Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சனிக்கிழமை துனிசிய அதிபர் பெஜி காயிட் எஸ்ஸெப்சி துனிசியாவில் இன்னும் 30 நாட்களுக்கு (ஒரு மாதத்துக்கு) அவசர நிலை பிரகடனம் செய்துள்ளார்.

இதற்குக் காரணமாகக் கடந்த வாரம் துனிசியாவின் பீச் ஹோட்டலில் நடத்தப் பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு இணையான இன்னொரு தாக்குதல் நடந்தால் தமது நாடு முற்றாக சீர்குலைந்து விடும் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் (ஜூன் 26) துனிசியாவின் மர்ஹபாவில் உள்ள கடற்கரையோர ஹோட்டலான ரியு இம்பெரியல் இற்குள் ISIS போராளிகள் உள்நுழைந்து திடீரென மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 30 பிரிட்டன் சுற்றுலாப் பயணிகள் உட்பட 38 பேர் கொல்லப் பட்டிருந்தனர். இதனால் கடந்த ஒரு தசாப்தத்துக்குள் பிரித்தானியர்களைக் குறி வைத்து மேற்கொள்ளப் பட்ட மிக மோசமான தீவிரவாதத் தாக்குதலாகவும் இது பதியப் பட்டது. இந்நிலையில் அங்கு நிலவி வரும் பதற்ற நிலையைப் போக்க அவசர நிலைப் பிரகடனம் செய்யப் பட்டுள்ளதுடன், இந்தப் பிரகடனமானது துனிசிய இராணுவத்துக்கும் போலிசாருக்கும் தீவிரவாதத்தை எதிர்கொள்ளவும், பொதுமக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகளை விதிக்கவும் மேலதிக அதிகாரத்தை வழங்கும் என எதிர் பார்க்கப் படுகின்றது. எனினும் இவ்வாறான நடவடிக்கைகளின் போது பொதுமக்களது சுதந்திரத்துக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளிக்குமாறும் அதிபர் எஸ்ஸெப்சி இராணுவத்துக்கும், போலிசாருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த அவசரநிலைப் பிரகடனம் குறித்து தொலைக்காட்சியில் பேட்டியளித்த அதிபர் எஸ்ஸெப்சி அதன் போது, ISIS தீவிரவாதிகளின் பெயரைக் குறிப்பிட்டும் அவர்களுடன் தற்போது துனிசியாவும் யுத்தத்தில் உள்ளது என்றும் விவரித்தார். மேலும் துனிசியா தற்போது மிகத் தீவிரமான ஆபத்தை எதிர்நோக்கி இருப்பதாகவும் தமது நாட்டில் பாதுகாப்பை நிலைநாட்ட எந்த ஒரு உசிதமான நடவடிக்கையும் எடுக்கப் படும் எனவும் அவர் தெரிவித்தார்.

0 Responses to துனிசியாவில் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக ஒரு மாதத்துக்கு அவசர நிலைப் பிரகடனம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com