Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிராந்தியங்கள் அல்லது மாகாணங்களுக்கு பகிரப்படுகின்ற அதிகாரங்கள் இலகுவாக மீளப்பெற முடியாதவையாக இருக்க வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தலைமை அதிகாரி றொபர்ட் பி.கில்டனுக்கும், தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் மேலும் கூறியுள்ளதாவது,

“அமெரிக்கப் பிரதிநிதியுடனான சந்திப்பு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இடம்பெற்றது. தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடினோம். எமது கட்சியால் சமஷ்டி அடிப்படையிலான முன்மொழிவு கூறப்பட்டது. பாரம்பரிய வாழிடங்கள் அங்கிகரிக்கப்பட வேண்டும் போன்ற விடயங்களோடு காணி அதிகாரம் மற்றும் சட்டம் ஒழுங்குடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரம் என்பனவும் வழங்கப்படும் வகையில் புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென்கின்ற செயற்பாட்டில், எமது கட்சி நடவடிக்கை எடுத்து வருகின்றது.

வரவு - செலவுத்திட்ட விடயம் முடிவடைந்த கையோடு, அரசமைப்பு உருவாக்கும் விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு, அரசியலமைப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, மக்கள் தீர்ப்புக்குக் கொண்டுவரப்பட வேண்டும். இதில் தாமதங்கள் கூடாது. அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பணிமனையின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். வரவு - செலவுத்திட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் நிதியொதுக்கீடு செய்யப்பட்டமை வரவேற்கத்தக்கது.

இராணுவத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். இதற்கு ஏதுவாக பயங்கரவாதத் தடைச்சட்டம் இல்லாதொழிக்கப்பட வேண்டும். காணிகள் விடயத்தில், 1981ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த சட்டவிதிகளை அடிப்படையாகக் கொண்டு செயற்பட வேண்டும். இதனடிப்படையில், புதிதாகக் கொண்டு வரப்பட்ட வனபரிபாலன திணைக்களம், வனசீவராசிகள் சட்டம், தொல்பொருள் ஆய்விடங்கள் தொடர்பான சட்டம், மகாவலி அதிகார சபை தொடர்பான விடயங்கள், கரையோரப் பாதுகாப்புச் சட்டம் என்பன மீள்பரிசீலனை செய்யப்பட்டு, அண்மைக் காலங்களில் அரசாங்கத்துக்குச் சொந்தமாக்கப்பட்ட காணிகள் பழைய நிலைமைக்குக் கொண்டவரப்பட்டு, அவற்றின் மீது மாகாண அரசாங்கத்தின் செயற்பாடு அனுமதிக்கப்பட வேண்டும். இவ்வாறான பல்வேறு விடயங்கள் வலியுறுத்தப்பட்டன. இவை தொடர்பில் தங்கள் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்துமென, இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தலைமை அதிகாரி தெரிவித்தார்.” என்றுள்ளார்.

0 Responses to பகிரப்படும் அதிகாரங்கள் இலகுவாக மீளப்பெற முடியாதவாறு அமைய வேண்டும்: கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com