Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இயற்கையின் சீற்றம், மப்பு மந்தாரமான வானிலை, கதிரவனின் கவலை தோய்ந்த முக மறைப்பு. இதே காலநிலை 2009ஆம் ஆண்டு 16,17,18-ம் திகதிகளில் இருந்தது. அன்று வன்னியில் தமிழ் மக்களின் உயிர்கள் அவலமாகப் பறிக்கப்பட்டன.

மிகவும் கொடூரமான முறையில் இந்த நாடு நடந்து கொண்டது. எக்காலத்திலும் மன்னிக்க முடியாத கொடுமை அரங்கேறும் உண்மை கண்டும் உலக நாடுகள் மெளனமாய் நின்றன. இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன் என எல்லா நாடுகளும் தமிழர்களின் வதைக்கு ஆசி வழங்க, பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட நோர்வே எதுவும் தெரி யாததுபோல் இருந்து கொண்டது.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தன்னைச் சந்திக்க வில்லை என்பதற்காக ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷி வன்னி யுத்தத்தை ஆதரித்தார். போராட்டக் காலத்திலும், யுத்தம் நடந்த போதும் அடிக்கடி இலங்கைக்கு வந்து சென்ற அகாஷி இப்போது ஓய்வெடுக்கின்றார். இதிலிருந்து அவரின் இலங்கைக்கான வருகை எதற்கான என்பதை ஊகிக்க முடியும்.

யுத்தத்தை நிறுத்துங்கள், தமிழ் மக்களை காப்பாற்றுங்கள், இனப்பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வை முன்நிறுத்துங்கள் என வெளிப்படையாகக் கூறிய நாடுகளின் உள்நோக்கம் அறியா அப்பாவி ஈழத் தமிழர்கள் அழிந்ததைத் தவிர வேறு எதுவும் இல்லை. எல்லாம் தோல்வி. எல்லாம் ஏமாற்றம். வெறுங்கை, இதுதான் விதி.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு, இரா.சம்பந்தருடன் முக்கிய அமைச்சர் பேச்சு, அரசியல் அமைப்பில் மாற்றம் இவையாவுமே மீண்டும் ஒரு தடவை தமிழ் மக்களை ஏமாற்றும் நாடகம். இந்த ஏமாற்று நாடகத்தை நம்பும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிதாபத்திற் குரியவர்களே. பரவாயில்லை, ஆண்டாண்டு காலமாக இந்த பிரபஞ்சம் இயங்குகின்றது. இனமும் மொழியும் இல்லாத மனித இனம் வாழ்ந்தது தொடக்கம் இனத்தால், மொழியால் அழிவு யுத்தம் நடக்கும் வரையான வரலாறுகள் மட்டுமே நாம் அறிந்தவை.

நாளை என்ன நடக்கும் என்பதே தெரியாத அப்பாவிகளாக வாழும் மனித இனம் இயற்கையின் சீற்றத்தையும் அதன் யுத்தத்தையும் எதிர்கொள்ள வேண்டிய காலம் நெருங்கிவிட்டது. அதன் அடையாளமும் அறிகுறியுமாக வன்னி யுத்தத்தில் இறந்த தமிழ் மக்களின் ஆத்ம ஈடேற்றத்தின் ஓராண்டு நினைவில் மீண்டும் அதே காலநிலை. கதிரவன் மறைவு. ! இறைவா நீதியறியா மானிடத்திற்கு தண்டனை கொடுக்க நீ முனைந்து விட்டாய். இனி உன்னை தடுப்பது யாராலும் முடியாது. எல்லாம் உன் செயல்.

0 Responses to இயற்கையின் சீற்றம் இறைவன் நடத்தும் யுத்தம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com