Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எமது மக்களின் விடுதலைக்காக தங்கள் உயிர்களை ஆகுதியாக்கிய ஆயிரமாயிரம் ஆன்மாக்களின் கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுக்க தமிழ் மக்கள் ஒருமித்த பலத்தினை வெளிப்படுத்த வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா புதுக்குளத்தில் நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசின் கையாட்களாகச் செயற்படும் சில அமைச்சர்கள் தமிழ் மக்களுக்கு ஏதாவது உதவி செய்வதைப் போல் எமது மக்களின் ஏழ்மை நிலையைப் பயன்படுத்தி எம்மக்களை விலைபேசுகின்றார்கள். எந்தத் தமிழ் வாக்குகளாவது ஆளும் கட்சியின் வெற்றிலைச் சின்னத்திற்கு வீழுமாக இருந்தால் அந்த வாக்கு வன்னியில் சிங்களப் படை மேற்கொண்ட பாரிய இன அழிப்புப் போர் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று தெரிவித்துவருகின்ற சிங்கள அரசாங்கத்தின் கருத்தினை நீங்களும் ஏற்றுக்கொண்டதாக அர்த்தப்பட்டுவிடும்.

தற்செயலாக வன்னி தேர்தல்தொகுதியில் இருந்து வெற்றிலைச் சின்னத்தில் இருந்து இரண்டு அல்லது மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டால் வன்னியில் அரசாங்கம் செயற்பட்ட விதம் சரியானது என்றும் தம்மை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்றும் சிங்கள அரசு சர்வதேசத்தின் குரல்களை அடக்கிவிடுவதற்கான சாத்தியப்பாடுகளை அவை தோற்றுவித்துவிடும்.

தமிழ் மக்கள் ஒருபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை உடைக்க அல்லது அதனை சிதைப்பதற்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நடவடிக்கைகளுக்கு துணை போகக் கூடாது. வன்னியில் புதைக்கப்பட்ட 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை, சிறைகளில் வாடிக்கொண்டிருக்கும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறவுகளை எல்லாம் மறக்க முடியாது.

தமிழ் மக்களின் விடுதலைக்காக தங்கள் உயிர்களை ஆகுதியாக்கிய ஆயிரக்கணக்கான ஆன்மாக்களின் கனவுகளை சிதைக்காமல் நாங்கள் தொடர்ந்தும் பயணிக்கவேண்டும்.

தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் தமிழ் மக்களை பலத்தினை சர்வதேசத்தின் மத்தியில் மீண்டும் நிலைநிறுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டும்.

நாங்கள் இழந்துவிட்ட எமது மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்பவற்றை நிலைநாட்ட ஒன்று சேர்ந்து செயற்படுவோம்.

என்று தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பினை உடைப்பதற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. எங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. அற்ப சொற்ப ஆசைகளுக்காக நாங்கள் பாராளுமன்றத்திற்குச் செல்லவில்லை.

உண்மையில் நாங்கள் இவ்வாறான ஆசைகளுக்கு உட்பட்டிருந்தால் நாங்கள் தலைவர் திரு இரா.சம்பந்தன் அவர்கள் உட்பட்டோர் 10ற்கும் அதிகமான அமைச்சுக்களைப் பெற்றுக்கொண்டிருக்க முடியும். ஆனால் எங்கள் நோக்கம் வேறு எங்கள் இலட்சியம் வேறு எனவே எங்கள் நியாயமான அரசியல் பலத்தினை சிதைக்க முடியாது. என்றும் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.

0 Responses to வன்னியில் தமிழ் மக்கள் விடுதலைக்காக வீழ்ந்தோரை நினைவில் நிறுத்தி முடிவுகளை எடுக்கவேண்டும்: செல்வம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com