Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினை போரில் வெற்றி கொண்டுள்ள போதிலும், ஈழத்துக்கான கனவை காணும் புலிகளின் கொள்கை இன்னும் தோல்வியடைவில்லை. தனி ஈழத்துக்கான கனவினை துப்பாக்கிகள், எறிகணைகளினால் ஒருபோதும் தோற்கடிக்க முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எமது நாடு 26 ஆண்டுகளுக்கும் அதிகமாக யுத்தத்துக்கு முகம்கொடுத்து வந்திருக்கின்றது. பெரும்பாலும் யுத்த வெற்றி பற்றியே கதைத்தும் வருகின்றோம். அப்படியிருந்த போதும், யுத்தம் ஏற்படக் காரணம் என்ன என்பது பற்றி, இதுவரை ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் சரியாக ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கவில்லை.

இனங்களுக்கிடையே நல்லுறவும் நல்லிணக்கமும் ஏற்படாவிடின், அதுவே பிரச்சினையாக அமைகின்றது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, யுத்த ரீதியில் தோற்கடிக்கப்பட்டது. அவ்வாறு எமது பாதுகாப்புப் படைகளிடம் யுத்த ரீதியில் தோல்விகண்ட போதும், யுத்தக் களத்திலிருந்த புலிகள் உயிர்கள் மடிந்த போதும், ஈழத்துக்கான கனவைக் காணும் புலிகளின் கொள்கை தோல்வியடையவில்லை என்பதை நான் உணர்கின்றேன். இந்நிலைமையை, நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். புலிகளின் தனி ஈழத்துக்கான கருத்து என்பதை, துப்பாக்கிக் குண்டுகள், எறிகணைகள் மூலம் தோல்வியடையச் செய்ய முடியாத ஒன்றாகும்.

தனிநாட்டுக்கான கோரிக்கையைச் செயலிழக்கச்செய்ய வேண்டுமாயின், இந்நாட்டில் இனங்களுக்கிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தவேண்டும். அந்த வகையில், இன ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக நாம் எடுத்துவரும் முயற்சிகளைத் தடுக்கவோ, நாம் இந்த நாட்டை தாரைவார்த்துக் கொடுக்கின்றோம் என்பவர்களோ, நாட்டைப் பலவீனப்படுத்துகின்றோம் என்று கூறுபவர்களோ, மீண்டும் இந்த நாட்டில் ஒரு யுத்தம் ஏற்படாதிருக்க தாம் முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் என்ன என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்தவேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to துப்பாக்கிகளினால் தனி ஈழக் கனவை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது: ஜனாதிபதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com