Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யுத்தம் முடிவடைந்து விட்டது ஆனால் இலங்கையின் முன்னாள் யுத்த வலயமான வடக்கில் துப்பாக்கிகளுடன் ஆட்கள் தொடர்ந்து இருக்கின்றனர். மிகவும் குறைந்தளவிலான அடிப்படைச் சேவைகள் மற்றும் சிறிய தொகையிலான கடன்வசதிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், மீள் எழுச்சி என்பது மிகவும் மெத்தனமான போக்கிலேயே காணப்படுகிறது என்று ரொய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் அரசியல் தீர்வுகாணுமாறு வெளிமட்டத்திலிருந்து விடுக்கப்படும் அழைப்புகளை அதிகளவுக்கு புறக்கணித்த தன்மையே தென்படுகிறது. வடக்கின் வசந்தம் மூலம் பொருளாதார மீட்சியினூடாக இன ரீதியான பிளவுகளை நீக்க முடியுமென அரசாங்கம் கூறியிருந்த போதிலும் அரசியல் தீர்விற்கான அழைப்புகள் அலட்சியப்படுத்தப்பட்டவையாகவே அதிகளவுக்குக் காணப்படுகின்றன.

தற்போதைய நிலைமை குறித்து நான் திருப்தியடைந்துள்ளேன். ஆனால், சுகாதார வசதிகள், குடிநீர், புகலிடம் போன்ற அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதனால் நாங்கள் நெருக்கடிகளைக் கடந்து செல்லவேண்டிய நிலைமை காணப்படுகிறது என்று மைக்கேல் ஜோர்ஜ் (வயது 36) என்ற விவசாயி கூறியுள்ளார்.

தனது நெற் செய்கைக்காக அவர் 1 இலட்சம் ரூபாவைக் கடனாகப் பெற்றுள்ளார். வடக்கின் வசந்தத்திற்கு முக்கியமான விடயமாக மத்திய வங்கியானது வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்ற பிரதான நகரங்களில் புதிய வங்கிக் கிளைகளைத் திறப்பதற்கு அனுமதியளித்துள்ளது.

கடன் வசதியை மக்களுக்கு அதிகரிக்க வேண்டிய தேவையுள்ளது. அதிகளவு வைப்பு மட்டம் இருக்கின்ற நிலையில் கடன் பெறுவோர் தொகை குறைவாகவே உள்ளது என்று மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் கே.ஜி.டி.டி.தீரசிங்க ராய்ட்டருக்குத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் பல வங்கிக் கிளைகளைத் திறப்பதற்கான விஜயத்தின் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஒரு விடயம் அங்கு மாற்றமடையாமல் உள்ளது. சீருடை அணிந்தவர்கள் துப்பாக்கிகளுடன் வீதிகளை ஆட்சி செய்கின்றனர். எனது மகன்மார் கிளிநொச்சியில் இருப்பதை நான் விரும்பவில்லையென என்.நவரட்ணம் (வயது 53) என்ற விவசாயி கூறியுள்ளார்.

முன்னர் எமக்குப் புலிகளின் பிரச்சினைகள் இருந்தன. இப்போது எமக்கு இராணுவப் பிரச்சினைகள் உள்ளன. எம்மிடம் எதுமில்லை. எமது வீடு, சொத்துகள் எல்லாம் அழிந்துவிட்டன என்று அவர் கூறினார்.

அவரின் மகன்மாரில் ஒருவர் தற்போதும் இராணுவத்தின் தடுப்புக் காவலில் உள்ளார். இராணுவத்தின் தடுப்புக் காவலில் உள்ள அநேகமானோர் தொழிற் பயிற்சி மற்றும் புனர்வாழ்வைப் பெற்றுவருகின்றனர். வீடுகளுக்குத் திரும்புவதற்கு இந்தப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஆனால், பலருக்கு வீடுகள் இல்லை.

இங்கு எமக்கு எந்த வசதிகள் இல்லை என்று 43 வயதுடைய தாயான ராஜேஸ்வரி என்பவர் கூறினார். அவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது ஷெல் தாக்குதலினால் அவரது வலது கால் இல்லாமல் போய்விட்டது. தனது குடும்பத்தைச் சேர்ந்த சகலருமே காயமடைந்திருந்ததாக அவர் தெரிவித்தார். எமது சொத்துகள் எரிக்கப்பட்டுவிட்டன. எமது வீடு அழிந்துவிட்டது.

நாம் இப்போது குடிசைக்குள் இருக்கின்றோம் என்று அப்பெண் கூறினார். எமக்கு உணவோ, பணமோ தேவையில்லை. ஆனால், மாடுகள், ஆடுகள் அல்லது கோழிகளைத் தந்து நாம் வாழ்வதற்கு எமக்கு யாராவது உதவி செய்யவேண்டுமென நாம் விரும்புகின்றோம் என்று அப்பெண் தெரிவித்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to “யுத்தம் முடிந்தாலும் வடக்கில் துப்பாக்கிநபர்கள் உள்ளனர்“: ரொய்ட்டர் செய்தி நிறுவனம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com