Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி தொடர்பில் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகையை எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதி முதல் இலங்கை அனுபவிக்க முடியும் என்று வெளிவிவகாரப் பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை ஆகக்கூடியது மூன்று வருடங்களுக்கு மட்டுமே இலங்கைக்கு கிடைக்கக்கூடும் என்பதனால் இச்சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்தி அடுத்தகட்டமாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான களத்தை உருவாக்கும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து எதிர்வரும் இரண்டு வருடங்களில் பிரித்தானியா விலகிச் செல்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதனால், பிரித்தானியாவின் ஏற்றுமதி சந்தையை இலக்காகக் கொண்டு, 'கோட்டே பிரகடனம்' அடிப்படையில் வேறு வர்த்தக ஒப்பந்தங்களை முன்னெடுப்பது தொடர்பில் அரசாங்கம் ஆராயும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனடிப்படையில் பொருளியல் இராஜதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு நாடுகளை ஒன்றிணைப்பதற்காக இலங்கை அரசாங்கம் பாரிய திட்டங்களை தீட்டியிருப்பதாகவும் பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்பி பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்குவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு வெற்றியடைந்துள்ள நிலையில், அது தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை வெளிவிவகார அமைச்சில் நடத்தப்பட்டது. இதில் கருத்து தெரிவிக்கும்பொதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, "கடந்த ஆட்சியில் இழக்கப்பட்டிருந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீளப்பெறுவதற்கான பாரிய தடைக்கற்களை நாம் தாண்டி விட்டோம். ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு இலங்கைக்கு சாதகமாக அமைந்துள்ளது.

இதற்காக ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை எமக்கு கிடைத்துவிட மாட்டாது. வழக்கத்திலுள்ள நடைமுறைப்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐரோப்பியக் கவுன்ஸிலிலுள்ள அமைச்சர்கள் இதனை அங்கீகரிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து மே 15 ஆம் திகதியளவில் எம்மால் ஜி.எஸ்.பி வரிச் சலுகையை அனுபவிக்க முடியும்.

இலங்கைக்கு ஜி.எஸ்.பி வரிச்சலுகை வழங்கப்படக்கூடாது எனும் பிரேரணைக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 751 பாராளுமன்ற உறுப்பினர்களில் பிரேரணையை எதிர்த்து 436 பேரும் பிரேரணைக்கு ஆதரவாக 119 பேரும் வாக்களித்தனர். மேலும் 22 பேர் வாக்களிப்பிலிருந்து விலகியிருந்ததுடன் ஏனையோர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

இலங்கை அரசாங்கம் மீது ஜரோப்பிய ஒன்றியம் கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடாகவே இந்த வெற்றி எமக்கு கிடைத்துள்ளது. இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகள் இலங்கை அரசாங்கம் மீது எவ்வித தனிப்பட்ட ஆதங்கங்களையும் கொண்டிருக்கவில்லை. அவை தமது உள்நாட்டுப் பிணக்குகள் மற்றும் வலுவான கம்யூனிசக் கொள்கை போன்ற வெவ்வேறு காரணங்கள் காரணமாகவே தமது பாரம்பரிய வாக்தகெடுப்பு முறைப்படியே எதிர்த்தோ அல்லது வாக்கெடுப்பிலிருந்து விலகியோ இருந்தன.

சில பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்கினை வழங்குவதற்கு முன்னதாக ஜி.எஸ்.பி பிளஸ் மூலம் கிடைக்கும் இலாபத்தின் குறிப்பிட்ட சதவீதத்தை தொழிலாளிகளுக்கு வழங்குவதற்கு உடன்படுமாறு இலங்கையை நிர்ப்பந்தித்தனர். அச்சந்தர்ப்பத்தில் தனிப்பட்ட தீர்மானத்தையோ பொய் வாக்குறுதிகளையோ வழங்க நான் விரும்பாததால் அவற்றுக்கு உடன்பட மறுத்துவிட்டேன். இல்லையேல், மேலும் பல நாடுகளிடமிருந்து இலங்கைக்கு சாதகமாக வாக்குகளைத் திரட்டியிருக்க முடியும்.

மூன்றாம் உலக நாடுகளின் அடிப்படையில் தனி நபர் வருமானம் குறைவடைந்துள்ளமையைக் காரணம் காட்டியே இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை கிடைக்கப்பெற்றது. இழக்கப்பட்ட ஜி.எஸ்பி வரிச்சலுகை மீளக் கிடைத்தாலும் ஆகக்கூடியது மூன்று வருடங்களுக்கு மட்டுமே அது இலங்கைக்கு கிடைக்கும்.

நாட்டின் ஏற்றுமதி அதிகரித்து தனி நபர் வருமானம் கூடியதும் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் இலங்கைக்கு இச்சலுகையினை வழங்காது. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் எமக்கு அவசியமாகின்றது. ஜி.எஸ்.பி பெறும் பல நாடுகள் இதனை மேற்கொண்டுள்ளன. இலங்கையும் அதற்கான களத்தை அமைக்க இதுவே சரியான சந்தர்ப்பமாகும் என்பதனால் இதற்கான வேலைகளை ஆரம்பிக்குமாறு பிரசல்ஸிலுள்ள இலங்கைத் தூதுவருக்கு நான் ஆலோசனைகளை வழங்கியுள்ளேன்.” என்றுள்ளார்.

0 Responses to ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) மே 15 முதல் இலங்கைக்கு கிடைக்கும்; ஆனால், மூன்று வருடங்களுக்கு மாத்திரமே: ஹர்ஷ டி சில்வா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com