Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மகிந்தரின் ஆட்சியில் நிகழ்ந்தது போன்று தற்பொழுது மைத்திரியின் ஆட்சியில் நிகழ்ந்தேறும் முன்னாள் போராளிகளின் கைதுகள் தமிழீழ தாயக மக்களிடையே மீண்டும் பதற்ற சூழலைத் தோற்றுவித்துள்ளன.

அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவற்றையும் எடுக்காது கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இழுத்தடிப்பு நடவடிக்கைளில் ஈடுபடும் மைத்திரி அரசாங்கம், இவ்வாறான கைதுகளை மேற்கொள்வது ஆச்சரியத்திற்குரிய விடயம் அல்லவே.

அதேநேரத்தில் முன்னாள் போராளிகளைக் கைது செய்யும் போர்வையில் சிங்களப் புலனாய்வுத்துறையின் கையாட்களாக விளங்கும் ராம், நகுலன் போன்றோரையும் மைத்திரி அரசாங்கம் கைது செய்திருப்பது, பலரைப் பொறுத்தவரை புருவத்தை உயர்த்தும் விடயமாகவே உள்ளது.

இறுதி யுத்தம் நடைபெற்ற பொழுது வன்னிக்கு வெளியே இயங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளில் ராம், நகுலன், தயாமோகன், தேவன் போன்றவர்கள் முக்கியமானவர்கள். இவர்களில் ராம் அவர்கள் 2005ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட தளபதியாக நியமிக்கப்பட்டவர். இதேபோன்று சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியாக விளங்கிய நகுலன் அவர்கள், 2007ஆம் ஆண்டு திருகோணமலை மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். 2008ஆம் ஆண்டு தென்தமிழீழத்திற்கான கட்டளைத் தளபதியாக ராம் நியமிக்கப்பட்ட பின்னர் அம்பாறை மாவட்ட தளபதியாக நகுலன் அவர்களும், திருகோணமலை மாவட்டத் தளபதியாக தேவன் அவர்களும் நியமனம் பெற்றனர். இவர்களை விடத் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் படுவான்கரை, வாகரை ஆகிய பிரதேசங்கள் இருந்த பொழுது மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராகப் பணிபுரிந்தவர் தயாமோகன். சிங்களப் படைகளால் படுவான்கரை பிரதேசம் ஆக்கிரமிக்கப்படும் தறுவாயில் வன்னிக்கு அழைக்கப்பட்ட தயாமோகன், 2008ஆம் ஆண்டின் இறுதியில் மீண்டும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராகவே அவர் தென்தமிழீழம் சென்றிருந்தாலும், நடைமுறையில் அம் மாவட்டத்திற்கான தளபதிக்குரிய அதிகாரங்கள் அவருக்கு இருந்தன.

இவ்வாறு இறுதி யுத்தம் நடைபெற்ற காலப் பகுதியில் இவர்களை வன்னிக்கு வெளியே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை இயங்க அனுப்பியமைக்கு ஒரு முக்கியமான காரணம் இருந்தது: தென்தமிழீழத்தில் சிங்களப் படைகள் நிம்மதியாக இயங்க முடியாத அளவிற்கு அங்கு தாக்குதல்களை நிகழ்த்தி, வன்னியை முற்றுகையிட்டிருந்த படையினரின் கணிசமானோரை தென்தமிழீழத்தை நோக்கி நகர்த்துவதுதான் அது.

ஜெயசிக்குறுய் எதிர்ச்சமர் காலத்தில் ஜெயந்தன் படையணியின் முக்கிய தளபதிகளில் ஒருவராக விளங்கியவர் ராம். பிரதேசவாதம் கிளப்பி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை இருகூறாகத் துண்டாடுவதற்கு கருணா முற்பட்ட பொழுது தமிழீழ தேசியத் தலைவருக்கான தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியவர் ராம். கருணாவின் வெளியேற்றத்திற்குப் பின்னர் தளபதி ரமேஸ் அவர்களுக்கு அடுத்தபடியாக தென்தமிழீழத்தில் பணிபுரிந்த முக்கிய தளபதியாகக் கருதப்பட்டவர் ராம் அவர்கள்.

இதேபோன்று முக்கியத்துவம் மிக்க ஒருவராகவே நகுலனும் திகழ்ந்தார். பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஆனையிறவுப் பெருந்தளத்தை வெற்றிகொள்வதற்கான குடாரப்பு தரையிறக்கம், இத்தாவில் பெட்டி முற்றுகை ஆகிய நடவடிக்கைகளில் காத்திரமான பாத்திரத்தை வகித்தவர் நகுலன்.

