Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட மக்கள் புரட்சியூடாக உருவாக்கப்பட்ட நல்லாட்சியை பாதுகாக்கும் நோக்கிலேயே நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியை உருவாக்கும் கட்சிகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை அலரிமாளிகையில் இடம்பெற்றது. இங்கு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாவது, “ஜனவரி 08ஆம் திகதி புரட்சியினை ஆரம்பிப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியானது ஜாதிக ஹெல உருமய, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முற்போக்கு சிந்தனையாளர் பிரிவினர், மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், திகாம்பரத்தின் தேசிய தொழிலாளர் சங்கம், இராதாகிருஷ்ணனின் மலையக மக்கள் முன்னணி ஆகிய அனைத்தும் ஒன்று சேர்ந்துதான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கியது.

அவர் பாரிய அர்ப்பணிப்பு செய்தவர். அந்த அர்ப்பணிப்புக் காரணமாகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரான அவரை நாம் இந்நாட்டின் ஜனாதிபதியாக்கினோம். எமது இலக்கு நல்லாட்சியை பாதுகாப்பதேயாகும். இந்த பயணத்தில் பல தடைகள் உருவாகமுடியும். நாம் தனித்தனி கட்சியாகத்தான் போட்டியிட விரும்பியிருந்தோம்.

அதேபோன்றே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைக் கைப்பற்றவும், எமது புரட்சியை தகர்த்தெறியும் வகையில் புரட்சியை உருவாக்கவும் எடுக்கும் முயற்சிக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியாக யானை சின்னத்தில் நாம் போட்டியிடுவோம். இதனால் யாரினது தனித்துவமும் இழக்கப்படமாட்டாது. கூட்டாக இயங்கினாலும் கட்சிகளின் தனித்துவம் பாதுகாக்கப்படும். இதற்காக தலைமைத்துவ சபையொன்று உருவாக்கப்படும். பாராளுமன்றத்தில் தனித்தனி குழுக்களாக செயற்படுவதற்கும் நாம் அவர்களுக்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளோம்.

ஜனவரி 08ஆம் திகதி நாம் முன்வைத்த எமது கொள்கைகளை மேலும் உறுதி செய்யும் வகையில் விசேட பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவை நியமிப்பதற்கு ஏற்றவாறு 2/3 பெரும்பான்மையை நாம் பெறுவோம். இதற்காகவே அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து போட்டியிட முன்வந்துள்ளன. இதற்கான கோரிக்கையை நானே முதலில் முன்வைத்தேன். ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் நான் இதனை உறுதி செய்தேன்.

நல்லாட்சியை பாதுகாப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சி என்றவகையில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியாக நாம் செயற்படவுள்ளோம். இது அரசியல் கட்சியாக செயற்பட வேண்டும். எனினும் இந்த கட்சியை பதிவு செய்ய முடியாது. பொதுத் தேர்தலுக்குப் பின்னரே இதனை பதிவு செய்ய வேண்டும். நாம் அதற்கான வேலைகளை செய்து வருகின்றோம்.

இந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்களையும் நாம் ஒன்று சேர்க்க வேண்டும். இந்த நாட்டின் ஜனநாயகத்தை வெற்றி கொள்ளச் செய்ய நவீன யுகத்துக்குள் காலடி எடுத்து வைக்கவுமே நாம் இந்த இடத்துக்கு வந்துள்ளோம்.

சின்னம் தற்காலிமானது மாத்திரமேயாகும். அதன் பின்னர் நாம் எவ்வாறு இந்த முன்னணியை செயற்படுத்துவது என்பது தொடர்பில் நாம் ஏற்கனவே ஆராய்ந்துள்ளோம். ஜனவரி 08ஆம் திகதி அடைந்த வெற்றியை மேலும் உறுதி செய்வதற்காகவே நாம் இதில் களமிறங்கியுள்ளோம்.

அனைவரும் இதற்காக எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யவும் வெள்ளை வேன்களை இல்லாமல் செய்யவும், எல்லாவற்றிற்கும் மேலதிகமாக உங்களுக்கு சிறந்த எதிர்காலம் உருவாகுவதற்காகவும் இம்முறை எமக்கு நீங்கள் ஆதரவு வழங்க வேண்டுமென நான் கேட்டுக் கொள்கிறேன்.

ராஜபக்ஷ ஆட்சியாளர்களை துடைத் தெறியுங்கள். அவர்கள் மீண்டும் நாட்டுக்கு தேவையில்லை. கலிங்க மாகனின் யுகம் போன்று அவரது காலமும் வரலாற்றுப் புத்தகத்திற்குள் உள்வாங்கப்பட வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to நல்லாட்சியைப் பாதுகாப்பதற்காகவே புதிய கூட்டணி: ரணில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com