அகதி அந்தஸ்து வழங்கப்படாத சிறிலங்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகளைத் தடுத்துவைப்பதற்காக மேற்கு அவுஸ்ரேலியாவிலுள்ள கேட்டின் விமான தளத்தின் (Curtain Air Base) தடுப்பு முகாமை மீண்டும் திறப்பதற்கு அவுஸ்ரேலிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.மேற்கு அவுஸ்ரேலியாவில் டேர்பிக்கு தென்கிழக்காக 40 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள, முன்னொரு காலத்தில் தடுப்பு முகாமாகப் பயன்படுத்தப்பட்ட கேட்டின் விமான தளத்தில் 60 தனி ஆண்கள் உடனடியாக தடுத்து வைக்கப்படவுள்ளனர் என அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் இவான்ஸ் அவர்களை மேற்கோள்காட்டி அவுஸ்ரேலியாவின் அசோசியேற்றட் பிறஸ் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா மற்றும் ஆப்கான் அகதிகளுக்குப் புகலிடம் வழங்குவதை இடைநிறுத்துவதற்கு அவுஸ்ரேலிய அரசாங்கம் தீர்மானித்ததை அடுத்தே புதிய தடுப்பு முகாம் ஒன்றைத் திறப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் ஊடகவியலாளர்களுக்குத் தெரிவித்தார்.
'ஆரம்பத்தில் இது அந்தத் தேவைக்காகவே பயன்படுத்தப்பட்டது. பின்னர் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் அனைவரையும் தடுத்துவைக்கக்கூடிய வகையில் நாம் இந்த தடுப்பு முகாமில் வசதிகளை ஏற்படுத்தவுள்ளோம். நாம் இந்த புகலிடம் கோருவோரை வைத்திருப்பதற்குப் பொருத்தமான பாதுகாப்பான இடத்தைத் தெரிவு செய்யவேண்டியுள்ளது' இவ்வாறு இவான்ஸ் தெரிவித்ததாக அவுஸ்ரேலிய அசோசியேற்றட் பிறஸ் குறிப்பிட்டுள்ளது.
செப்ரெம்பர் 1999 இல் தடுப்பு முகாமாக நிறுவப்பட்ட கேட்டின் விமான தளம் 2002 செப்ரெம்பரில் கைவிடப்பட்டது.
நாடுகளின் நிலமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகக் கூறி, சிறிலங்காவிலிருந்து வந்து புகலிடம் கோரும் விண்ணப்பங்களை 3 மாதங்களுக்கும் ஆப்கானிலிருந்து புகலிடம் கோரிவரும் விண்ணப்பங்களை 6 மாதங்களுக்கும் இடைநிறுத்துவதாக ஏப்ரல் 8 ஆம் திகதி அவுஸ்ரேலிய அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து அது மனிதாபிமான அமைப்புக்களின் கடுமையான கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
கேட்டின் தடுப்பு முகாமில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டவுடனேயே கிறிஸ்மஸ் தீவிலிருந்து முதலாவது தொகுதி அகதிகள் இடமாற்றப்படுவர் எள அமைச்சர் கூறியுள்ளார்.
சில வாரங்களினுள் திறக்கப்படவுள்ள கேட்டின் தடுப்பு முகாமில் 200-300 அகதிகளைத் தங்கவைக்க முடியும் என அவுஸ்ரேலிய அரசாங்கம் எதிர்பார்க்கிறது.



0 Responses to புகலிடம்கோரி வருவோரை தடுத்துவைப்பதற்கு இராணு முகாமை பயன்படுத்தவுள்ளது அவுஸ்ரேலியா