Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“அடுத்த மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியத்தில் அக்கறை கொண்ட தமிழ்க் கட்சிகள், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஒரே அணியாக இணைந்து களமிறங்க வேண்டும். தனிப்பட்ட காரணிகளுக்காக பிரிந்து நிற்பது தமிழரின் ஒற்றுமையையே சீரழித்து விடும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் தமிழ் ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான எமது அறவழி போராட்டமானது இன்னும் ஓயாது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனினும் கடந்த காலங்களை விடவும் தற்போதைய காலப்பகுதியானது மிக முக்கியமானதாக கருதப்பட வேண்டியுள்ளது.

ஆயுதப் போராட்டம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் ஒற்றுமையும், வாக்குரிமையுமே தமிழருக்கு எஞ்சியிருக்கும் ஆயுதங்களாகும். ஆகவே இந்த விடயத்தில் தமிழர் பிரதிநிதிகள் என்ற வகையில் பிளவுபடாது, பிரிந்து நிற்காது தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தமிழ்த் தேசியம் மீது அக்கறை கொண்ட தமிழ்க்கட்சிகள் ஓரணியில் பயணிக்க வேண்டும்.

மாறாக பல அணிகளாக பிரிந்து தேர்தலில் போட்டியிடுவதால் அது தமிழ் மக்களின் வாக்கு வங்கியை கூறுபோட்டு விடும் என்பதுடன், தமிழர்களின் ஒற்றுமையையும் சிதைத்து விடும். அதுமட்டுமல்ல தென்னிலங்கை கட்சிகள் தமிழர் தாயகத்தில் ஆழமாக காலூன்றுவதற்கும் அது வழிவகுத்து விடும்.

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் நாம் நல்ல படிப்பினையை கற்றுள்ளோம். வழமைக்கு மாறாக பிரதான கட்சிகள் தமது ஆதிக்கத்தை வடக்கு கிழக்கில் பாதிக்கும் நிலைமை உருவாகியுள்ளது. வடக்கில் தமிழ் தலைமை ஒன்று உருவாகும் போதிலும் அவை பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றுடன் சேர்ந்து பயணிக்க வேண்டிய நிலைமையும் உருவாகும். தமிழ் மக்களை ஆளும் கட்சிகள் சுயமாக செயற்பட முடியாது போகும். ஆகவே இந்த விடயத்தில் தமிழ் கட்சிகளும் தாராள மனதுடன் பேச்சுகளுக்கு வந்திருந்தன. ஆகவே தேர்தல் நடைபெற்ற பின்னர் இவ்வாறு செயற்படுவதைவிட, தேர்தலுக்கு முன்னரே கரம்கோர்த்து களமிறங்கினால் அது பயனுள்ளதாக அமையும்.

தமிழ் மக்களிடையே கட்சிகளிடையே ஒற்றுமையில்லை என்ற தகவலை தெற்குக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் வழங்கி விடக்கூடாது. அவ்வாறு வழங்கினால் அது தீர்வுக்கான முயற்சியிலும் தாக்கம் செலுத்தக்கூடும். அத்துடன், தமிழர் ஒருவர்தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக தென்னிலங்கை கட்சிகள் நிறுத்தும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க முடியாது. நம்மிலிருந்து ஒருவரே வரவேண்டும், ஆளவேண்டும் அதுவே தமிழ் மக்களை பாதுகாக்கும்.” என்றுள்ளார்.

0 Responses to மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒரே அணியாக போட்டியிட வேண்டும்: செல்வம் அடைக்கலநாதன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com