Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“பாரிய தவறு செய்தவர்களின் குடியுரிமையை இரத்து செய்வது தொடர்பான அரசியலமைப்பின் 81வது சரத்தை திருத்துவதா இல்லையா என்பதை பாராளுமன்றமே முடிவு செய்ய வேண்டும். அதற்கான அதிகாரம் பாராளுமன்றத்திற்கே இருக்கிறது.” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிணை முறி மற்றும் பாரிய மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு என்பவற்றின் அறிக்கைகள் மீதான பாராளுமன்ற ஒத்திவைப்பு விவாதத்தை நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து உரையாற்றுகையிலே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பிரேரணையை சபை முதல்வர் அமைச்ர் லக்ஷ்மன் கிரியெல்ல வழிமொழிந்தார். தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், பிணை முறி விவகாரம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பாரிய மோசடிகள் தொடர்பிலான பரிந்துரைகளின் படி பாராளுமன்றத்தில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக சுமார் 30 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

பிரதமர் தொடர்ந்து தெரிவிக்கையில், “பிணை முறி தொடர்பில் விவாதம் நடத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் நான் பாராளுமன்றத்தை கூட்டினேன். ஆனால் எனக்கு பேச விடாமல் இடையூறு செய்தனர்.

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இருப்பதால் 08ஆம் திகதி விவாதம் நடத்த திகதி அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் விவாதம் நடத்தினால் தேர்தலை ஒத்திவைக்க நேரிடும் என தேர்தல் ஆணையாளர் கூறியதால் கட்சித் தலைவர்கள் கூடி மீண்டும் ஆராய்ந்தார்கள். ஆனால் முடிவு எதுவும் இங்கு எடுக்கப்படாததோடு எனக்கும் சபாநாயகருக்கும் கூடி முடிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் படி இன்று விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கட்சித் தலைவர்களுக்கு இந்த அறிக்கைகள் தொடர்பில் விவாதிக்கும் தேவையிருந்தது.

எனக்கு பாராளுமன்றத்தை கூட்ட மாத்திரமே அதிகாரம் இருக்கிறது. எத்தனை நாள் விவாதம் நடத்துவது என கட்சித் தலைவர்கள் கூடியே முடிவு செய்ய வேண்டும். அதன் படியே இன்றும் 20, 21 ஆம் திகதிகளிலும் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவை வரவேற்கிறேன்.

இன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகமாக சமூகமளிக்கவில்லை. பிணை முறி தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாட்சி பதியப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர். உத்தரவு பெறப்பட்டுள்ளது.

பாரிய மோசடி அறிக்கை தொடர்பில் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இங்குள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக சுமார் 30 பேர் தொடர்பில் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற நடவடிக்கைக்கு மேலதிகமாக மத்திய வங்கியுடன் தொடர்புள்ள சில சட்டங்களை திருத்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது. மத்திய வங்கிக்கு புதிய சட்டம் கொண்டு வர இருக்கிறோம். இது தொடர்பில் கட்சித் தலைவர்களுடனும் ஆராயப்படும். நிதி அதிகாரம் பாராளுமன்றத்திற்கே இருக்கிறது. பாராளுமன்ற வரவு- செலவுத் திட்டத்தை ஆராயும் அலுவலகம் அமைக்க வேண்டும்.

சில சட்ட திருத்தங்களை திருத்துவது தொடர்பில் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது. அரசியல் உரிமை தொடர்பான அரசியலமைப்பின் 81வது சரத்தை திருத்துவதா இல்லையா என முடிவு செய்ய வேண்டும். பாராளுமன்றத்திற்குத் தான் இது தொடர்பான அதிகாரம் இருக்கிறது. கோப் குழுவின் அறிக்கை தொடர்பில் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து சட்டமா அதிபரிடம் வினவியதற்கமைய அவர் அறிக்கை வழங்கியுள்ளார்.அதனை சபாநாயகருக்கு கையளிக்கிறேன்.” என்றுள்ளார்.

0 Responses to குடியுரிமை இரத்துச் சட்டம் தொடர்பில் பாராளுமன்றமே தீர்மானிக்கும்: ரணில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com