Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை இராணுவத்தை தண்டிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் வாக்குறுதிகள் எதனையும் தாம் வழங்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

“எமது இலக்கு இராணுவத்தை தண்டிப்பது அல்ல. மாறாக இராணுவத்தினருக்கு தவறான உத்தரவு பிறப்பித்தவர்களை கண்டறிந்து சட்டத்தின் முன்னால் நிறுத்துவதாகும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதமளவில் கட்டமைக்கவுள்ள உள்ளக விசாரணை பொறிமுறை செயற்பட ஆரம்பித்ததும், விசாரணைகளின் தன்மை அனைவருக்கும் புலப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, வடக்கிலிருந்து இராணுவ பிரசன்னத்தை குறைக்கும் செயற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும், 2018 ஆம் ஆண்டளவில் அதனை முழுமைப்படுத்த முடியும் என்றும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சில் நேற்று புதன்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜெனீவா சென்றிருந்த அரசாங்கம், அங்கே இராணுவத்தினரை தண்டிப்பதாக வாக்குறுதி அளித்து வந்திருப்பதாக சிலர் தவறான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். அங்கு நாம் இவ்வாறான எந்தவொரு வாக்குறுதியையும் வழங்கவில்லை.

அதேநேரம், நாட்டின் கெளரவத்துக்கும் புகழுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் இராணுவ வீரர்களுக்கு தண்டனை பெற்றுத்தருவதென்பது இலங்கைக்கு புதிது அல்ல. மனம்பேரி நிகழ்வு மற்றும் கிருஷாந்தி கொலை வழக்கு தொடர்பில் குற்றம் இழைத்த இராணுவ வீரர்கள் தண்டிக்கப்பட்டமை இதற்கான சிறந்த உதாரணங்களாகும்.

இலங்கையின் இராணுவ வீரர்கள் உலகம் முழுவதும் நற்பெயருடன் விளக்குபவர்கள். பல நாடுகளின் அமைதி காக்கும் செயற்பாடுகளில் இலங்கை இராணுவத்தினர் பங்கெடுத்துள்ளனர். மீண்டும் இவர்களுக்கு இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில அதிகாரிகளின் தவறான செயற்பாடுகளுக்காக நாம் ஒட்டுமொத்த இலங்கை இராணுவத்தையும் குற்றம்சுமத்த முடியாது.

ஒருசில அதிகாரிகள் யுத்த காலத்தில் குரூர மனப்பான்மையுடன் செயற்பட்டிருந்தாலும் அதன் பின்னணியில் வெறொருவரின் உத்தரவு இல்லாமல் அவர் அதனை செயற்படுத்தியிருக்க வாய்ப்பில்லை. எனவே தவறிழைத்தவரிலும் தவறுக்கான உத்தரவு பிறப்பிதத்தவர்களை கண்டறிந்து சட்டத்தின் முன்னாள் நிறுத்துவதே முக்கியம்.” என்றுள்ளார்.

0 Responses to இராணுவத்தை தண்டிக்கவல்ல; ஆணை பிறப்பித்தோரை கண்டறியவே உள்ளக விசாரணை: மங்கள

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com