தயாமோகனைப் பொறுத்தவரை இவர் ஒரு தளபதியாக விளங்காத பொழுதும், இவருக்கு கணிசமான சண்டைக் கள அனுபவம் இருந்தது. அதனை விட ஒரு சிறந்த பேச்சாளர் என்ற வகையிலும், இவரது நிர்வாக அனுபவத்தையும் கருத்திற் கொண்டு இவரைத் தென்தமிழீழத்தில் ஒரு முக்கியமான இடத்திலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் வைத்திருந்தனர்.

இதேபோன்ற ஒருவர் தான் தேவன் அவர்களும்.

இவ்வாறான இந்த நான்கு பேரும் தென்தமிழீழத்தின் களச் சூழலில் காத்திரமான மாற்றங்களை மேற்கொண்டு, வன்னியில் படைவலுச் சமநிலை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சாதகமாக முறையில் அமையும் வகையில் நடந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுக்கு நிறையவே இருந்தது. ஆனால் இவ்வாறான நடவடிக்கைகள் எவற்றிலுமே இந்த நான்கு பேருமே ஈடுபடவில்லை.

திருகோணமலை மாவட்டத்தில் சிங்களப் படையினர் மீது தாக்குதல் நடத்தும் பணி தேவன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தாலும், அவ்வாறான தாக்குதல்களை நிகழ்த்துவதை விடுத்து வெறுமனவே மின்மாற்றிகளைத் தகர்ப்பதிலேயே தனது அதிக நேரத்தை அவர் செலவிட்டு வந்தார்.

இத்தாக்குதல்களை இனம்தெரியாத நபர்கள் மேற்கொண்டதாக வெளிநாடுகளில் உள்ள தமிழ்த் தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்ட பொழுது, அவற்றைத் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டதாக அறிவிக்குமாறு அவ் ஊடகங்களில் பணிபுரிந்த ஊடகவியலாளர்களுக்கு தேவனும், அவரது வலது கையாக விளங்கிய தவரூபன் என்பவரும் அழுத்தம் கொடுத்தனர். இதற்கு இவர்கள் கொடுத்த விளக்கம், இத்தாக்குதல்களை தாம் செய்வது வன்னியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்திற்குத் தெரிய வேண்டும் என்பதுதான்.

இதேபோன்று தான் தயாமோகனும். 2008ஆம் ஆண்டு மாவீரர் நாளுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களப் படைகளை அதிர்ச்சியில் உறைய வைக்கக்கூடிய தாக்குதல் ஒன்றை நிகழ்த்துமாறு கட்டளை பிறப்பித்தே அவரை வன்னியை விட்டுத் தமிழீழ தேசியத் தலைவர் அனுப்பி வைத்திருந்தாலும், அவ்வாறான தாக்குதல்கள் எவற்றையுமே அவர் மேற்கொள்ளவில்லை. மாறாக இலகுவான இலக்குகளாக விளங்கிய கருணா-பிள்ளையான் குழு ஆயுததாரிகளையும், அவர்களின் ஆதரவாளர்களையும், மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் வசித்த சிங்களக் குடியேற்றவாசிகளையும் சுட்டுக் கொல்வதிலேயே தயாமோகனின் கவனம் அதிக அளவில் இருந்தது.

மறுபுறத்தில் நகுலனின் நடவடிக்கைகளை நாம் ஆராய்வோமாக இருந்தால், அவரது செயற்பாடுகள் தேவன், தயாமோகன் போன்றோரை விட மிகவும் மோசமானதாகவே இருந்தது. அம்பாறை மாவட்டத்தில், அதுவும் கஞ்சிக்குடிச்சாறு காட்டுப்புறத்தில், சிங்கள சிறப்பு அதிரடிப் படையினர் மீதும், தரைப்படையினர் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இவ்வாறான ஒவ்வொரு தாக்குதல்களிலும் இரண்டு தொடக்கம் நான்கு வரையான படையினர் கொல்லப்பட்டதாகவும் நகுலன் அவர்களால் தொடர்ச்சியாக வெளிநாடுகளில் உள்ள தமிழ்த் தேசிய ஊடகங்களுக்கு செய்திகள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் சிங்களப் படையினரின் இணையத் தளங்களோ இவ்வாறான தாக்குதல்கள் நிகழ்ந்தது பற்றிய செய்திகளைப் பெரும்பாலும் வெளியிடுவதில்லை. அவ்வாறான செய்திகள் சிங்களப் படைத்துறை இணையங்களில் வெளிவந்தாலும், அத்தாக்குதல்களில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடிகளில் சிக்கிப் படையினர் காயமடைந்ததாகவே குறிப்பிடப்படும்.

