Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மது விற்பனையை தடை செய்யதால், அதற்கு எதிராக மது பாவனையாளர்கள் கிளர்ந்து எழுந்து அரசாங்கத்தினை கவிழ்த்துவிடுவார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

‘நாட்டின் தலைவர் என்ற வகையில் மது மற்றும் சிகரட் விற்பினைக்கான அனுமதியை இரத்துச் செய்யத் தயார். எனது இரு கரங்களையும் உயர்த்தி முழுமையான ஆதரவை என்னால் வழங்க முடியும். எனினும் அது நடைபெறக்கூடிய காரியமல்ல. விற்பனையைத் தடை செய்ய முடியும். எனினும் குடிப்பதை நிறுத்த முடியாது. அப்படிச் செய்தால் அவர்கள் ஒன்றிணைந்து அரசையே கவிழ்ப்பது உறுதி’ என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

போதை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி ஏற்பாடு செய்திருந்த தேசிய போதைத் தடுப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்ட செயற்பாட்டு நிகழ்வு நேற்று திங்கட்கிழமை கேகாலை சென். ஜோசப் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, “சிகரட் மற்றும் மது அருந்துவோரினால் நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும். உலகில் குறிப்பாக மெக்சிகோ போன்ற நாடுகளில் மது கட்டுப்படுத்தல் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

ஹெரோயின் ஹசீஸ் மர்ஜுவான் போன்ற போதைவஸ்து வர்த்தகர்களால் உலகளவில் அரசாங்கங்களை உருவாக்குவதிலும் கவிழ்ப்பதிலும் முக்கியமானவர்களாகத் திகழ்கின்றனர். நாடுகளுக்கிடையில் போதைவஸ்து தொன் கணக்கில் பரிமாற்றப்படுகின்றது. இதன் மூலம் உலகில் போதைவஸ்து எந்தளவு முக்கியமானதொன்றாக உள்ளது என்பதை உணர முடிகிறது.

ஒரு பக்கம் உலக நாடுகள் மது ஒழிப்பு போதை தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் அதேவேளை, மறுபக்கம் இத்தகைய செயற்பாடுகளும் இடம்பெறுகின்றன. சட்டத்தினால் இதனை கட்டுப்படுத்த தண்டனைகளை வழங்க முடியும். நாம் அரசாங்கம் என்ற ரீதியில் நாம் உச்ச அளவில் அதனை மேற்கொள்கின்றோம்.

எனினும், சமூக ரீதியில் தேவையான சமூக மறுசீரமைப்பு முக்கியமாகிறது. இதனால் மது பாவனையைக் கட்டுப்படுத்துவதே எமது செயற்பாடாக வேண்டும். இதற்கு பொலிஸார், மாவட்ட, பிரதேச செயலகங்கள், அரச நிறுவனங்கள் தத்தமது நிறுவனங்களில் மதுபானம் சிகரட் பாவிப்பதை நிறுத்த வேண்டும். இதற்காக நாம் ஜனாதிபதி செயலகத்தில் விசேட பிரிவொன்றை ஏற்படுத்தியுள்ளோம். இதற்கான வழிகாட்டல்களையும் நாம் வழங்கியுள்ளோம்.

போதை ஒழிப்பு நடவடிக்கைகளில் முதன்மையானதாகவும் முன்னுதாரணமானதாகவும் இது முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்காக ஒவ்வொரு நிறுவனங்களிலும் இதற்கென ஒரு பிரிவை ஏற்படுத்தி செயற்படுத்துவது முக்கியமாகும்.

போதை ஒழிப்பு மாவட்ட ரீதியான செயற்பாடுகளில் நாம் இனங்கண்ட விடயங்களில் நாட்டில் நேரடியாகவும் மறைமுகமாகவும் போதை மதுபானங்களினால் பாதிக்கப்படுபவர்களில் வருடாந்தம் 40,000 பேர் மரணிக்கின்றனர். இத்தகைய சமூக சீர்கேடுகளை விளைவிக்கும் போதையை ஒழிக்கும் நடவடிக்கையில் பாடசாலை மாணவர்கள் முதலில் விழிப்புணர்வூட்டப்பட வேண்டும்.

மலையகத் தோட்டப்புறச் சமூகத்தினர் மதுபோதை உபயோகத்தில் அதிகரித்துக் காணப்படுகின்றனர். பெரும்பாலான குடும்பங்களில் தமது வருமானத்தில் மூன்றில் ஒரு பகுதி மதுவுக்கே செலவிடப்படுகிறது.

பாடசாலை மட்டத்திலும் மாவட்ட பிரதேச, பிரதேச அபிவிருத்தி சபை மட்டத்திலும் இதற்கான விழிப்புணர் வுகள் வழக்கப்படுவது முக்கியமாகும். அரச, தனியார் துறை நிறுவனங்களில் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் மது, சிகரட் பாவனையை நிறுத்தி சமூகத்திற்கு முன்னுதாரணமாக வழிகாட்ட முடியும்.

அப்போதுதான் போதை ஒழிப்பு வேலைத்திட்டம் வெற்றியளிக்க முடியும். சட்டத்தினால் மட்டும் இதனை மேற்கொள்ள முடியாது. பலவந்தமாகவும் இதனைச் செய்விக்க முடியாது.

தற்போது இலங்கையில் சட்டபூர்வ மது, சிகரெட் விற்பனை மூலமான வரி யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்தே கிடைக்கின்றது. இரண்டாவதாகவும், மூன்றாவதாகவும் மட்டக்களப்பு மாவட்டமும் பதிவாகிறது. இத்தகைய மாவட்டங்களில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

மதுபாவனையே பெரிதும் பாலியல் துஷ்பிரயோகம், பாரிய வன்முறை துன்புறுத்தல்களுக்கும் வறுமைக்கும் காரணமாகின்றன. இது தொடர்பிலான சமூகப்பொறுப்பு மிக முக்கியமாகிறது. சிறந்த நாடொன்றை, உலகின் முன்னுதாரணமான நாடாக இலங்கையைக் கட்டியெழுப்ப போதையிலிருந்து நாட்டை மீட்போம். அதற்காக அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.” என்றுள்ளார்.

0 Responses to மது விற்பனையைத் தடை செய்தால், அரசாங்கம் கவிழும்: ஜனாதிபதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com