Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நீண்டகாலமாக வழக்கு விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தம்மை விடுதலை செய்யக் கோரி தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் ஆறாவது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொடர்கின்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு மகஸின் சிறைச்சாலையின் 'ஜே' பிரிவில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் பிரமசகாயம் உதயகுமார், சிவசுப்பிரமணியம் தில்லராஜ், நடேஸ் குகநாதன், மு.சிவநாதன், மா.நீதிநாதன், க.வேதநாயகம், ந.தர்மராஜா, சு.ஞானசீலன், தயாபரன், செல்லத்துரை கிருபானந்தன், தி.மனோகரன், யோசப் செபஸ்சியான், சுப்பிரமணியன் கபிலன், இராசதுரை திருவருள், இரவீந்திரன் மதனி ஆகிய 15 கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

இவர்களில் செல்லத்துரை கிருபானந்தன் என்ற கைதி மறுநாள் புதன்கிழமை நீதிமன்றத்தால் விடுதலைசெய்யப்பட்டார்.

இந்நிலையில், தமது கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வொன்று கிட்டாத விரையில் போராட்டத்தை கைவிடப்போவதில்லையென்பதில் உறுதியாகவிருப்பதாக தெரிவித்து ஏனைய 14 கைதிகளும் நேற்றையதினமும் போராட்டத்தை தொடர்ந்திருந்தனர். 14பேரினதும் உடல்நிலை சோர்வடைந்திருப்பதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் சிறைச்சாலை மருத்துவமனையில் அவர்களின் உடல்நிலை குறித்த பரிசோதனைகள் இடம்பெற்றுவதாகவும் மேலும் தெரியவருகின்றது.

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் உப்புல் தெனிய தெரிவிக்கையில், “உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கைதிகள் சிலர் வழக்கு விசாரணைகளை எதிர்நோக்கியுள்ள நிலையில், அவர்கள் தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்துவது குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஏனையோர் தொடர்பிலும் விரைவான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குரிய ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன" - என்றார்.

இதேவேளை, நேற்றையதினம் மகஸின் சிறைச்சாலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இருதயநாதன் சார்ள்ஸ் நேரில் சென்றிருந்தார்.

இதன்போது கைதிகள், தமது விடுதலை தொடர்பாக உரிய பதில் கிடைக்கவேண்டும். எத்தனை காலம் இவ்வாறு விசாரணைகளின்றி மூடிய கூடங்களுக்குள் அடைபட்டு இருப்பது. நாம் செய்த குற்றங்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தால் கூட தற்போது தண்டனைக் காலத்தையே நிறைவு செய்திருப்போம். அவ்வாறான நிலையில் விசாரணைகள் இன்றி இன்றுவரையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றோம். ஆகக்குறைந்தது தமது வழக்குகள் மீதான விசாரணைகளையாவது துரிதப்படுத்தடுத்துவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருந்த இரு தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான வழங்கு விசாரணையை வவுனியா நீதிவான் நீதிமன்றம் ஊடாக நாளை திங்கட்கிழமை முன்னெடுக்கப்படுமென சட்டமா அதிபர் திணைக்களம் சம்பந்தப்பட்ட தரப்புகளுடாக அறிவித்துள்ளதையடுத்து கைதிகள் இருவரும் நேற்றுடன் உண்ணாவிரதத்தை நிறைவுக்குக் கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் ஆறாவது நாளாகவும் தொடர்கிறது!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com