Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முள்ளிவாய்க்கால் இறுதி மோதல் எமது சரித்திரத்தின் சோகமான பதிவு என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இறுதி மோதல்களில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’ நிகழ்வு முள்ளிவாய்க்காலில் இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. அங்கு உரையாற்றும் போதே வடக்கு மாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, “உயிரிழந்த எமது பல்லாயிரக்கணக்கான மக்களை நினைவுகூரும் நாளே இன்றைய நாளாகும். இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களை மாத்திரமன்றி உலக நாடுகளில் வாழ்கின்ற அனைத்து தமிழர்களினதும் நெஞ்சங்களை உலுக்கிய சோகமான செய்திகளை காவி வந்த இந்த நாளானது, மோதல்களினால் உயிரிழந்த எமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துகின்ற புனித நாளாகும்.

உலகலாவிய ரீதியில் வாழும் இலங்கை தமிழ் மக்களின் ஒருமித்த மனித சிந்தனையில் கலங்கத்தை ஏற்படுத்திய ஒரு நிகழ்வே முள்ளிவாய்க்கால் இறுதி மோதல். மனித உரிமைகள் மறக்கப்பட்டு ஊடக உள்நுழைவு மறுக்கப்பட்டு சாட்சி இல்லாது நடத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் இறுதி மோதல்.

தடை செய்யப்பட்ட போராயுதங்கள் பாவிக்கப்பட்டன என்று பல்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன. வெளிநாட்டு உதவிகள் உதாசீனப்படுத்தப்பட்டு உள்நாட்டு உதவிகள் மறுக்கப்பட்டு உண்மை நிலை சொல்லாது மக்கள் தொகையை குறைத்து கூறி அப்பாவி பெண்கள், பிள்ளைகள், குழந்தைகளின் உயிரை காவிச் சென்றதே முள்ளிவாய்க்கால் இறுதி மோதல்.

முள்ளிவாய்க்கால் இறுதி மோதல் எமது சரித்திரத்தில் இடம்பெற்றுவிட்ட சோக வரவாற்று பதிவு. போரிலே உயிரிழந்த எம் உறவுகளை என்னென்றும் நினைவுகூர தமிழர்களாகிய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.” என்றுள்ளார்.

0 Responses to முள்ளிவாய்க்கால் எமது சரித்திரத்தின் சோகப் பதிவு - விக்னேஸ்வரன் உரை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com