Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாகிஸ்தான் சிறுவர் கல்விப் புரட்சியாளரும் மிக இளவயதில் சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான மலாலா யூசுஃப்சாய் தனது 18 ஆவது பிறந்த நாளை நேற்று ஞாயிற்றுக்கிழமை லெபனானில் சிரிய அகதிச் சிறுமிகளுக்காக ஓர் பள்ளியைத் திறந்து வைத்துக் கொண்டாடினார்.

மேலும் உலகத் தலைவர்கள் தமது பணத்தைத் துப்பாக்கிகளின் தோட்டாக்களுக்கு முதலீடு செய்யாமல் புத்தகங்களுக்கு முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தார்.

லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கிலுள்ள கயானி அறக்கட்டளை, மலாலா நிதியகத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள குறித்த பள்ளியில் 200 இற்கும் அதிகமான சிரிய அகதிச் சிறுமிகள் கற்க முடியும். இதில் முக்கியமாக 14 தொடக்கம் 18 வயதுக்கு இடைப்பட்ட சிறுமிகள் இணைந்து கல்வி கற்க முடியும். லெபனானில் தனது பிறந்த நாளின் போது இக்காரியத்தில் ஈடுபட்ட மலாலா உலகில் ஆயுத வன்முறைகள் காரணமாக கல்வி கற்கும் உரிமையை இழந்த சுமார் 28 மில்லியன் சிறுவர்களுக்கு சார்பாகத் தான் தொடர்ந்து செயற்படுவேன் என்றும் தெரிவித்தார்.

மேலும் கடந்த சில தசாப்தங்களில் மிக மோசமான அகதிப் பிரச்சினையாக உருவாகியுள்ள சிரிய குழப்ப நிலையின் காரணமாக வேதனையில் வாடும் பல இலட்சம் மக்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணீரைத் துடைக்க சர்வதேசம் தவறி விட்டதாகவும் மலாலா சுட்டிக் காட்டி இருந்தார். மேலும் சர்வதேசத்தின் அலட்சியம் இப்படியே தொடருமானால் சிரியாவில் கல்வி இன்றி ஒரு தலைமுறையே முற்றாக அழிந்து விடும் எனவும் அவர் குறிப்பிட்டார். சுமார் 4 மில்லியன் மக்கள் தொகையே கொண்ட லெபனான் கடந்த சில வருடங்களில் 1.2 மில்லியன் சிரிய அகதிகளை உள்வாங்கித் திணறி வருகின்றது. இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை லெபனானின் பிரதமர் டம்மாம் சலாமை பெய்ரூட்டில் உள்ள அவரது இல்லத்தில் மலாலா சந்தித்துப் பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to சிரிய அகதிச் சிறுவர்களுக்காகப் பள்ளி திறந்தார் மலாலா யூசுஃப்சாய்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com