Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கோடிக் கணக்கில் மக்களின் பணத்தை திருடிய, மோசடியாளர்களை பாதுகாத்தவாறு மக்கள் மீது சுமையேற்றும் அரசாங்கத்தின் நடவடிக்கையை அனுமதிக்க முடியாது என்று எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும், மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவருமான அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

அமைச்சர்களுக்கும், பிரதமருக்கும் வாகனம் கொள்வனவு செய்ய ஒதுக்கியுள்ள நிதியை நிறுத்தினால் பெறுமதி சேர் வரி (VAT) தேவைப்படாது. மனசாட்சியுள்ள எவரும் இந்த வரிக்கு ஆதரவாக கைதூக்க மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பெறுமதி சேர் வரி திருத்த சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, “இந்த அரசாங்கத்திற்கு வருடத்தில் திரட்ட வேண்டிய வருமானம் குறித்தோ செலவு குறித்தோ மதிப்பிட முடியவில்லை. வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த பின் மார்ச்சில் வரி திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டது. மே மாதத்தில் மீண்டும் வரி திருத்தம் முன்வைக்கப்பட்டது. மக்களின் பணத்தை சூறையாடும் கொள்ளை கும்பலாக அரசாங்கம் மாறியுள்ளது.

பாரிய கடன் சுமையிருந்தால் அரசாங்கம் ஏன் 30 பேருக்கு பதிலாக அமைச்சர் தொகையை 48 ஆக அதிகரித்தது. மக்கள் மட்டுமா வயிற்றை கட்டிக்கொள்ள வேண்டும்? ஆட்சியாளர்கள் வயிற்றை கட்டிக்கொள்ளத் தேவையில்லையா?

அமைச்சர்களுக்கு வாகனம் கொள்வனவு செய்வதற்காக 118 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமருக்கு வாகனம் கொள்வனவு செய்வதற்காக 30 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை நிறுத்தினால் பெறுமதி சேர்  வரி தேவைப்படாது பெறுமதி சேர் வரி உயர்வினூடாக அரசாங்கம் 180 கோடி ரூபா திரட்ட எதிர்பார்க்கிறது.

சொத்துக்களை விற்று நோயாளிகளை இருதய சத்திர சிகிச்சை செய்கின்றனர். இதற்கும் வரியை அதிகரித்து மனிதாபமின்றி ஆட்சியாளர்கள் சொகுசு வாழ்வு வாழ்கின்றனர். வீண் விரயம், திருட்டு என்பவற்றை நிறுத்துவதாக அரசாங்கம் கூறியது. கடந்த ஆட்சியில் திருடியவர்களிடம் இருந்து பணத்தை அறவிடுவதாக உறுதியளிக்கப்பட்டது.” என்றுள்ளார்.

0 Responses to திருடர்களைக் காப்பாற்றுவதற்காக வரிச்சுமையை மக்கள் மேல் ஏற்றுகின்றது அரசு: அநுர குமார திசாநாயக்க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com