்கால் இறுதிநாட்களில் எமது உறவுகள் பல சிரமங்களுக்கு மத்தியிலும் தமது பசியாற ஒருநேர உணவுக்கு வழியின்றி உப்பு, பால் இல்லாத கஞ்சி உண்டு பசியாறியதை நினைவுகூரும் அடையாளமாக கலந்து கொண்டவர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது.

நிகழ்வில் சமகால அரசியல் தொடர்பான எழுச்சியுரைகளுடன், இளையோர்களால் வேற்றின மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் ஜேர்மன், பிரெஞ்சு மொழிகளில்; பேச்சுக்கள் இடம்பெற்றிருந்ததுடன் இன அழிப்பு சார்ந்த துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

நிகழ்வின் இறுதியாக கலந்து கொண்ட மக்கள் தமது உணர்வுகளை ஆற்றாமையோடு வெளிப்படுத்தியதோடு நாம் அனைவரும் ஓற்றுமையாக தாயகம் நோக்கி தொடர்ந்து பயணிப்போம் என திடம் பூண்டு நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து சுவிஸ் நாட்டின் கொடியுடன் தமிழீழத் தேசியக்கொடியும் இறக்கப்பட்டு, தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வு ஷவலிகளிலிருந்து வலிமை பெறுவோம்! உறுதி கொள்வோம்! உரிமை மீட்போம்!| என்ற உணர்வுடன் நிறைவுபெற்றது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

0 Responses to சுவிஸ் பேர்ணில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மே 18 - தமிழின அழிப்பு நாள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com