Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்கள், தங்களின் அரசியல் அபிலாசைகளுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கிய அரசியல் பலம் இன்று தமிழ் மக்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்படுகிறது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கிளிநொச்சி கிருஸ்ணபுரத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகள் நிராகரிக்கப்பட்ட தீர்வை கொண்டுள்ள இடைக்கால அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டு அதற்கு ஆதரவளித்து வருகின்றார்கள். இது கடந்த காலங்களில் தமிழ் மக்கள் செய்த தங்களின் உரிமைக்காக செய்த தியாகங்களை கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளது.

தமிழ் மக்கள் தங்களின் உரிமைகளுக்காக ஆயுதப் போராட்டம் மூலம் செய்த தியாகங்களுக்கு உரிய தீர்வு இடைக்கால அறிக்கையில் இல்லை இதனையே சிறந்த தீர்வு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றது. தமிழ் மக்களுக்கு அவர்களின் தியாகங்களுக்கு நிகரான அரசியல் தீர்வு அவசியம். மாறாக தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காக எந்த தியாகங்களும் செய்யாதவர்களும், வலிகளை சுமக்காதவர்களும் வலிந்து திணிக்கும் தீர்வை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.

இதன் மூலம் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கிய அரசியல் பலம் வழங்கிய மக்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்படுகிறது. உண்மையிலேயே இன்று மக்களுக்கு துரோகம் செய்கின்றவர்களாக இவர்கள்தான் காணப்படுகின்றனர், இதனை மக்கள் தற்போது நன்றாக புரிந்துகொண்டுள்ளனர்.

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று சொல்லப்படுகின்ற தரப்புக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் மக்களை ஒற்றுமையாக வாக்களியுங்கள் என கூறுகின்றவர்கள். ஆனால், அவர்கள் தாங்கள் ஒற்றுமையாக இருந்தாக வரலாறு இல்லை. இந்த உள்ளுராட்சி தேர்தலிலும் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட கடந்த 18ஆம் திகதி முதல் நாள் வரை தங்களுக்குள் அடிப்பாடு, வீதியில் இறங்கியும் சண்டை. பின்னர் 18ஆம் திகதி முதல் தேர்தல் நாளான வரும் 10ஆம் திகதி வரை தங்களுக்குள் ஒரு தற்காலிக யுத்த நிறுத்தம் போல் இருக்கின்றனர், பின்னர் மீண்டும் 11ஆம் திகதி அடிப்படத் தொடங்கி விடுவார்கள். இதுதான் யாதார்த்தம். எனவே இப்படி தொடர்ச்சியாக தங்களுக்குள் ஒற்றுமையாக செயற்பட முடியாதவர்கள் எந்த அடிப்படையில் மக்களை ஒற்றுமையாக வாக்களிமாறு கோர முடியும்?

தேர்தல்கள் மூலம் மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்காக வினைத்திறனாக உழைக்காததன் விளைவுதான் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதற்கான காரணமாக இருக்கிறது. மக்கள் பிரதிநிதிகள் அர்ப்பணிப்புடன் உழைத்தால் அவர்களின் கணிசமான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிடும்.

இவ்வாறே மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளும் காணப்படுகின்றன. வேலையில்லா பிரச்சினை தலைவிரித்தாடுகிறது அதனால் ஏற்படுகின்ற பல்வேறு பிரச்சினைகளால் எங்கள் மக்கள் நெருக்கடிக்குள் வாழ்ந்து வருகின்றனர் அவர்களின் நெருக்கடிகளை தீர்ப்பதற்குரிய செயற்திட்டங்களை செய்வதற்குரிய எந்த தூரநோக்கும் இல்லாதவர்கள்தான் இன்று மக்களின் பிரதிநிதிகளாக அதிகாரத்தில் இருக்கின்றனர். மக்கள் வழங்கிய பலம் மக்களின் அடிப்படைத்தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பயன்படுத்தப்படாத சூழ்நிலையையும் பார்க்கின்றோம்.

எனவேதான் நாம் மக்களிடம் கோருகின்றோம் மக்களை நேசிக்கின்ற, மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்ற மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டும், எங்களிடம் பிரதேச சபைகளின் அதிகாரங்கள் வருகின்ற போது நாம் அதனை வினைதிறனுள்ள சபைகளாக மாற்றுவோம், பிரதேச சபைகள் வினைத்திறனுள்ளதாக மாறுகின்ற போது பிரதேசங்களின் கணிசமான மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் கிடைத்துவிடும்.” என்றுள்ளார்.

0 Responses to தமிழ் மக்கள் வழங்கிய அரசியல் பலத்தை த.தே.கூ தவறாக பயன்படுத்துகின்றது: முருகேசு சந்திரகுமார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com