Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதில் எமக்கும் உடன்பாடு உண்டு. ஆனால், அதன் மூலம் மாத்திரம் ஜனநாயகம் மலரப்போவதில்லை.
மாறாக தமிழ் மக்களுக்கு சுயநிர்ணயத்துடன் கூடிய நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். அதன் மூலமே அனைத்து மக்களும் ஐக்கியத்துடன் வாழும் ஜனநாயகம் மலரும்.
இடதுசாரி முன்னணியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண இவ்வாறு தெரிவித்தார். நேற்றுமுன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது விக்கிரமபாகு கருணாரட்ன இதனைத் தெரிவித்தார்.

இதுதொடர்பில் மேலும் அவர் கூறியவை வருமாறு:

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன் சேகாவிற்கும், மஹிந்த ராஜ பக்ஷவிற்கும் தமிழ் மக்கள் மீது திடீர் அக்கறையும் அன்பும் ஏற்பட்டுள்ளன. அந்த அக்கறையும் அன்பும் தேர்தலை நோக்காக கொண்டதேயன்றி உண்மையானதல்ல. ஜனாதிபதித் தேர்தலை அறிவித்ததும் அரசு அவசர அவசரமாக முகாம்களில் உள்ள மக்களை மீள்குடியமர்த்துகிறது. அம்மக்களை சுதந்திரமாக நடமாடுவதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது எனவும் கூறுகிறது.

இடைத்தங்கல் முகாம்களுக்குள் புலி உறுப்பினர்கள் இருக்கின்றனர் எனவும், வன்னிப் பகுதியில் பெருந்தொகையான மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதால் முகாம்களில் உள்ள மக்களை மீள்குடியமர்த்த முடியாது எனவும், அப்பகுதியில் முழுமையாக மிதிவெடிகளை அகற்றி பாதுகாப்பை உறுதிப்படுத்தியதன் பின்னரே அம்மக்களை அவர்களுடைய சொந்த இடங்களில் மீள்குடியமர்த்துவோம் எனவும் அரசு முன்னர் கூறியது. ஆனால், தற்பொழுது அம்மக்கள் சுதந்திரமாக நடமாட அனுமதி வழங்கப்படுகிறது எனவும் ஜனவரி மாதத்திற்குள் அனைத்து முகாம் மக்களும் அவர்களுடைய சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படுவர் எனவும் அரசு கூறியிருப்பது அதன் அரசியல் சுய இலாபத்தை தெட்டத் தெளிவாக காட்டுகிறது.

அதேபோன்று ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கும் தமிழ் மக்கள் மீது திடீர் கரிசனை ஏற்பட்டுள்ளது. முகாம்களில் உள்ள மக்கள் பெரும் அவதியுறுகின்றனர் எனவும் அவர்கள் தொடர்பில் அரசு உரிய நடவடிக்கை எடுக்காமையானது மிகவும் கவலையளிக்கிறது என அவர் கூறியிருக்கிறார். எனவே, இவர்களின் திடீர் கரிசனையின் காரணத்தை மக்கள் புந்துகொள்ள வேண்டும். தென்னிலங்கையில் 1988, 1989 காலப் பகுதிகளில் பெருந்தொகையான இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள்.
அந்தச் சந்தர்ப்பத்தில் கண்ணீர் வடித்து அதற்கெதிராக போராட்டத்தை நடத்திய மஹிந்த ராஜபக்ஷ, இன்று காணாமல் போனோர் தொடர்பிலும் உரிய நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாமல் இருக்கின்றார்.

இவ்வாறு சிங்கள இளைஞர்களுக்கு ஒரு முகம், தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு ஒரு முகம் காட்டியவர்கள் தமிழ் மக்கள் மீது திடீர் கரிசனை காட்டுகிறார்கள். ஆனால், நாம் அப்படியல்லர். அன்று சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டபோதும் அதற்கெதிராக போராடினோம். அதேபோன்றுதான் தமிழ் இளைஞர்கள் யுவதிகள் கொல்லப்பட்டதற்கு எதிராகவும் போராடி வருகின்றோம். தமிழர்களாயிருந்தாலும் சிங்களவர்களாகவிருந்தாலும் அவர்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது அதற்கெதிராக நாம் குரல்கொடுத்து போராட்டங்களை நடத்துவோம் என்றார்.

0 Responses to தமிழ் மக்களுக்கு சுயநிர்ணயத்துடன் கூடிய நிரந்தர அரசியல் தீர்வு வழங்க வேண்டும்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com