இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரில் சிறிலங்கப் படையினர் இழைத்த போர்க் குற்றங்கள் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்க மனித உரிமை நிபுணர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்க ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் எடுத்துள்ள முடிவை வரவேற்றுள்ள பேராசிரியர் பிரான்சிஸ் பாய்ல், சிறிலங்காவிற்கு எதிராக பன்னாட்டுக் குற்றத் தீர்ப்பாயம் அமைக்கும் நேரம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார்."இலங்கையில் நடந்ததை விட பெரிய அளவில் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நாடுகளில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து சிறப்பு நிபுணர்கள் குழுவை அமைக்காத ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன், சிறிலங்காவிற்கு எதிராக அவ்வாறு ஒன்றை அமைப்பது தேவையற்றது" என்று அதிபர் ராஜபக்ச கூறியிருப்பது அடிப்படையற்ற பேச்சு என்று கூறியுள்ள பேராசிரியர் பிரான்சிஸ் பாய்ல், காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து விசாரிக்க கோல்ட்ஸ்டோன் தலைமையிலான குழுவை ஐ.நா. அமைத்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலையில் பன்னாட்டுச் சட்டத் துறையில் பேராசிரியராக இருக்கும் பிரான்சிஸ் பாய்ல், இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்க அரசு இழைத்த போர்க் குற்றங்களை விசாரிக்கும் வேளை வந்துவிட்டது என்றும், சிறிலங்க அரசுக்கு எதிராக பன்னாட்டு குற்றத் தீர்ப்பாயம் (International Criminal Tribunal for Sri Lanka - ICTSL) அமைக்குமாறு தாங்கள் வாழும் நாடுகளில் உள்ள அரசுகளை வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
"ஐ.நா.விற்கு எதிராக சிறிலங்க அரசு கூறும் குற்றச்சாற்று அடிப்படையற்றது, அது அந்நாட்டு அரசி்ற்கும் தெரியும். காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தியத் தாக்குதலைத் தொடர்ந்து அங்கு பாதிப்பிற்குள்ளான 15 இலட்சம் மக்களின் நிலை குறித்து ஆராய கோல்ட்ஸ்டோன் விசாரணைக் குழுவை அனுப்பி வைத்தது ஐ.நா. கோல்ட்ஸ்டோன் குழு நடத்திய விசாரணையில் இஸ்ரேல் போர்க் குற்றம் செய்துள்ளதும், மானுடத்திற்கு எதிரான குற்றமிழைத்துள்ளதும் - அதாவது இனப் படுகொலை செய்துள்ளதும் - உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" என்று தமிழ்நெட் இணையத்திற்கு அனுப்பியுள்ள குறிப்பில் பேராசிரியர் பாய்ல் விளக்கியுள்ளார்.
"பாலஸ்தீனத்திற்கு செய்ய வேண்டியதை மிகச் சரியாக செய்து முடித்துள்ளது ஐ.நா. மனித உரிமைகள் பேரவை. ஆனால், தமிழர்களுக்கு எதிரான இழைக்கப்பட்ட அநீதிகளை எதிர்த்து அப்படிப்பட்ட ஒரு நடவடிக்கையை எடுக்க ஐ.நா. மனித உரிமைப் பேரவை முயன்றபோது, மேற்குலகிற்கு எதிரான உணர்வைத் தூண்டி திசை திருப்பிவிட்டது சிறிலங்க அரசு.
தமிழர்களுக்கு எதிரான படுகொலை நடந்துமுடிந்த ஒராண்டுக் காலம் ஆகிவிட்ட நிலையில் இப்போதுதான் அது தொடர்பான சரியான நடவடிக்கையை ஐ.நா. துவக்கியுள்ளது" என்று கூறியுள்ள பிரான்சிஸ் பாய்ல், இஸ்ரேலிற்கு எதிராக பன்னாட்டு குற்றத் தீர்ப்பாயம் அமைப்பதற்கான திட்டத்தை ஐ.நா. பொது அவைக்கு நான் முன்மொழிந்துள்ளேன்.
இதேபோன்தொரு பன்னாட்டு குற்றத் தீர்ப்பாயத்தை அமைக்குமாறு ஐ.நா.வை தமிழர்கள் வலியுறுத்த வேண்டும். அப்படிப்பட்ட ஒரு தீர்ப்பாயத்தை அமைப்பதற்கான அதிகாரம் ஐ.நா. பொது அவைக்கு உள்ளது. ஐ.நா. சாசனத்தின் பிரிவு 22 அதற்கான அதிகாரத்தை பொது அவைக்கு அளித்துள்ளது. இதனை எந்த வல்லரசும் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்துவிட முடியாது" என்று கூறியுள்ளார்.



0 Responses to சிறிலங்காவிற்கு எதிராக பன்னாட்டு குற்றத் தீர்ப்பாயம்: பேராசிரியர் பாய்ல் கோரிக்கை