Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலுக்கு அமைய எவருக்கும் பயப்படாது மத்திய வங்கியின் செயற்பாடுகளை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் முன்னெடுக்கவிருப்பதாக மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநராக நேற்று திங்கட்கிழமை பதவியேற்ற பின்னர், வங்கி ஊழியர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அரசாங்கத்திலிருந்து சுதந்திரமாக செயற்படுவதை உறுதிப்படுத்துவதற்கான பல்வேறு மார்க்கங்கள் இருக்கின்றன. இது குறித்து தலைவர்களுடன் பேசியிருப்பதுடன், மத்திய வங்கி சுதந்திரமாக செயற்பட்டு, நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவது தொடர்பில் தனது நிலைப்பாட்டை அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய மத்திய வங்கியின் ஆளுநர், “மத்திய வங்கி இலங்கையிலுள்ள நிறுவனங்களில் மிகவும் முக்கியமானதொரு நிறுவனமாகும். இவ்வாறானதொரு நிறுவனத்தின் ஆளுநர் என்ற ரீதியில் இதன் புகழை பாதுகாக்க வேண்டியது முக்கியமான கடமையாகும். இதனை நிறைவேற்றுவதற்கு நான் என்னாலான முழு முயற்சிகளையும் எடுப்பேன். இதற்கு சகலருடைய ஒத்துழைப்பும் அவசியம்.

எனக்கு சிறுவயதாக இருக்கும்போதே பெற்றோர் வெளிநாடு சென்றுவிட்டதால் எனது கல்வியை அங்கு தொடரவேண்டி ஏற்பட்டது. விடுமுறை காலங்களில் இலங்கைக்கு வந்து சென்றதுடன், பல்கலைக்கழக கல்வியை முடித்துவிட்டு 1970களில் முதன் முதலில் மத்திய வங்கியிலேயே நான் சேவைக்கு இணைந்து கொண்டேன். அக்காலத்தில் மத்திய வங்கி மிகவும் மதிப்பு மிக்கதொரு உயரிய நிறுவனமாக இருந்தது.

பொதுநலவாய செயலகத்தில் பணியாற்றியபோதும், மத்திய வங்கியில் எனது பணிகளை ஆரம்பித்தமையை எப்பொழுதும் நான் நினைவுகூர்வேன். இது எனக்கு பெருமையைத் தருவதுடன், மீண்டும் நீண்டகாலத்தின் பின்னர் இந்நிறுவனத்தில் பணியாற்ற கிடைத்துள்ளது.

என்னை மத்திய வங்கியின் ஆளுநராக நியமித்தமை குறித்து ஜனாதிபதிக்கு நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன். எனது நியமனத்துக்கு ஆதரவளித்தமைக்காக பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோருக்கும் நன்றிகள். அவர்கள் என்மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை நிறைவேற்ற முடியும் என நம்புகிறேன்.

ஜனாதிபதியைச் சந்தித்தபோது அவர் என்னிடம் கூறிய விடயம் என்னவெனில், 'உங்களது பணியை நேர்மையாகச் செய்யவும். பணிகளை முன்னெடுக்க எவருக்கும் பயப்படத்தேவையில்லை' எனக் கூறியிருந்தார். அவருடைய இந்த பணிப்புரையை பின்பற்றுவதே எனது எதிர்பார்ப்பாகும்.

பிரதமரைச் சந்தித்தபோது, நாட்டை எங்கு கொண்டு செல்லவேண்டும் என்ற தன்னுடைய நிலைப்பாட்டைக் கூறினார். இதனை முன்னெடுப்பதாயின் மத்திய வங்கிக்கு முக்கிய பொறுப்பு உள்ளது.

பாரிய பொருளாதாரத்துக்கான சிறந்த அடிப்படையுடன், பாரிய பொருளாதார நிலைப்புத் தன்மைக்கான அடித்தளத்தை ஏற்படுத்துவதற்கு மத்திய வங்கி பல முயற்சிகளை முன்னெடுக்கவேண்டியுள்ளது. நிதி நிலைமைகளை சரிசெய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. முடியாதது என்று எதுவும் இல்லை.

என்னை விளையாட்டுத்துறையில் சிறந்தவர் எனக் கூறினார்கள். விளையாட்டு அணிக்கு நான் தலைமை தாங்கியிருந்தேன். இதிலிருந்து நான் அறிந்துகொண்ட விடயம் என்னவெனில் தலைவர் என்னதான் முயற்சிகளை எடுத்தாலும் அணியின் சகல வீரர்களின் முழுமையான ஒத்துழைப்புடனேயே வெற்றியைப் பெற முடியும். மத்திய வங்கியிலும் இதனையே தான் எதிர்பார்க்கின்றேன்.

திறமைகள் இருந்தாலும் சகலரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். நாட்டின் அபிவிருத்திக்கு நாம் பங்களிப்பு செலுத்த வேண்டும். சகலருக்கும் பொதுவான இலக்கு ஒன்று உள்ளது. இதனை நோக்கி ஒற்றுமையுடனும், ஒத்துழைப்புடனும், நிபுணத்துவத்துடனும் பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

அரசியலுக்கும், பொருளாதாரத்துக்கும் இடையிலான சமப்படுத்தல்கள் தொடர்பில் எப்பொழுதும் ஒரு கவலை இருந்துகொண்டே வருகிறது. சுதந்திரத்தின் பின்னர் நாட்டின் பொருளாதாரம் என்பது அரசியலின் ஒரு துரும்புச்சீட்டாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. நான் எந்தவொரு கட்சியையும் சுட்டிக்காட்ட விரும்பவில்லை. இதுவே பொதுவான நிகழ்வாக காணப்படுகிறது. எமது பணி அரசியல்வாதிகளை சமாதானப் படுத்துவதாகும். 'சிறந்த பொருளாதாரம் சிறந்த அரசியல்' என்பதே எனது நிலைப்பாடு.

தவறான கூட்டணிகளுடன் இணைந்து செயற்கையான ஏற்றங்களை ஏற்படுத்தாது, நாட்டின் பொருளாதாரத்துக்காக சிறந்த கட்டமைப்பொன்றை ஏற்படுத்த வேண்டியது மத்திய வங்கியின் பொறுப்பாகும். மக்கள் அரசாங்கத்தைத் ஜனநாயக ரீதியாகத் தெரிவுசெய்கின்றனர்.

எனினும், நிதிச் சட்டம் மத்திய வங்கியின் செயற்பாடு குறித்து தெளிவான வரையறைகளை வழங்குகிறது. இதற்காக அரசாங்கத்தை விமர்சிக்கத் தேவையில்லை. அரசாங்கத்திலிருந்து சுதந்திரமாக செயற்படுவதை உறுதிப்படுத்துவதற்கான பல்வேறு மார்க்கங்கள் இருக்கின்றன.” என்றுள்ளார்.

0 Responses to மத்திய வங்கியின் செயற்பாடுகள் சுதந்திரமாக முன்னெடுக்கப்படும்: இந்திரஜித் குமாரசுவாமி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com