Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் அண்மையில் வெடிபொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தேசிய பாதுகாப்புக்கு எந்த வகையிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை. ஆனால், அதனை பிரதானப்படுத்திக் கொண்டு நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் சிலர் திரிபுபடுத்தப்பட்ட கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர் என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பை ஒருபோதும் நிபந்தனைகளுக்கு உட்படுத்த மாட்டோம். வடக்கில் தேசிய பாதுகாப்புக்குத் தேவையான காணிகளை வைத்துக்கொண்டு ஏனையவற்றை காணி உரிமையாளர்களிடம் வழங்குவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பத்தரமுல்லையிலுள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே வடக்கு மாகாண ஆளுநர் மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, "நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என வெவ்வேறு தரப்பினரால் கருத்து வெளியிடப்பட்டு வருகின்றது. அத்துடன் பல்வேறு விதமாக செய்தி வெளியிடப்பட்டு வருகின்றது. அதனால் வடக்கு மாகாண ஆளுநர் என்ற வகையில், உண்மையை வெளிப்படுத்த வேண்டிய எனது பொறுப்பாகும்.

நல்லிணக்கம் என்ற சொல்லை நகைப்புக்குட்படுத்தவும், அது நடைமுறைச்சாத்தியமற்றது என்றும், அது அடைய முடியாத இலக்கு என்றும் சிலர் தற்போது காட்ட முயற்சிக்கின்றனர். நாட்டில் மீண்டும் தீவிரவாதம் தலைத்தூக்குவதாகக் கூறி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

முரண்பாடுகள் எவ்வளவு ஏற்பட்டாலும், இறுதியில் நல்லிணக்கமே ஏற்படும். நல்லிணக்கம் என்பது அவசியம். கருத்துக்களுக்கிடையிலான யுத்தம், ஊடகங்களுக்கிடையிலான யுத்தமே தற்போதுள்ளது. தகவல் பகிரப்படும் முறையில்தான் மக்களின் கருத்து வெளிப்படுகிறது. இந்தக் குறுகிய காலத்தில் நான் பார்த்த அளவில் வடக்கில் நூற்றுக்கு 70 வீதமான மக்கள் மிகவும் அப்பாவிகள் கஷ்டப்படுபவர்கள் மிகவும் நல்லவர்கள். ஆனால், அந்த மக்களின் கருத்து வெளியிப்படுத்தப்படுவதில்லை. மிகைப்படுத்தப்பட்ட திரிபுபடுத்துப்பட்ட கருத்து அவர்களின் கருத்தாக வெளிப்படுத்தப்படுகின்றது. இது குறித்து நாம் அவதானத்துடன் இருக்க வேண்டும்.

புத்தர் சிலை அமைப்பதில் ஊடகங்கள் பொய் பிரசாரம் நயினாதீவில் புத்தர் சிலை அமைப்பது தொடர்பாக வடக்கிலிருந்து தெற்கிலுள்ள பத்திரிகைகளைப் பார்த்தேன். புத்தரின் சிலை அமைக்கப்படுவது நிறுத்தப்படுகின்றது என்று தெற்கிலுள்ள பத்திரிகைகளில் உள்ளது. இதைப் பார்த்தவுடன் தெற்கிலுள்ள அப்பாவி மக்கள் கவலையடைவர். வடக்கிலுள்ள பத்திரிகைகளில் எவ்வாறிருந்தது? கோயிலை மறைத்து இந்தச் சிலை அமைக்கப்படுவதாக இருந்தது. இவை இரண்டும் உண்மையல்ல. இரண்டிலும் பொய்யான பிரசாரங்கள்தான் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நான் நயினாதீவுக்குச் சென்றேன். தடை என்று கூறப்படும் கதை பொய்யாகும். இதற்கு கரையோர பாதுகாப்புத் தரப்பினரிடம் அனுமதி பெற வேண்டும். அதைத்தான் யாழ். மாவட்ட அரச அதிபரும் குறிப்பிட்டிருந்தார். தடை செய்யப்படவில்லை. இப்படியிருக்கையில் அந்த அதிகாரி பற்றியும் வடக்கு பற்றியும் தவறான கருத்து கூறப்படுகின்றது.

இதேவேளை, வடக்கில் கூறப்படுவதுபோல கோவிலும் மறைக்கப்படவில்லை. நயினாதீவு விகாரைக்குள் இந்துக் கடவுள்கள் இருக்கின்றன. ஊடகங்களில் காட்டப்படுவது எல்லாம் உண்மை என்ற நிலையில் மக்கள் உள்ளனர். ஆனால், ஊடகங்களும் தவறிழைக்கும் சந்தர்ப்பங்களும் உண்டு.

தமிழ் மக்களின் அதீத நம்பிக்கையை வென்ற தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளங்குகின்றார். என்னுடன் பேசும் மக்களின் கருத்துக்களில் இது வெளிப்படுகின்றது. அதைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது அவருடையதும் அரசினதும் எம்முடையதும் பொறுப்பாகும். யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்படுள்ள நிலையில், நாட்டின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மக்கள் வாழ்க்கைக்கு ஏற்றவாறு காணிகளை வழங்க வேண்டும். “ என்றுள்ளார்.

0 Responses to வடக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை; நல்லிணக்கத்தை சீர்குலைக்க சில தரப்புக்கள் முயற்சி: ரெஜினோல்ட் குரே

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com