Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

துள்ளிய காளைகள் - அசத்திய வீரர்கள்

பதிந்தவர்: தம்பியன் 30 January 2017

2 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் துள்ளிய காளைகளை அடக்கி, வீரர்கள் அசத்தினர்.

உச்சநீதிமன்றத் தடையை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை. ஆனால், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களின் போராட்டம் காரணமாக தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது.  இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி
ஒன்றியம், கருங்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 29) காலை 9 மணி முதல்
பிற்பகல் 3.30 வரை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. கால்நடைத் துறை இணை
இயக்குநர் ராஜேந்திரன், மணப்பாறை வட்டார மருத்துவ அலுவலர் பொன்சாந்தி உள்ளிட்டோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கருங்குளம் வாடிவாசலில் முகாமிட்டு, காளைகள் மற்றும் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, சான்றளித்தனர்.

பங்கேற்க வந்திருந்த 405 காளைகளில் 397-க்கு மட்டுமே அனுமதி
அளிக்கப்பட்டது. அதுபோல சுமார் 300 வீரர்கள் (இருகட்டமாக) பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் மணப்பாறை அருகேயுள்ள மஞ்சம்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி (19) உள்பட இருவர் பலத்த காயமடைந்தனர். 35 பேருக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டன.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயலில் காதி,
கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் தலைமையில் வேலுச்சாமி அம்பலம் மஞ்சுவிரட்டைத் தொடங்கி வைத்தார். 60 காளைகள் மட்டுமே கொண்டுவரப்பட்டு அவிழ்த்து விடப்பட்டன. மற்ற மாடுகள் கட்டுமாடுகளாக ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டன. சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மாடு முட்டியதில் காயமடைந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு அருகே சேதுநாராயணபுரம் வடக்குத்
தெருவில் ஜல்லிக்கட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், மதுரை,
விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 40 காளைகள் கலந்து கொண்டன. ஜல்லிக்கட்டை ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ மு.சந்திரபிரபா முத்தையா தொடங்கி வைத்தார்.சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கி பல்வேறு பரிசுகளைப் பெற்றனர்.

0 Responses to துள்ளிய காளைகள் - அசத்திய வீரர்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com