Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமது விடுதலையை வலியுறுத்தி கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசமாக இருப்பதனால், அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் யாழ். முனியப்பர் ஆலய வளாகத்திலேயே இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்க கோரியும், மைத்திரி அரசே அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய், நல்லாட்சி வேடமிட்டு உலகை ஏமாற்றாதீர்கள், எமது உறவுகளை சிறையில் சாகடிக்காதீர்கள் என்ற வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை போராட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.

பிள்ளைகளை சாகடிப்பதற்கு முன்னர் தாய்மாரான தங்களை சாகடிக்குமாறும், பெற்றவளுக்கு தான் தெரியும் பிள்ளையின் வலி என்றும் அவர்கள் கூறியதோடு, தமது பிள்ளைகளை விடுதலை செய்ய தவறின் சாத்வீக போராட்டங்களை எதிர்வரும் காலங்களில் மேற்கொண்டு தாமும் செத்துவிடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில், வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பரம்சோதி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் அண்மையில் விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதிகள் மற்றும் கன்னியாஸ்திரிகள், மதகுருமார்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

0 Responses to தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் உண்ணாவிரதப் போராட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com