Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடமராட்சிக் கிழக்கில் போராட்டமொன்று இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கடலிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் எனக் கூறி வடமராட்சி கிழக்கு பட்டப்படிப்பு மாணவர்கள் ஒன்றியத்தின் பிரதான ஏற்பாட்டிலும், வடமராட்சி அபிவிருத்தி ஒன்றியம், கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் ஆகியவற்றின் அனுசரணையிலும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

தாளையடி கடற்கரையில் புறப்பட்ட ஊர்வலம் மருதங்கேணி பிரதேச செயலகம் வரையில் சென்று அங்கு எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

கடல்நீரை நன்னீராக்கும் இந்தத் திட்டத்தால் தங்களின் கடல் அதிக உப்பாவதாகவும், இதனால் மீனவர்கள் வாழ்வாதார ரீதியில் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்து இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

'எமது பிரதேசத்தை ஒருமுறையேனும் திரும்பிப்பார்', 'வடமாகாண சபையே! ஏன் எம்மை கொல்லத் துடிக்கின்றாய்?','அரசியல்வாதிகளே தவறிழைக்காதீர்கள்', 'வடமராட்சி கிழக்கை ஒதுக்காதே', 'எமது வளங்கள் எமக்கு வேண்டும்' ஆகிய கோசங்களைப் போராட்டக்காரர்கள் எழுப்பினர்.

போராட்டத்தின் முடிவில் ஏற்பாட்டாளர்களில் சிலர், பிரதேச செயலர் கே.கனகேஸ்வரனுடன் கலந்துரையாடியதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்குவதற்கான மகஜர் கையளிக்கப்பட்டது. மேற்படி திட்டம், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் வடக்கு மாகாண சபையால் செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமராட்சிக் கிழக்கு மக்கள் போராட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com