Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உலகம் பூராவும் புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் இலங்கையின் அபிவிருத்தியில் பங்களிக்கத் தயாராக இருக்கின்றார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் அனைவரும் அச்சுறுத்தலானவர்கள் என சர்வதேசத்துக்கு சித்தரித்துக் காண்பிப்பதற்கே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைக் கைப்பற்றுவதற்கு முயற்சிப்பவர்களும், அவர்களுடன் தொங்கிக்கொண்டிருப்பவர்களும் முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழர்களின் பிரச்சினைக்கு நேர்மையானதொரு தீர்வை முன்வைக்காத முன்னைய அரசாங்கத்தின் பிரதிநிதிகள், தமிழர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் குறித்து முறையிடுவதற்கு உரிமையற்றவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் நேற்று வியாழக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றும்போதே இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “தமிழ் மக்கள் கடந்த பாராளுமன்ற தேர்தல்கள் மற்றும் வடக்கு மாகாண சபைத் தேர்தல்கள் உள்ளிட்ட சகல தேர்தல்களில் வாக்களித்த மக்கள் பிரிக்கப்படாத ஒன்றிணைத்த இலங்கைக்குள் தீர்வொன்றை எதிர்பார்த்தே வாக்களித்தனர். எனினும் முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் தமிழர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு எந்தத் திட்டங்களும் முன்வைக்கப்படவில்லை. இது பற்றி முன்னைய அரசாங்கத்துடன் 18 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருந்தன. எனினும் பேச்சுக்கள் தோல்வியில் முடிந்தன. அரசாங்கப் பிரதிநிதிகள் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வை முன்வைக்க தவறிவிட்டது.

பொறுப்புவாய்ந்த அரசாங்கம் என்ற ரீதியில் அவர்கள் நடந்துகொண்டார்களா? தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு முன்வைக்காமை குறித்து வெட்கப்படுகின் றோம். இவ்வாறான நிலையில் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் முறையிடுவதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

கடந்த அரசாங்கம் உள்ளக விசாரணைகளை நடத்தத் தவறியமையே சர்வதேச விசாரணைக்கான தேவையை உருவாக்கியது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அறிக்கையை அப்போதைய பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமர்ப்பித்தபோது வெளிவிவகார அமைச்சராகவிருந்த ஜீ.எல்.பீரிஸ் பின்வரிசை ஆசனத்தில் அமர்ந்திருந்தமை குறித்து வெட்கமடைகிறேன்.

இவ்வாறு செயற்பட்டவர்கள் தற்பொழுது இனவாதத்தைப் பரப்ப முயற்சிப்பவர்களுக்கு ஆலோசகர்களாக செயற்படுவது வெட்கமாக உள்ளது. இந்த நாடு பாதிப்பதற்கு முன்னாள் வெளிவிவகார அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும்.

புலம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் பலர் நாட்டுக்குத் திரும்பிவந்து பல்வேறு முதலீடுகளைச் செய்வதற்குத் தயாராக இருக்கின்றனர். கடந்த அரசாங்கம் அவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும்போது ஒரு தமிழர்களுக்குக் கூட கடந்த அரசால் வழங்கப்படவில்லை. தொழில்சார் நிபுணத்துவம் கொண்ட அவர்களின் உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இதேவேளை, தனது நிர்வாகத்தின் கீழ் உள்ள பகுதிகளில் இராணுவப் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரேரணையொன்றை நிறைவேற்றியிருந்தார். இதனை வைத்துக்கொண்டு அவரைப் புலியென அர்த்தப்படுத்துவதற்கு முயற்சிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இலங்கையில் உள்ள மிதவாதமான கட்சி. எனினும், இதனை கைப்பற்றுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். இதில் தொங்கிக்கொண்டு சிலர் இருக்கின்றனர். பிழையா னவர்களின் கைகளில் சுதந்திரக் கட்சி சென்றுவிடக்கூடாது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுதந்திரக் கட்சி முன்கொண்டு செல்லப்பட வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to புலம்பெயர் தமிழர்கள் இலங்கையின் அபிவிருத்தியில் பங்களிக்க தயாராக இருக்கின்றார்கள்: சம்பந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com