இதுபற்றி ஒரு சந்தர்ப்பத்தில் வெளிநாட்டுத் தமிழ்த் தேசிய ஊடகம் ஒன்றின் அம்பாறை மாவட்ட மறை முக செய்தியாளர் ஒருவர் கருத்து வெளியிடுகையில், நகுலனால் உரிமை கோரப்பட்ட தாக்குதல்களும், சிங்களப் படையினர் கொல்லப்பட்டமை பற்றிய செய்திகளும் போலியானவை என்று குறிப்பிட்டிருந்தார். பொதுவாக யுத்த வலயங்களில் கொல்லப்படும் படையினரை இரகசியமாக அடக்கம் செய்யும் நடைமுறை சிங்களப் படையினரால் பின்பற்றப்பட்டாலும், அரச நிர்வாகம் இயங்கிய பகுதிகளில் இவ்வாறான நடைமுறை பின்பற்றப்படவில்லை. அரச நிர்வாகம் இயங்கிய பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் கொல்லப்படும் அல்லது காயப்படும் படையினரை அந்தந்த மாவட்டங்களில் உள்ள பொது மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்வதே படையினரின் நடைமுறையாக இருந்தது. ஆனால் நகுலனால் உரிமை கோரப்பட்ட தாக்குதல்கள் பலவற்றில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட சிங்களப் படையினரின் உடலங்கள் எவையும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள எந்தவொரு பொது மருத்துவமனையையும் வந்தடைவதில்லை. இதை வைத்து நகுலனால் அறிவிக்கப்பட்ட தாக்குதல்களில் பல போலியானவை என்ற தகவலை அந்த மறை முக செய்தியாளர் உறுதி செய்திருந்தார்.

இவை தவிர இன்னுமொரு அதிர்ச்சியான நடவடிக்கையையும் நகுலன் மேற்கொண்டிருந்தார். தயாமோகனின் தலைமையில் சிங்களக் குடியேற்றவாசிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் போன்று நகுலனால் மொனராகலை, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள சிங்களக் குடியேற்றவாசிகள் மீது தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன.

இவை பற்றிய செய்திகள் வெளிநாட்டுத் தமிழ் ஊடகங்கள் வாயிலாக வன்னியை சென்றடைந்த பொழுது, நகுலனுக்கு கண்டிப்பான செய்தியொன்று தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டது: அப்பாவிச் சிங்கள மக்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்வதை உடனடியாக நிறுத்துமாறும், அதனை விடுத்து சிறப்பு அதிரடிப் படையினர் மீதும், தரைப்படையினர் மீதுமான தாக்குதல்களில் கவனத்தைச் செலுத்துமாறு தலைவர் அவர்கள் கட்டளையிட்டிருந்தார்.

இதனையடுத்து வெளிநாடு ஒன்றில் இயங்கிய தமிழ்த் தேசிய ஊடகவியலாளர் ஒருவருடன் தொடர்பு கொண்ட நகுலன், ‘தலைவர் கோபமாக இருக்கின்றார். இனிமேல் சிங்களக் குடியேற்றவாசிகள் கொல்லப்பட்டது பற்றிய செய்திகள் எனது ஆட்களிடமிருந்து வந்தால், சிங்கள ஊர்காவல் படையினர் கொல்லப்பட்டதாக உங்கள் செய்திகளில் அறிவியுங்கள்’ என்று அச் செய்தியாளரிடம் நகுலன் கேட்டுக் கொண்டார். இதேபோன்ற கோரிக்கை தயாமோகன் அவர்களாலும் விடுக்கப்பட்டது.

இவ்வாறு தேவன், தயாமோகன், நகுலன் போன்றோர் நடந்து கொண்ட பொழுது இவர்களை ராம் அவர்களே அங்கு வழிநடத்தினார்.

