Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் தலையீட்டைக் கோருவதன் மூலம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தவறிழைப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் அரசாங்கம் உட்பட எதிர்க்கட்சியில் எம்மைப் போன்ற சிலர் இணைந்து வடக்கு- கிழக்கு தமிழர் பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரச்சினைகளை மீண்டும் ஆரம்ப நிலைக்குக் கொண்டு செல்லும் முயற்சியை முன்னெடுக்கின்றார். அதாவது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலையீட்டை கோருவதன் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சிகளை சீர்குலைக்கின்றார்.

சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் சிங்கள மக்கள் மத்தியில் மீண்டும் சந்தேக நிலையை தோற்றுவிப்பதாக உள்ளது. ஏற்கனவே சிங்கள மக்கள் மத்தியில் அச்சம் குடிகொண்டுள்ளது. அதாவது தமிழகத்துடன் இணைத்து வடக்கு- கிழக்கு தமிழ் மக்களும் அரசியல்வாதிகளும் சிங்கள மக்களுக்குப் பாதகமான தீர்மானங்களை எடுப்பார்கள் என்ற அச்சமே அதுவாகும்.

அவ்வாறானதோர் நிலையில் சி.வி.விக்னேஸ்வரன் ஜெயலலிதா இலங்கை விடயத்தில் தலையிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். இது தீர்வை நோக்கி நகரும் பிரச்சினையை மீண்டும் ஆரம்ப நிலைக்கு கொண்டு செல்லும் முயற்சியாகும். அத்தோடு அனைத்து தரப்பினரும் இணைந்து பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அதனை திட்டமிட்டுச் சீர்குலைக்கும் செயலாகவே உள்ளது.

தமிழ் மக்களும் – சிங்கள மக்களும் இணக்கப்பாட்டுடன் செயற்பட முன்வந்துள்ள சூழ்நிலையில் சி.வி.விக்னேஸ்வரன் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றார். ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சரே தவிர ஜெயலலிதா என்பது இந்தியா அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலையீட்டைக் கோருவதன் மூலம் விக்னேஸ்வரன் தவறிழைக்கின்றார்: வாசுதேவ நாணயக்கார

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com