Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புதிய அரசியலமைப்பில் மத்திய- மாகாண அரசுகளுக்குரிய அதிகாரங்கள் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும் என்றும், தற்போதுள்ள 13வது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாகாணங்களின் முதலமைச்சர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசமைப்பு வழி நடத்தும் குழுவுக்கும், மாகாண முதலமைச்சர்களுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே முதலமைச்சர்களினால் மேற்கண்ட கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர்களின் கூட்டுக் கோரிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாவது,

”காணி அதிகார சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க தேசிய காணி ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும். அதற்குரிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

பிரச்சினைக்குரிய மற்றொரு விடயமான பொலிஸ் அதிகாரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான அதிகாரத்தை மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டும். அதற்குரியவாறு மாகாண பொலிஸ் ஆணைக்குழுக்கள் செயற்படுத்தப்பட வேண்டும்.

1987 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தினால் 13வது திருத்தச்சட்டம் உருவாக்கப்பட்டது. இதனூடாக மாகாண சபைகள் நிறுவப்பட்டன. தற்போது வரையில் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. புதிய அரசமைப்புக்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

தற்போதைய அரசியலமைப்பில் மத்திய அரசுக்கு காணப்படும் அதிகாரங்கள், மாகாண சபைக்கு காணப்படும் அதிகாரங்கள் என்று வெவ்வேறாகவும் இரண்டுக்கும் பொதுவான அதிகாரங்கள் என்றும் காணப்படுகின்றது. மத்திய அரசுக்கும், மாகாணத்திற்கும் இடையாலான அதிகார பரவாலாக்கத்தில் தெளிவற்ற தன்மைகள் காணப்படுகின்றன. புதிய அரசமைப்பில் அதிகாரப் பரவலாக்கம் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.

பொலிஸ் அதிகாரம் சந்தேகத்துக்குரியதாகவும், சர்சைக்குரியதாகவும் இருந்து கொண்டிருக்கின்றது. மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவது தொடர்பில் தவறான பார்வைகள் காணப்படுகின்றன. மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான அதிகாரத்தையே கோருகின்றோம்.

2000 ஆம் ஆண்டு பொலிஸ் ஆணைக்குழு நியதிச் சட்டத்தில் மாகாண பொலிஸ் ஆணைக்குழு தொடர்பில் கூறப்பட்டுள்ளது. மாகாண பொலிஸ் ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும்.

காணி அதிகாரங்கள் வழங்குவதால் நாடு பிளவடையும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஐக்கிய இலங்கைக்குள்ளே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தமான தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதில் அனைவரும் உறுதியாக இருக்கின்றோம்.” என்றுள்ளது.

0 Responses to புதிய அரசியலமைப்பில் மத்திய- மாகாண அதிகாரங்களை தெளிவாக வரையறுக்க முதலமைச்சர்கள் கோரிக்கை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com