இதனை விட 2009ஆம் ஆண்டு வன்னியில் யுத்தம் உக்கிரமடைந்த பொழுது இன்னுமொரு குழப்பகரமான நடவடிக்கையையும் நகுலன் மேற்கொண்டார். 2009ஆம் ஆண்டு தை மாத இறுதியில் வன்னியில் உள்ள கல்மடு குளத்தை அண்டிய பகுதியில் சிங்களப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் கல்மடு குளத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. இத் தாக்குதல் நிகழ்ந்த ஒரு சில மணிநேரத்தில் வெளிநாடுகளில் இயங்கிய சில கட்டக்காலித் தமிழ் இணையத்தளங்களில் கல்மடு குளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டதாகவும், இதில் பல ஆயிரக்கணக்கான சிங்களப் படையினர் கொல்லப்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து வன்னியின் பல இடங்களைத் தமிழீழ விடுதலைப் புலிகள் மீளக் கைப்பற்றத் தொடங்கியிருப்பதாகவும் காட்டுத் தீ போன்று செய்திகள் பரவின. எனினும் இச் செய்திகள் பொய்யானவை என்பது மறு நாள் உறுதியாகியது. இதுபற்றி வன்னியில் இருந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பொழுது, இப் போலியான தகவலை வன்னி மண்ணைத் தமது புனைபெயர்களின் அடைமொழியாக்கி ஊடகவியலாளர்கள் என்ற பெயரில் பிரித்தானியாவில் இயங்கிய கட்டாக்காலி நபர்கள் சிலர் ஊடாக நகுலன் அவர்களே பரப்பினார் என்பது உறுதியாகியது. இச் செய்திகளை நகுலனிடம் இருந்து பெற்றுப் பரப்பிய இந்த நபர்கள், தற்பொழுது தலைமைச் செயலகம் என்ற பெயரில் இயங்கும் சிங்கள ஒட்டுக்குழுவில் அங்கம் வகிப்பது வேறு கதை.

இவ்வாறு இறுதி யுத்த காலத்தில் தமக்கு வழங்கப்பட்ட கடமைகளைச் செய்யாது, எதிரியின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் செயற்பட்ட இந்த நான்கு பேரில், தேவன், தயாமோகன் போன்றவர்கள் புலம்பெயர் தேசங்களில் இயங்கிய தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களிடம் பெரும் தொகையில் பணம் கறந்தனர்.

யுத்தத்தின் இறுதி நாட்களில் மட்டக்களப்பு வந்தாறுமூலைப் பல்கலைக் கழகத்தில் இயங்கிய வன்னியைச் சேர்ந்த மாணவி ஒருவர் தீக்குளித்து தனது உயிரை மாய்த்துக் கொண்ட பொழுது, அங்குள்ள ஏனைய வன்னியைச் சேர்ந்த மாணவிகளுக்குப் பணம் வழங்கப் போவதாகக் கூறி பல இலட்சம் ரூபா பணத்தை வெளிநாடுகளில் உள்ள தமிழ் மாணவர் அமைப்புக்களிடம் இருந்து தயாமோகன் கறந்தார். இந்தப் பணத்தைப் பயன்படுத்தியே யுத்தம் முடிவடைந்த ஒரு மாதத்திற்குள் இவரால் தாயகத்தை விட்டு வெளிநாட்டிற்கு வந்து சேர முடிந்தது.

இங்கு யுத்தம் முடிவடைந்த பின்னர் தயாமோகன், ராம், நகுலன் போன்றவர்கள் புரிந்த லீலைகளை நினைவுமீட்டுவது அவசியமாகின்றது.

யுத்தம் முடிவடைந்த ஒரு வாரத்தில் தமிழீழ தேசியத் தலைவரின் இருப்பை மறுதலித்து கே.பி அவர்களால் ஊடகங்களுக்கு அறிக்கைகளும், செவ்விகளும் வழங்கப்பட்டன. கே.பியின் அறிவித்தல் வெளியாகிய சில நாட்களில் பி.பி.சி தமிழோசைக்கு செவ்வி வழங்கிய தயாமோகன், தமிழீழ தேசியத் தலைவர் வீரச்சாவைத் தழுவி விட்டார் என்றும், இப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு கே.பி அவர்களே தலைமையேற்று அதனை வழிநடத்துகின்றார் என்றும் அறிவித்தார்.

மறுபுறத்தில் வெளிநாடுகளில் உள்ள தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுடன் தொடர்பு கொண்ட ராம், நகுலன் போன்றவர்களும், தேவனின் கீழ் இயங்கிய தவரூபன் என்பவரும், கே.பியைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவராக ஏற்றுக் கொள்ளுமாறு, உருத்திரகுமாரனைப் பிரதமராகக் கொண்டு கே.பியால் உருவாக்கப்படும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற அமைப்பை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவாக ஏற்குமாறும் அழுத்தம் பிரயோகித்தனர்.

