Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட ரீதியில் இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளின் கலந்து கொண்டுள்ள அவர், நேற்று புதன்கிழமை புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மத்தியில் உரையாற்றினார். அதன்போதே, இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மங்கள சமரவீர கூறியுள்ளதாவது, “பொறுப்புக் கூறும் நீதி விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளின் தலையீடு குறித்து ஜனாதிபதியும், பிரதமரும் வெளியிட்டுவரும் கருத்துக்கள் இறுதியானவை அல்ல. இது குறித்த வதந்திகளை நம்பவேண்டாம்.

எனக்குத் தெரிந்தவரை போர் இடம்பெற்ற காலப் பகுதியில் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் இலங்கையில் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படும் அறிக்கைகள் பல வெளியாகியுள்ளன.

ஐக்கிய நாடுகளினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூட இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டப்படவில்லை. நானும் அங்கு இடம்பெற்றது இனப்படுகொலை என்பதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆனாலும், அங்கே மிகமோசமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் சில சம்பவங்கள் போர்க் குற்றங்களாகவும் அமையலாம். அது குறித்து இன்னமும் எதுவும் தெரியாது. இதனை அறிந்து கொள்வதற்காகவே நாம் நிலைமாற்று நீதி பொறிமுறைகளை அமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறோம்.

இது சர்வதேச சமூகத்திற்குப் பயந்தோ அல்லது அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவோ மேற்கொள்ளப்படவில்லை. மாறாக ஒரு நாடு என்ற ரீதியில் கடந்த காலத்தில் இடம்பெற்றவைக்கு பொறுப்புக்கூறாது நாம் முன்னோக்கி நகரமுடியாது.

கடந்த காலத்தில் இடம்பெற்ற பல சம்பவங்கள் குறித்து உங்களுக்கும் கேள்விகள் பல இருக்கலாம். அதுபோல் எமக்கும் பலகேள்விகள் இருக்கின்றன. ஆகவே உண்மையைக் கண்டறியும் ஒரு நிலையை நாம் எட்டியிருக்கிறோம் என்றே கருதுகிறேன். இந்த நடைமுறையில் இனப்படுகொலை குறித்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுமானால் அவை குறித்தும் நாம் விசாரிக்கத் தயார்.

அண்மையில் யுத்த காலத்தில் கொத்தணிக்குண்டுகள் பாவிக்கப்பட்டதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன. இது மிகவும் பாரதூரமான ஒரு குற்றச்சாட்டு. இவை குறித்தும் நாம் விசாரணை செய்யத் தயார்.

அமைக்கப்படும் பொறுப்புக்கூறும் பொறிமுறை குறித்தும், அதில் சர்வதேச உள்ளீடுகளின் அளவுகள் குறித்தும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சிலர் சர்வதேச உள்ளீடு என்பது மிகவும் முக்கியமானது எனத் தெரிவிக்கும்போது, வேறுசிலர் அதனை அனுமதிக்கவே முடியாது என்று தெரிவித்து வருகிறார்கள்.

இதுகுறித்து ஜனாதிபதியும், பிரதமரும் தெரிவித்துவரும் கருத்துக்கள் இறுதியானவை அல்ல. இந்தப் பொறுப்புக்கூறும் பொறிமுறையின் எல்லைகள் குறித்து முறையான கலந்துரையாடலின் பின்னரேயே முடிவுசெய்யப்படும்.

இந்தப் பொறிமுறை நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதனை உறுதிசெய்ய யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட சகலதரப்பினருடனும் விரிவான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படும். சகல அரசியல் கட்சிகளுடனும், குழுக்களுடனும் இந்தக் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படும்.

ஒரு உள்ளூர் பொறிமுறை என்பது வெளிநாட்டு உள்ளீடுகளை புறந்தள்ளிவிடாது. சில இடங்களில் வெளிநாட்டு உள்ளீடுகள் தேவை என்பதில் ஏற்கனவே இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.” என்றுள்ளார்.

0 Responses to இலங்கை மீதான இனப்படுகொலைக் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கத் தயார்: மங்கள சமரவீர

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com