Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உத்தியோபூர்வ இல்லத்தில் வசிக்கவில்லை என்று ஊடகவியலாளர் இந்துனில் உச்சகொட ஆரச்சி தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரை பேட்டி காண்பதற்காக தான் சென்று வந்த அனுபவம் தொடர்பில் பேஸ்புக்கில் ஒரு குறிப்பினை நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை அவர் எழுதியுள்ளார். அதிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அந்தக் குறிப்பு வருமாறு,

“இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களதும், அமைச்சர்களதும் வீடுகள் குறித்து நாம் அதிகளவு செவிமடுத்திருக்கிறோம், கண்டிருக்கிறோம். இருப்பினும் இங்கு நாம் சொல்ல விளையும் விடயம், நமக்கு அடிக்கடி செவிமடுக்கக் கிடைக்கும் கதைகளை விடவும் வித்தியாசமானதாகும்.

இன்று (2016.06.14) மாலைப் பொழுதில் தரிந்துவும், நானும், எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் அவர்களை, வழங்கப்பட்ட நேரத்தில், பேட்டி எடுப்பதற்காக, கொழும்பில் அவர் வசிக்கும் வீட்டை தேடிச் சென்றோம். எதிர்க்கட்சி தலைவர் வசிக்கின்ற, தொடர்மாடி வீட்டு தொகுதி அமைந்திருக்கின்ற பாதையிலேயே, அவர் வசிக்கும் வீட்டுத் தொகுதியை அனுமானிக்க முடியாது, முச்சக்கர வண்டியில், நாம் சில சுற்றுக்கள் சென்றோம். பின்னர், இடையில் சந்தித்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் விசாரித்தோம்.

‘நீங்கள் சொல்லும் இலக்கத்தையுடைய வீடுகள் அந்த எல்லையில் உள்ளன. யாரின் வீட்டை தேடுகிறீர்கள்?’ என்றர்கள் அவர்கள். ‘இரா.சம்பந்தனின் வீடு’ என்றோம் நாம். ‘ஆ…. அந்தப் பகுதியில் பாருங்கள். கீழ் மாடி வீடாக இருக்கும்.’ அவர்கள் கூறிய இடத்தில் உள்ள வீட்டுத் தொகுதியொன்றுக்கு நாம் சென்றோம்.

எதிர்க்கட்சி தலைவரின் வீடு எது என்று கண்டுபிடிக்க முடியாது சுற்றும் முற்றும் பார்க்கையில், மேல் மாடியிலிருந்து கீழ் மாடியை நோக்கி வரும் ஒரு பாதுகாப்பு உத்தியோகத்தர் நம் கண்ணில் சிக்கினார். சம்பந்தன் அவர்களின் வீடு, மேல்மாடியில் உள்ளதாக அவர் மூலம் தெரிந்து கொண்டோம்.

நாம் படிகளில் ஏறி, மூன்றாம் மாடி வரை சென்று, அவரது மிகவும் எளிமையான சிறிய வீட்டினுள் நுழைந்தோம். நாம் கண்ட காட்சிகள் மூலம் உள்ளத்தில் எழுந்திருந்த அதிகளவு கேள்விகளையும் தாண்டி, முதல் கேள்வியை, வீட்டிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் கேட்டோம்: ‘வீட்டுக்கு வருவதற்கு லிஃப்ட் இல்லையா?’ வயோதிபர் ஒருவர், இவ்வாறான மாடி வீட்டுத் தொகுதியொன்றில், படிகளைப் பயன்படுத்தி மேலும் கீழும் சென்று வருவது இலகுவான காரியமல்ல என்று நமக்குத் தெரியும்.

அதற்கும் அப்பால் இலங்கை போன்ற சுந்தரமான நாடொன்றில், அரசியல் தலைவரொருவர், இப்படியான கஷ்டங்களுடன் இருப்பார் என்று நாம் இலகுவாக நினைத்துப் பார்க்கவும் முடியாது. ‘லிஃபட் உள்ளது. ஆனால், அங்கு தொலைவில் தெரியும் கட்டிடத்தில்தான் உள்ளது’ என்று புன்னகைத்துக் கொண்டு கூறினார் அவர்.

மிகவும் சிறிதாக இருந்த அந்த வீட்டில் நுழைந்ததுமே உள்ள வரவேற்புப் பகுதியில், நாம் எதிர்க்கட்சி தலைவரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். அவரும், குடும்ப உறுப்பினர்களும், இரு பணியாளர்களும் உள்ளிட்ட 6 பேருக்கும் இந்த வீட்டில் 2 அறைகளே உள்ளதாக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மூலம் நாம் அறிந்து கொண்டோம். இந்த அறைகளும்கூட, இந்த சிறிய வீட்டின் மத்தியில் அமைந்துள்ள படிகள் மூலம் ஏறிச் செல்ல வேண்டிய வகையிலேயே அமைந்துள்ளன.

நம் நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் வாழும் வீடுகள் குறித்து நாம் புதிதாக ஒன்று கூறத் தேவையில்லை. ஆனாலும், இதுவரையிலும் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் கிடைக்கப்பெற்றதாகவோ, அது குறித்து விசாரிப்பதாகவோ தெரியாத எதிர்க்கட்சி தலைவர் குறித்தும், அவர் கொழும்பு நகரில் வசிக்கும் வீடு குறித்தும், அவரது எளிமையான வாழ்வமைப்பு குறித்தும் நாம் சொல்லியே ஆக வேண்டும்.

அவ்வாறே, அரசியல் உலகில் சில நபர்கள் குறித்து கட்டமைக்கப்பட்டிருக்கின்ற உருவங்களுக்கு அப்பால் உள்ள, பெருமளவு விடயங்கள் குறித்து, கண்டும் காணாததுபோல் செயற்படுமளவுக்கு, சமூகம் கபடத்தனமான நிலைக்கும் சென்றுள்ளது. சம்பந்தனை சந்திப்பதற்கு, அந்த வீட்டுக்குச் சென்ற முதலாவது ஊடகவியலாளர்கள் நாம் அல்ல என்பதும் எமக்கு தெரியும்.” என்றுள்ளது.

0 Responses to எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உத்தியோகபூர்வ இல்லத்தில் வசிக்கவில்லை: இந்துனில் உச்சகொட ஆரச்சி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com