Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வன்னியை வாழ வைக்கும் கடப்பாடு எங்களுக்கு உண்டு. அதில், அக்கறை கொள்ள வேண்டியது எம் அனைவரதும் பொறுப்பாகும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வன்னி மக்கள் போரின் உக்கிரத்திற்கு முகம் கொடுத்தவர்கள். போரின் வடுக்களைச் சுமப்பவர்கள். எனவே, எங்கள் அன்பிற்கும் அரவணைப்பிற்கும் உரியவர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் புத்தூர் தெற்கு நவக்கிரி பகுதியில் கொடையாளர் ஒருவரால் அமைத்துக் கொடுக்கப்பட்ட 15 வீட்டுத் திட்டங்களை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வில் நேற்று வியாழக்கிழமை பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நொந்துபோன எம்மக்களைத் தாங்குவதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல பரோபகாரிகள் தயாராக இருக்கின்ற போதும், அவர்களின் பரோபகார சிந்தனைகள் தாராள மனப்பான்மைகள் ஆகியவற்றை நாம் முறையாக ஒழுங்கு செய்ய முடியாது முழுமையாகப் பயன்படுத்த முடியாது இருக்கின்றோம். இந்த நிலை மாற வேண்டும். கொடையாளர்களையும் வறுமையில் வாடும் எமது பயனாளிகளையும் ஒன்றிணைக்க நாம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிப்பதற்கு தயார் செய்யப்பட்ட நியதிச் சட்டம் நிறைவுறும் நிலையில் உள்ளது. இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டால் வெளிநாட்டில் இருந்தும் உள்நாட்டில் இருந்தும் நிதி வழங்குபவர்கள் இந்த நிதியத்தினூடாகத் தாம் விரும்பியவாறு விரும்பிய வேலைத்திட்டங்களை நிறைவேற்ற முடியும்.

ஆளுநர் குழாமொன்றே அந்நிதியத்தைப் பரிபாலிக்கும். உரிய கணக்காய்வு போன்றவை காலத்திற்குக் காலம் நடைபெறும். அரசாங்க அனுசரணையுடனேயே அதை வழிநடத்த எண்ணியுள்ளோம்.

பலர் வன்னிப் பகுதியில் ஒரு நேர உணவுக்கே வழியின்றி, இருக்க இடமின்றி, தகரக் கொட்டில்களிலும், ஓலைக் கீற்றுகளிலும்; மலசலகூட வசதிகள், குடி தண்ணீர் வசதிகள் ஆகிய எந்தவித வசதிகளும் இன்றி வாடுகின்றார்கள். சிலர் பல்வேறு பாதிப்புக்களுடன் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு, உடல் உறுப்புக்களை இழந்து, கண்பார்வையற்று தினமும் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அம் மக்களுக்கு இவ்வாறான உதவிகள் கிடைக்கப் பெறின் அவர்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நன்றியுடையவர்களாக இருப்பார்கள் என்று எண்ணுகின்றேன். அன்பான என் சகோதர சகோதரிகளே! வன்னியை வாழ வைக்குங் கடப்பாடு எங்களுக்குண்டு என்பதை மறவாதீர்கள்.

யாழ்ப்பாணக் குடாநாட்டு இளைஞர் யுவதிகள் வெளிநாடுகளுக்கு ஓடவே கண்ணுங் கருத்துமாக உள்ளார்கள். எமது மக்கள் யாவரும் வெளிநாடுகளுக்குச் செல்ல உத்தேசித்தால் நாம் ஏன் இத்தனை போராட்டங்களில் இறங்க வேண்டும்? பேசாமல் அரசாங்கம் செய்வதைச் செய்யட்டும் என்று விட்டு விடலாமே? வன்னி மக்கள் போரின் உக்கிரத்திற்கு முகங் கொடுத்தவர்கள். போர் வடுக்களைச் சுமப்பவர்கள் அவர்கள். எனவே எங்கள் அன்பிற்கும் அரவணைப்பிற்கும் உரியவர்கள் அவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். ” என்றுள்ளார்.

0 Responses to வன்னியை வாழ வைக்கும் கடப்பாடு எங்களுக்கு உண்டு: விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com