Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதல்களின் போது இராணுவம் கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தால், அது சட்டரீதியில் தவறில்லை என்று கடத்தல் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம மீண்டும் தெரிவித்துள்ளார்.

கொத்துக் குண்டுகள் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளை அடுத்து அவர் மீண்டும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில், "2008ஆம் ஆண்டு மே 30ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட கொத்துக் குண்டுகளை தடைசெய்யும் சர்வதேச உடன்படிக்கையில் இலங்கை அப்போது கைச்சாத்திடவில்லை. குறிப்பிட்ட உடன்படிக்கை சர்வதேச அளவில் 2010 ஆகஸ்ட் மாதமே நடைமுறைக்கு வந்தது. இதன் காரணமாக குறிப்பிட்ட காலப்பகுதிக்கு முன்னர் இலங்கை கொத்துக் குண்டுகளை பயன்படுத்தியிருந்தால் அதனை சட்டவிரோதமானது எனத் தெரிவிக்கமுடியாது.

இலங்கையைத் தவிர 70 நாடுகள் அந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை. கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதை நாங்கள் எந்தத் தருணத்திலும் நியாயப்படுத்த முயலவில்லை. மாறாக இலங்கையில் உள்நாட்டு மோதல் இடம்பெற்றவேளை காணப்பட்ட சட்டங்கள் குறித்தே சுட்டிக்காட்ட முயன்றுள்ளோம்.

இலங்கை இராணுவம் தாம் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தியதை உறுதியாக நிராகரித்துள்ளது. எனினும், கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்மை தொடர்பில் புதிய ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றால், யார் அவற்றை பயன்படுத்தியது மற்றும் சர்வதே மனிதாபிமான சட்டங்களின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணற்றதாக காணப்படுகின்றதா போன்ற விசாரணைகளை விசாரணை அதிகாரிகளே மேற்கொள்ளவேண்டும்.” என்றுள்ளார்.

இலங்கை இராணுவம் கொத்துக் குண்டுகளை இறுதி மோதல்களில் பயன்படுத்தியதாக புகைப்பட ஆதாரங்களோடு வெளிநாட்டு ஊடகங்கள் சில அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தன.

அப்போது, அந்த விடயங்கள் தொடர்பில் கருத்துரைத்திருந்த மக்ஸ்வெல் பரணகம, இறுதி மோதல்களின் போது இராணுவம் கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தால், அது தவறில்லை என்று தெரிவித்திருந்தார்.

அந்தக் கருத்துக்கு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பலத்த எதிர்ப்பினை வெளியிட்டிருந்ததுடன், பண்டிதத்தனமான கருத்துக்களை மக்ஸ்வெல் பரணகம கூறுவதை நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையிலேயே, பரணகம மீண்டும் அதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

0 Responses to இராணுவம் கொத்துக் குண்டுகளை பயன்படுத்தியிருந்தால், அது தவறில்லை; பரணகம மீண்டும் தெரிவிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com