Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதி மக்கள் முன்னெடுத்துள்ள காணி மீட்புப் போராட்டம் இரவு பகல் பாராது இன்று வியாழக்கிழமை மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.

முல்லைத்தீவில் விமானப் படையினரால் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பிலுள்ள தமது காணி களை மீள வழங்குவதற்கு மூன்று மாத கால அவகாசத்தை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் கோரிய போதிலும் அதனை ஏற்பதற்கு அக்கிராம மக்கள் மறுத்துள்ளனர்.

குறித்த காணிகளை தம்மிடம் மீள வழங்குமாறு வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்துள்ள பிலவு குடியிருப்பு கிராம மக்களை நேற்று புதன்கிழமை சந்தித்த போதே மாவட்ட அரசாங்க அதிபர் இந்த கால அவகாசத்தை கோரியிருந்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பில் விமானப் படையினரால் விடுவிக்கப்பட்ட காணிகளை கையளிப்பதற்காக நேற்று முன்தினம் திங்கட்கிழமை வருகைதருமாறு விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் கிராம மக்கள் அங்கு சென்றிருந்தனர்.

எனினும், எந்தவொரு அதிகாரியும் காணிகளை அளந்து கையளிப்பதற்கு வருகைதராத நிலையில், தமது காணிகள் மீள வழங்கப்படுவது குறித்து உறுதி மொழி வழங்கும் வரை அங்கிருந்து வெளியேறப் போவதில்லை என மக்கள் போராட்டத்தில் குதித்திருந்தனர்.

இதனையடுத்து வனவளத் திணைக்களத்தினருடன் கலந்துரையாடி காணிகளை வழங்குவது குறித்து அறிவிப்பதாக தொலைபேசி ஊடாக பிரதேச செயலாளர் வழங்கிய உறுதிமொழியை ஏற்பதற்கும் மக்கள் மறுத்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை சம்பவ இடத்திற்கு வருகைதந்த வன வளத் திணைக்கள அதிகாரிகள் குறித்த காணிகள் வன வளத் திணைக்களத்திற்கு சொந்தமானது அல்லவென்பதை உறுதிப்படுத்திய பின்னர் அவற்றை பிரதேச செயலாளரிடம் கையளிப்பதாக குறிப்பிட்டிருந்தனர்.

எனினும், அந்த உறுதிமொழியையும் ஏற்க மறுத்த பிலவுக்குடியிருப்பு மக்கள் அங்குள்ள இராணுவ முகாமிற்கு அருகில் கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அந்த மக்களை சந்தித்து, மூன்று மாதகால அவகாசத்தை கோரியுள்ளார். எனினும் அதனை ஏற்க மறுத்துள்ள பிலவுக்குடியிருப்பு மக்கள், தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

0 Responses to கேப்பாபுலவு மக்களின் காணி மீட்புப் போராட்டம் இரவு பகல் பாராது மூன்றாவது நாளாக தொடர்கிறது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com