புங்குடுதீவைச் சேர்ந்த பாடசாலை மாணவியான செல்வி சிவலோகநாதன் வித்தியா எட்டுப் பேர் கொண்ட குழுவினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கோரமாக கொலை செய்யப்பட்டாள்.
இது தொடர்பாக வடக்குமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவிக்கையில்,
புங்குடுதீவைச் சேர்ந்த பாடசாலை மாணவியான செல்வி சிவலோகநாதன் வித்தியா எட்டுப் பேர் கொண்ட குழுவினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கோரமாக கொலை செய்யப்பட்டாள்.
இதன் எதிரொலியாக யாழ் தீவுப்பகுதியில் பெரும் பதட்டமும் அச்ச நிலையும் நிலவி வரும் நிலையில் யாழ் குடாநாட்டிலும் வடக்கு மாகாணத்திலும் பொது அமைப்புகள், வர்த்தக சமுகங்கள், பாடசாலை சமுகங்கள், ஆசிரியர் சமுகம், பல்கலைக்கழக சமுகம் என பல அமைப்புகள் வித்தியாவுக்கு ஆதரவாகவும் வித்தியாவின் படுகொலையை கண்டித்தும் குரலெழுப்பி குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வட மாகாணத்தில் பாலியல் வன்முறை மற்றும் கொலைகளுக்கு எதிரான கண்டன கோசத்தோடு பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல சட்டத்தரணிகள் பலரும் அவர்களோடு ஓய்வுபெற்ற நீதிபதிகளாக இருந்த பல சட்டத்தரணிகளும் வித்தியாவுக்கு ஆதரவாகவும் கொலையாளிகளுக்கு கடுந்தண்டனை பெற்றுக்கொடுக்கும் நோக்கத்தோடும் மன்றில் இலவசமாக ஆஜராக முன்வந்திருப்பது பாதிக்கப்பட்டவர்களுக்கும் வித்தியாவின் கொலைக்கு நீதி வேண்டி நிற்பவர்களுக்கும் பெரும் ஆறதலாக அமைந்துள்ளது. சில சட்டத்தரணிகள் என்னிடம் முன்வந்து இத்தகவலை தெரிவித்துள்ளனர்.
வட மாகாண முதலமைச்சரோடும் தீவகத்தில் எழுந்துள்ள பாதுகாப்பற்ற நிலை தொடர்பாகவும் குறிப்பாக தீவகத்திலே இத்தகைய செயல்கள் அடிக்கடி இடம்பெறுவதையும் சுட்டிக்காட்டி முதலமைச்சர் அவர்களும் வட மாகாண பொலிஸ் துறை சார்ந்தவர்களுடனும் இச் செயல்கள் தொடர்பாக உரையாடி இருப்பதோடு இத்தகைய கொடூர செயல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையும் எடுக்கக் கோரியுள்ள நிலையில் இன்றைய தினம் வித்தியாவின் இல்லத்திற்கு சென்ற நான் இவ்விடயங்களை அவர்களுக்கு தெரிவித்ததோடு இலவசமாக சட்டத்தரணிகள் ஆஜராக முன்வந்திருக்கும் விடயத்தை தெரிவித்து அவர்களுடைய ஒப்புதலையும் ஆதரவையும் பெற்றுள்ளேன்.
வித்தியாவின் குடும்பத்தினரும் ஊர் மக்களும் என்னிடம் குறிப்பிட்டபோது கொலையோடு சம்பந்தப்பட்ட எட்டுபெரும் தங்கள் உறவினர்கள் இல்லை என்றும் அவர்களுக்கும் தங்களுக்குமிடையே எவ்வித தனிப்பட்ட கோபங்களும் விரோதங்களும் இருந்ததில்லை என்றும் கைது செய்யப்பட்டுள்ள எட்டுப்பேரில் மூவர் புங்குடுதீவு வல்லனை சேர்ந்தவர்கள் என்றும் ஐவர் புங்குடுதீவு வீராமலையை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களில் சிலர் புங்குடுதீவை பூர்விகமாகக் கொண்டவரும் பின்பு கிளிநொச்சியில் வசித்து இறுதிக்காலத்தில் புங்குடுதீவில் வசித்து வந்த மாங்காய் மணியம் என்பவரை ரூபா பத்தாயிரத்திற்கு கொலை செய்தவர்கள் என்றும் இவர்களில் பலபேர் ஊருக்குள் பல சட்டவிரோத சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள் என்றும் இவர்களுக்கு கடும் தண்டனையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் வித்தியாவின் தாயாரான சிவலோகநாதன் சரஸ்வதி, சகோதரி நிஷாந்தினி, சகோதரன் நிஷாந்தன் ஆகியோர் என்னிடம் தெரிவித்தனர்.
இவர்களின் தந்தையாரான பசுபதிப்பிள்ளை சிவலோகநாதன் பாரிசவாதநோயினால் பீடிக்கப்பட்டு பேச முடியாமல் கை கால் அசைக்க முடியாமல் இருந்து வரும் நிலையில் வித்தியாவின் தாயின் சகோதரி ஒருவரே பிரான்ஸ் நாட்டில் இருந்து இடைக்கிடை இவர்களுக்கு வாழ்வாதாரத்திற்காக இவர்களுக்கு சிறு பண உதவி செய்து வந்துள்ளார்.
அடிப்படையிலே மிகவும் வறுமை நிலையில் இக்குடும்பம் வாழ்ந்து வருகின்றது. வித்தியாவின் தாயின் சகோதரன் ஒருவர் வன்னியில் நடந்த எறிகணை வீச்சில் கொல்லப்பட்ட நிலையில் வன்னியிலிருந்து மீண்டும் புங்குடுதீவுக்கு வந்த இவர்களுக்கு அரசாங்கத்தினால் எந்தவொரு உதவியும் வழங்கப்பட்டிருக்கவில்லை. புங்குடுதீவில் தங்களின் சொந்த வீடு முற்றாக சேதமடைந்துள்ளதால் உறவினரொருவரின் வீட்டிலே தற்காலிகமாக தற்போது வசித்தும் வருகின்றனர் என தெரிவித்தார்.
0 Responses to கைதானவர்கள் உறவினர்கள் அல்ல!: வித்தியாவின் குடும்பத்தினர்