Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பூரண ஒத்திசைவு இல்லாமல் அரச வர்த்தமானியில் பிரசுரித்த 20வது திருத்த சட்டத்தை உடனடியாக மீளப்பெறவேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை சிறு கட்சிகளும், சிறுபான்மையின கட்சிகளும் முழுமையாக எதிர்க்கத் தீர்மானித்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறு கட்சிகளும், சிறுபான்மையின கட்சிகளும் நேற்று வியாழக்கிழமை இரவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ‘தாருஸ்ஸலாம்’ தலைமையகத்தில் நடாத்திய அவசர கூட்டத்திலேயே மேற்படி தீர்மானங்கள் எடுக்கப்பட்டன என்றும் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, "அரசமைப்பின் 20வது திருத்தத்தை நாங்கள் முழுமையாக எதிர்க்கத் தீர்மானித்திருக்கின்றோம். பூரண ஒத்திசைவு இல்லாமல் அதனை அரச வர்த்தமானியில் பிரசுரித்து எங்களுடைய அடிப்படை ஜனநாயக உரிமையை பறித்திருப்பதை நாங்கள் கண்டிப்பது மாத்திரமல்ல உடனடியாக அந்த வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறவேண்டும் என நாங்கள் எல்லோரும் அரசிடம் வலியுறுத்தியிருக்கின்றோம்.

இதனடிப்படையில் எங்கள் போராட்டத்தை ஜனாதிபதியோடும் பிரதமரோடும் கதைத்த பிற்பாடு நாட்டு மக்கள் மத்தியில் முன்னெடுத்து செல்லவதற்காக நாங்கள் எல்லோரும் தயாராகி வருகின்றோம்.

நாங்கள் கோரியிருந்த இரட்டை வாக்கு சீட்டு முறைமை முழுமையாக நிராகரிக்கப்பட்டுள்ளது. எந்த அடிப்படையும் இல்லாத இரு கட்சிகள் மாத்திரம் ஆட்சி செய்யும் வகையில் ஒரு தலைப்பட்சமான இந்தத் தேர்தல் முறைமை தொடர்பாக நாங்கள் பொதுமக்களுக்குப் பூரண தெளிவை வழங்க இருக்கிறோம்.” என்றுள்ளார்.

தாருஸ்ஸலாமில் நடைபெற்ற கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசனலி, ஜே.வி.பியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் ஸாலி, ஜனநாயக தேசிய மக்கள் காங்கிரஸின் தலைவர் நல்லையா குமரகுருபரன், ஐக்கிய சோசலிஷக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 Responses to பூரண ஒத்திசைவின்றி வர்த்தமானியில் பிரசுரித்த 20வது திருத்தத்தை மீளப்பெற வேண்டும்: ரவூப் ஹக்கீம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com