இதனைத் தொடர்ந்து கே.பியைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராகப் பிரகடனம் செய்து தலைமைச் செயலகம் என்ற பெயரில் ராம் அவர்களால் கையொப்பமிடப்பட்ட அறிக்கை ஒன்று 21.07.2009 அன்று வெளியிடப்பட்டது. இவ் அறிக்கை வெளிவந்த இரண்டு வாரங்களில் மலேசியாவில் கே.பியின் கைது நாடகம் அரங்கேறியமை வாசகர்கள் அறிந்த கதை. இதில் முக்கியமான விடயம் யாதெனில், தயாமோகனுடன் கே.பி தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த பொழுதே அவரது கைது நாடகம் அரங்கேறியது என்பதுதான். அதாவது மட்டக்களப்பை விட்டு வெளியேறித் தயாமோகன் வெளிநாடு வந்திருந்திருந்தாலும், ராம், நகுலன் ஆகியோரால் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்ட கே.பியுடன் அவருக்கு நேரடித் தொடர்ந்து இருந்தது. இதனை நாம் சாதாரணமான ஒரு விடயமாகப் பார்க்க முடியாது. கே.பியைத் தலைவராக ஏற்குமாறு புலம்பெயர் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு ராம், நகுலன் போன்றவர்கள் அழுத்தம் கொடுத்த பொழுது சிங்களப் புலனாய்வுப் பிரிவினரின் கட்டுப்பாட்டின் கீழேயே அவர்கள் இருந்தார்கள் என்பது இன்று உலகறிந்த இரகசியம். அப்படிப் பார்க்கும் பொழுது, இவர்களோடு தொடர்பில் இருந்த தயாமோகனால் எவ்வாறு நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடு வர முடிந்தது என்பது ஆழமாக ஆராயப்பட வேண்டியதாகும்.

சிங்களப் புலனாய்வுப் பிரிவினர் மீது தாம் காட்டிய விசுவாசத்தின் உச்சமாக ராம், நகுலன் போன்றவர்கள் 2009ஆம் ஆண்டு மாவீரர் நாளன்று, ‘மகாவீர’ உரை என்ற சிங்களப் பெயரிலான கணினிக் கோவைகள் மூலம் மாவீரர் நாள் அறிக்கைகளை வெளியிட்டமையும், அவை மக்களிடம் எடுபடாமல் போனமையும் பழைய கதைகள்.

இவ்வாறு சிங்களப் புலனாய்வுப் பிரிவினரின் கையாட்களான ராம், நகுலன் போன்றவர்கள் தற்பொழுது மைத்திரியின் ஆட்சியில் கைது செய்யப்பட்டிருப்பது புருவத்தை உயர்த்தக் கூடிய ஒரு விடயம்தான்.

ஆனாலும் கொழும்பில் இருந்து வெளிவரும் தகவல்களின் படி, ஆட்சி மாற்றத்தின் பின்னரும் கோத்தபாய ராஜபக்சவுடன் இரகசியத் தொடர்பைப் பேணியமைக்காகவும், எதிர்காலத்தில் கோத்தபாயவின் விசுவாசிகளின் உதவியுடன் மைத்திரி அரசாங்கத்திற்கு எதிரான சதி நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபடக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாகவுமே இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.

இதுவரை காலமும் சுவிற்சர்லாந்தில் அமைதியாக இருந்த தயாமோகன், தற்பொழுது திடீரென வெளியில் வந்து வீராவேச உரைகளை ஆற்றத் தொடங்கியிருப்பதைப் பார்க்கும் பொழுது, இத் தகவல்களில் உண்மை இருக்கக்கூடும் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

அதேநேரத்தில் ராம், நகுலன் போன்ற கோத்தபாயவின் கையாட்களைக் கைது செய்யும் போர்வையில் அப்பாவிகளான முன்னாள் போராளிகளையும், தமிழ்த் தேசிய உணர்வாளர்களையும் மைத்திரி அரசாங்கம் கைது செய்வதை, தமிழ்த் தேசிய எழுச்சியை நசுக்கும் அதன் இரகசிய நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாகவே நாம் பார்க்க வேண்டும்.

நன்றி-ஈழமுரசு

0 Responses to கைதுகளும், அவற்றின் சூட்சுமங்களும் – கலாநிதி சேரமான்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com