Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு பதிலாக அறிமுகப்படுத்தவுள்ள புதிய சட்டம்  மக்களை அடக்கி ஒடுக்கக் கூடிய சட்டமாக இருக்காது என்று பதில் ஊடகத்துறை அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன தெரிவித்துள்ளார்.

வெளியில் இருந்து வரும் பயங்கரவாத நெருக்கடிகளை தடுக்கும் வகையிலே புதிய சட்டம் தயாரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய சட்டமூலம் இன்னும் தயாரிக்கப்படவில்லை என்றும் அதற்கான கொள்கை திட்டமும் சட்ட கட்டமைப்புமே தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கருணாரத்ன பரணவிதாரன தெரிவித்துள்ளதாவது, “முன்னர் உள்ளக சிவில் யுத்தமாகவே பயங்கரவாதம் நீடித்தது. கடந்த 100 வருட காலத்தில் 92 யுத்தங்கள் உலகில் நடந்துள்ளன.

எமது நாட்டில் யுத்தம் முடிவடைந்துள்ளது. ஆனால் பயங்கரவாதம் வெளியில் இருந்து வரும் பிரச்சினையாக மாறியுள்ளது. எமது நாட்டிற்கும் இதனால் பாதிப்பு வரும். எமது நாட்டை மத்திய நிலையமாக பயன்படுத்தவோ இங்கு பயங்கரவாத முகவர்களை வைத்திருக்கவோ வாய்ப்புள்ளது.

தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய புதிய சட்டம் அவசியப்படுகிறது. பல நாடுகளில் இதற்கான சட்டங்கள் இருக்கின்றன. சர்வதேச சட்டங்களுடனும் எமது நாட்டுக்கு தொடர்பு இருப்பதால் அதற்கும் ஏற்றவாறு புதிய சட்டம் தயாரிக்கப்படும். சர்வதேச சட்டங்கள் தொடர்பான மேற்பார்வை அறிக்கையொன்றை வெளிவிவகார அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். நாம் அடக்குமுறை சட்டம் கொண்டு வரமாட்டோம்.

புதிய சட்டம் தொடர்பான கொள்கை மற்றும் சட்ட கட்டமைப்பை உருவாக்க சட்டம் ஒழுங்கு அமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆராயப்பட்டது. அதன் அறிக்கை பிரதமரால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இது பற்றி மேலும் ஆராய்வதற்காக அதனை தேசிய பாதுகாப்பு குறித்த பாராளுமன்ற மேற்பார்வை குழுவில் சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to பயங்கரவாதத்துக்கு எதிரான புதிய சட்டம் மக்களை அடக்கி ஒடுக்கும் சட்டமாக இருக்காது: அரசாங்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com