Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மத்தள விமான நிலையத்தை இந்தியாவிடம் வழங்குவது தேசிய பாதுகாப்புக்கும், நாட்டின் பொருளாதாரத்துக்கும் பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) எச்சரித்துள்ளது.

மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்கும் அரசாங்கத்தின் முயற்சியை பாராளுமன்றத்தின் ஊடாகத் தடுப்பதற்கு தம்மாலான முயற்சிகள் எடுக்கப்படும் என்று ஜே.வி.பியின் ஊடகச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.

விஜித ஹேரத் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையிடமிருந்து மத்தள விமான நிலையத்தைப் பெற்றுக்கொள்ளும் இந்தியா அங்கு விமானப் பயிற்சி நிலையமொன்றையும், விமான நிலையத்துக்கு அருகில் தகவல் தொழில்நுட்ப பூங்கா ஒன்றையும் அமைப்பதற்கான திட்டங்களை வகுத்துள்ளது. இது தேசிய பாதுகாப்புக்கும் நாட்டின் பொருளாதாரத்துக்கும் அச்சுறுத்தலாக அமையும்.

இந்தியாவுக்கு மத்தள விமான நிலையத்தை வழங்குவதாயின் சிவில் சிமான சேவைகள் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். இதற்கு பாராளுமன்றத்தில் 113 பேருடைய ஆதரவு அவசியம். நாட்டின் பொதுச் சொத்துக்களை விற்கும் வரிசையில் மத்தள விமான நிலையம் இந்தியாவுக்கு விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதற்கு பாராளுமன்றத்தில் முயற்சி எடுக்கப்படும் என்றும் கூறினார். முதலீட்டு அபிவிருத்தித் திட்டங்களை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசாங்கம் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே முக்கியமான பல சொத்துக்கள் வெ ளிநாடுகளுக்கு வழங்கப்படுகின்றன.

அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு வழங்கப்பட்ட நிலையில், மத்தள விமானநிலையத்தை தற்பொழுது இந்தியாவுக்கு வழங்க அரசாங்கம் முயற்சிக்கிறது.

இலங்கையின் இறைமையை மீறி வான்வழியாக நாட்டுக்குள் நுழைந்து விமானங்கள் மூலம் இந்தியா பருப்பு வீசிய வரலாறுகள் இருக்கும் நிலையில், இந்தியாவுக்கு மீண்டும் விமான நிலையத்தை வழங்குவது குறித்து சிந்திக்கவேண்டியிருக்கின்றது.

ஒரு பக்கத்தில் இந்தியா தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தமக்குப் பயனளிக்கும் வகையில் திட்டங்களை மாற்றுவதற்கு முயற்சிக்கும் அதேநேரம், மறுபக்கத்தில் சீனா தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பொருளாதார வலயத்தை அமைக்கிறது.” என்றுள்ளார்.

0 Responses to மத்தள விமான நிலையத்தை இந்தியாவிடம் கையளிப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது: ஜே.வி.பி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com