அரசியல் புலத்தில் அனுபவமுடைய தமிழ் அரசியல்வாதிகள் எவரையும் புறந்தள்ளிவிட முடியாதவாறான அமைப்பொன்றை உடனடி யாக உருவாக்க வேண்டியது காலத்தின் உடனடித் தேவையாகும். இந்த அமைப்பில் தமிழ் அரசியல்வாதிகள் மட்டும் அங்கம் பெறுதல் என்ற வரையறை தேவையற்றது.
தமிழ்ப்புலத்தின் புத்திஜீவிகள், சிந்தனையாளர்கள், வியூகம் அமைக்கும் விவேகிகள் என அனைவரும் இடம்பெறவேண்டும். இந்த அமைப்பு எவரையும் விமர்சிக்க வேண்டியதில்லை. இத்தகையதொரு அமைப்பு உருவாகுவது சாத்தியமாகுமா? என்று யாரேனும் கேட்கலாம்.
இந்தக் கேள்வி எங்கள் இனத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிடுமே தவிர வேறு எதனையும் தரமாட்டாது. ஆகையால் ஒன்று பட்ட தமிழர் அமைப்பு சாத்தியப்பட்டே ஆகவேண்டும். தேவையானால் நெகிழ்வான வரையறைகளை வகுத்துக் கொள்ளலாம்.
குறிப்பாக தமிழ் அரசியல் கட்சிகள் தத்தம் பெயரில் இயங்கிக் கொண்டிருக்கும் அதே வேளை ஏற்கனவே குறிப்பிட்ட ‘ஒன்றிணைந்த தமிழர் அமைப்பில் ’அனைவரும் இடம்பெறுதல். இந்த அமைப்பு தமிழர்களின் உரிமைகளை தெளிவாக வரையறை செய்து கொண்டு அதனை அடைவதற்காகப் பாடுபடவேண்டும். தமிழர் உரிமை என்ற விடயத்திலேயே எங்களிடம் தெளிவானதும் அறுதியானதுமான முடிபுகள் இல்லை.
ஒருகட்சி சொல்கிறது சுயநிர்ணய உரிமை என்று. இன்னொரு கட்சி சொல்கிறது தாயகம் அதுவே எங்கள் தேசியம் என்கிறது. ஐயா! முதலில் நீங்கள் தெளிவுபடுங்கள். உங்களிடம் தமிழர்களுக்கான உரிமை எந்த வடிவில் இருக்க வேண்டும் என்று முடிபெடுங்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் நின்று இழுத்தால் நிலைமை என்னவாவது! வாருங்கள் சேர்ந்து வடம்பிடிப்போம்.
ஒன்று பட மறுத்தால் தமிழர் எதிர்காலம் பூச்சியமே. ஒருபுறத்தில் வேடன். மறுபுறத்தில் நாகம் இரண்டிற்கும் நடுவே ஆபத்தில் சிக்கிய அழகிய தமிழ்மானைக் காப்பாற்ற வாருங்கள். ஒன்று சேருங்கள்.



0 Responses to ஒருபுறம் வேடன்; மறுபுறம் நாகம் இரண்டிற்கும் நடுவே அழகிய தமிழ் மான்: வலம்புரி