Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாணத்தில் பொருளாதார மையம் எங்கு அமைய வேண்டும் எனும் முடிவினை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுப்பார் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பொருளாதார மையத்தினை எங்கே அமைப்பது என்கிற விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எந்தவித முரண்பாடுகளும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டத்தில் வவுனியாவில் பொருளாதார மையம் அமைக்க 20 கோடி ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியது. ஆனால், இதனை ஓமந்தையிலா அல்லது தாண்டிக்குளத்திலா அமைப்பது என்பதில் முரண்பாடுகள் எழுந்தன.

இந்த நிலையில், இதனை வவுனியாவுக்கு அப்பால் மதவாச்சிக்குக் கொண்டு செல்லவும் திரை மறைவில் சில முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இது தொடர்பில் கேள்விகளை எழுப்பியிருந்தார். இதையடுத்து ஜனாதிபதியும், பிரதமரும் பேசி இது குறித்து முடிவெடுப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனிடம் வினா எழுப்பப்பட்டது.

இதற்கு அவர், "பொருளாதார மையம் எங்கே அமைய வேண்டும் என்பதையிட்டு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்தான் முடிவெடுக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி அது தொடர்பான தீர்மானத்தை அவர் எடுக்க வேண்டும். அவ்வாறான தீர்மானத்தை அவர் விரைவில் எடுப்பார் என எதிர்பார்க்கிறோம். இவ்விடயத்தில் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் எதுவும் இல்லை. அவ்வாறு இருந்தாலும் இவ்வாறான விடயங்களில் அந்த முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டியது எமது கடமை. ஆனால், இவ்விடயத்தில் இறுதி முடிவை எடுக்க வேண்டியவர் முதலமைச்சர்தான்” என்றுள்ளார்.

0 Responses to வடக்கில் பொருளாதார மையம் எங்கு அமைய வேண்டும் என்கிற முடிவை விக்னேஸ்வரன் எடுப்பார்: சம்பந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com