நாட்டில் தற்பொழுது தோன்றியிருக்கும் சாதகமான சூழலைப் பயன்படுத்தி தமிழ் பேசும் மக்களுக்கு அதிகூடிய அதிகாரப் பரவலாக்கத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும். இதனை இழுத்தடிப்பதானது பிரச்சினையை வேறு பரிணாமத்துக்கு இட்டுச் சென்றுவிடும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலைக்கு அருகில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’ நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
முதலமைச்சர் தெரிவித்துள்ளதாவது, “அரசாங்கம் சர்வதேச சமூகத்துடன் இணைந்து தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றுக்கு வரவேண்டும். இதுவே இலங்கையில் வாழ்கின்ற பல்லின மக்களுக்கிடையில் பரஸ்பர கெளரவத்துடன் கூடிய உண்மையான நல்லிணக்கத்தை உருவாக்கும்.
ஆட்சிக்கு வருகின்ற புதிதில் தம்மை சமாதானத் தூதுவர்களாகக் காட்டிக்கொள்ளும் அரச தலைவர்கள் தமிழ் பேசும் மக்களது பிரச்சினைகளுக்குத் தீர்வினைக் காண்பது போன்ற தோற்றப் பாட்டினை உருவாக்குவது பின்னர் காலப்போக்கில் தமிழர் விரோதப் போக்கிற்கு மாறுவதும் கடந்த காலங்களில் இடம்பெற்ற நிகழ்வுகள். இந்நிலைமை இனியும் நீடிக்கக் கூடாது.
போரின் போது உயிரிழந்த பொது மக்களுக்கான நீதியைத் தமிழ்த்தரப்பு வேண்டிநிற்பதன் நோக்கம் வெறுமனே குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல. இது தொடர்பில் வெளிக்கொணரப்படுகின்ற உண்மைகள் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சர்வதேச சமூகத்திற்கு தெரியப்படுத்த உதவும். பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்கின்ற நீதி தமிழ் பேசும் மக்களது அரசியல் தீர்வு நோக்கிய பயணத்திற்கு உந்து சந்தியாக அமையும்.
பல நூற்றாண்டு காலமாக வடக்கு கிழக்கில் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்ற தமிழ்த் தேசிய இனம் தமது அரசியல் உரிமைக்கான கோரிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்வைத்து வந்தபோதிலும் மாறி மாறி வந்த இலங்கையின் ஆட்சியாளர்கள் வெறுமனே காலத்தை கடத்தி வந்தார்களே தவிர தமிழ் மக்களது நியாயமான அரசியல் கோரிக்கைகளுக்கு ஏற்ற பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.” என்றுள்ளார்.
0 Responses to சாதக நிலைமைகளைப் பயன்படுத்தி அதிகாரங்களை பரவலாக்க வேண்டும்: விக்னேஸ்வரன்