Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஞாயிற்றுக்கிழமை தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் சிஐஏ ஆல் முன்பு பயன்படுத்தப் பட்ட இராணுவத் தளம் அருகே நடத்தப் பட்ட தற்கொலைக் கார்க் குண்டுத் தாக்குதலில் 33 பேர் கொல்லப் பட்டும் 23 பேர் காயம் அடைந்தும் உள்ளதாக ஆப்கான் போலிசார் தெரிவித்துள்ளனர்.

கொல்லப் பட்டவர்களில் 6 பாதுகாப்புக் காவலர்கள் அடங்கலாக பலர் பொதுமக்கள் என்பதுடன் இதில் 12 பேர் சிறுவர்கள் எனவும் ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

ஆனால் தமது இராணுவத் தளபதிகள் எவரும் இதில் கொல்லப் படவில்லை என அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது. இத்தாக்குதலுக்கு எந்த இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. மறுபுறம் இன்று திங்கட்கிழமை சிரியாவின் அலெப்போ மாகாணத்தின் வடகிழக்கே அல் பப் என்ற நகரில் சிரிய வான் படை மேற்கொண்ட கொத்துக் குண்டுத் தாக்குதலில் (barrel bomb) 35 பொது மக்கள் கொல்லப் பட்டதாகவும் மேலும் 50 பேர் படுகாயம் அடைந்ததாகவும் சிரிய தொண்டூழிய மருத்துவ நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் இன்று திங்கட்கிழமை முதற்கொண்டு ஈராக்கின் மேற்கு அன்பார் மாகாணத்தில் ஈரானின் ஷைட்டி போராளிகளின் உதவியுடன் ஈராக் அரசு ISIS போராளிகளுக்கு எதிராக பாரிய இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்கத் தொடங்கியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அண்மையில் ISIS கைப்பற்றியிருந்த ஈராக்கின் முக்கிய நகரங்களான ஃபல்லுஜா மற்றும் ரமாடி ஆகியவற்றை மீளக் கைப்பற்றும் நோக்குடன் இப்படை நடவடிக்கை அமையவுள்ளதாக அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகனின் மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் உறுதிப் படுத்தியுள்ளார்.

இதேவேளை இன்று ISIS வெளியிட்ட ஒலிநாடா ஒன்றில் வெள்ளிக்கிழமை அமெரிக்கக் கூட்டுப் படைகளின் விமானத் தாக்குதலில் ஆப்கானிஸ்தானின் நன்கர்ஹார் மாகாணத்தில் கொல்லப் பட்டதாக அறிவிக்கப் பட்ட ஆப்கானின் ISIS பிரிவின் முக்கிய தலைவர்களில் ஒருவனான ஹஃபீஸ் சயீட் என்பவனது குரல் பதியப் பட்டுள்ளது. இதன்மூலம் ஹஃபீஸ் சயீட் கொல்லப் பட்டதாக ஆப்கானிஸ்தானின் புலனாய்வுத் துறை வெளியிட்ட செய்தி தொடர்பிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவத்தளம் அருகே கார்க் குண்டுத் தாக்குதல்!:33 பேர் பலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com