Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

‘ஆண்டாள் எனக்கு தமிழ்ப்பால் ஊட்டிய தாய் கவிஞர்.’ என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

ஆண்டாள் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கவிஞர் வைரமுத்து பேசிய வீடியோவொன்று நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டிருந்தார். அதிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது,

“உலகத் தமிழ் மக்களே வணக்கம்.

என் மனம் உடைக்கப்பட்டு கிடக்கிறது. எப்போதும் நெஞ்சுக்குள் கூவிக்கொண்டு இருக்கும் ஒரு குயில் கடந்த 10 நாட்களாக மூர்ச்சையற்று கிடக்கிறது. ஆண்டாள் பிறந்த மண்ணில் அந்த கட்டுரையை நான் ஆசை ஆசையாக ஓசையோடு அரங்கேற்றியது தவறா? தமிழ் வெளியில் கேட்ட முதல் பெண் விடுதலைக் குரல் ஆண்டாளின் குரல் என பேசினேன். ஏகப்பட்ட நபர்களை மேற்கோள் காட்டிய நான் 86 வயது இந்தியப் பேராசிரியர் சொன்ன ஆண்டாள் தேவதாசியாக ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்தார் என கூறியதைதான் நான் கூறினேன். தேவதாசி என்பவர் உயர்ந்த இடத்தில் இருப்பவர்.

ஆதாரத்தை காட்ட அது என் கருத்து இல்லை பேராசிரியர் நாராயணன், கேசவன் ஆகிய இருவரின் கருத்து ஆகும். மேற்கோள் காட்டி மூலத்தை எழுதியவர் உயர்ந்தவராக இருக்கும்போது மேற்கோள் காட்டிய நான் இழிந்தவர் ஆவேனா? நான் சிறுமைபடுத்தி விட்டேனா? ஆண்டாள் எனக்கும் தாய். அவள் தமிழச்சி, எனக்கு தாய்ப்பால் ஊட்டிய அங்கம்மாள். என்னை பெற்ற தாய். ஆண்டாள், தமிழ்ப்பால் ஊட்டிய நான் கற்ற தாய். என் இரண்டு தாய்களையும் ஒரு நிலையில் வைத்து பார்க்கிறேன். என்னை தமிழ் சமூகம் சந்தேகப்படலாமா, நான் இழிவு செய்வேனா? இப்படி ஆண்டாளை குற்றம் சொல்வதாக இருந்தாள் அவள் பிறந்த மண்ணில் சென்று அரங்கேற்றி இருப்பேனா? வைரமுத்து ஆண்டாளை தாசி என கூறிவிட்டான் என்று முதல் செய்தி பரவுகிறது. அதை மேலும் பரப்பியவர்கள் தாசி என்பதை திரித்து வேசி என பரப்புகிறார்கள். இப்படிப்பட்ட கூட்டத்தில் நான் தமிழ் வளர்க்க வேண்டும் என நினைத்ததை நினைத்து வெட்கப்படுகிறேன்.

சொல்லால் செயலால் எழுத்தால், ஊடகங்களால் எத்தனையோ இழிவுகளை நான் தாங்கிக் கொண்டேன். எல்லா விஷத்தையும் நான் குடித்துக் கொள்கிறேன். தமிழ் சமூகம் அமிழ்தத்தை மட்டுமே அருந்தட்டும். இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டால், ஆண்டாளையும் நீங்கள் புரிந்து கொள்வீர்கள். இந்த வைரமுத்துவையும் புரிந்து கொள்வீர்கள். ஒருவேளை யாருடைய மனதாவது புண்பட்டால் வருந்துகிறேன் எனக் கேட்டது எனது மனிதாபிமானம். என் தமிழால் யாரும் புண்பட்டு விடக் கூடாது என புண்பட்ட மனதோடு வருத்தமும் தெரிவித்து விட்டேன். செய்யாத குற்றத்திற்காக இல்லாத சொல்லுக்காக பொல்லாத பழி ஏற்று வருத்தமும் தெரிவித்து நாங்கள் விடை கொண்ட பிறகு இவர்கள் மேலும் திரிக்கிறார்கள். பரப்புகிறார்கள், மதக் கலவரத்தை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள் என்றால் தமிழ் சமுகமே நீங்கள் ஞானச் சமூகம். புரிந்து கொள்வீர்கள். நன்றி” என்றுள்ளார்.

0 Responses to ஆண்டாள் எனக்கு தமிழ்ப்பால் ஊட்டிய தாய்: கவிஞர் வைரமுத்து

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com