வேலணை அரசினர் ஆஸ்பத்திரியில் மரணமடைந்த இளம் மருத்துவ மாது தர்ஷிகா சரவணனின் உள்ளுறுப்புக்கள் கெட்டுப்போகாமல் “எம்பாம்' பண்ணி அதனை அடக்கம் செய்த இரண்டு ஆஸ்பத்திரி ஊழியர்களின் செயற்பாடுகள் குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.
இமானுவேல் அருள், அந்தோனி ஏஞ்ஜலோ என்ற பிரஸ்தாப ஊழியர்கள் இருவரும் மதுபோதையில் இருந்தமை, ஒழுக்கவீனம், நீதிமன்றத்திற்கு தகவல்தர மறுத்தமை, கைதடி மயானத்தில் ஜூலை மாதம் 28ஆம் திகதி தர்ஷிகாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்ட போது நீதிவான் முன்னிலையில் சமுகமளிக்க தவறியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
மனித உரிமைகள் இல்லத்தை சேர்ந்த வழக்கறிஞர் பி.குகனேஸ்வரன், தர்ஷிகா குடும்பத்தின் சார்பில் இந்த வழக்கில் வாதாடுகிறார். ஆரம்பத்திலிருந்து பொலிஸார் அவர்களது கடமையை செய்திருந்தால் தங்கள் அமைப்பை போன்றதொரு நிறுவனம் இந்த வழக்கில் சம்பந்தப்பட வேண்டிய தேவை இல்லை என்று வழக்கறிஞர் குகனேஸ்வரன் தெரிவித்தார்.
கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரி ஊர்காவற்றுறை நீதிவானிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, யாழ். கொட்டடி மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த தர்ஷிகாவின் உள்ளுறுப்புக்களை மீண்டும் தோண்டி எடுத்து தமது முன்னிலையில் பெட்டி ஒன்றினுள் வைத்து சீல் வைத்து இன்று திங்கட்கிழமை பிரஸ்தாப ஊழியர்கள் இருவரினதும் வாக்குலம் மீண்டும் ஒருமுறை பதிவு செய்யப்படும் வரை அதனை யாழ். அரசினர் ஆஸ்பத்திரியில் பத்திரப்படுத்தி வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார் என்று குகனேஸ்வரன் தெரிவித்தார்.
இந்த சோதனையை நடத்தவதற்கு தேவையான சில முக்கிய உறுப்புக்கள் தமக்கு அனுப்பப்பட்ட உள்ளுறுப்புக்களில் இல்லாதிருப்பதால் தமது அறிக்கையை தயாரித்து தரமுடியாதிருக்கிறது என்று கொழும்பு சட்ட மருத்துவ அதிகா டாக்டர் ஏ.அல்விஸ் அறிவித்ததை அடுத்தே நீதிவான் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பிரஸ்தாப ஊழியர்கள் இருவரினதும் ஆரம்ப வாக்குமூலங்கள் ஒன்றுக் கொன்று முரணாக அமைந்துள்ளதாலும் ஊழியர்களில் ஒருவர் மதுபோதையில் இருந்ததாலும் இவர்களது வாக்குமூலத்தை மீண்டும் பதிவு செய்ய வேண்டி இருக்கிறது பிரேத பரிசோதனையை ஆரம்பிப்பதற்கு முன்னர், தற்போது தோண்டி எடுக்கப்படும் உள்ளுறுப்புக்கள் இறந்த தர்ஷிகாவினது தானா என்பதை உறுதிப்படுத்துவதற்காக அவற்றை மரபணுப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு தாங்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் குகனேஸ்வரன் தெரிவித்தார்.
முன்னர், ஊர்காவற்றுறை நீதிவானின் உத்தரவின் பேரில் தர்ஷிகாவின் உடல் இரண்டாவது தடவை பிரேத பரிசோதனை செய்வதற்காக ஜுலை மாதம் 28ஆம் திகதி கைதடி மயானத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டு குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்டதன் பின்னர் இரண்டு குடும்ப உறுப்பினர்களுடனும் மனித உரிமை இல்ல அலுவலர் ஒருவருடனும் கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரிக்கு பொலிஸ் காவலுடன் அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஜுலை மாதம் 10 ஆம் திகதி வேலணை ஆஸ்பத்திரி விடுதிக்குள் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் இறந்திருக்க காணப்பட்ட தர்ஷிகாவின் மரணம் யாழ்ப்பாணம் சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது போல் தற்கொலை அல்ல என்றும் அவர் கொலை செய்யப்பட்டதால் ஏற்பட்டது என்றும் குடும்ப உறுப்பினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், தர்ஷிகா பணியாற்றிய வேலணை அரசினர் வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியாக பணியாற்றிய டாக்டர் பியந்த செனிவிரத்ன இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜுலை மாதம் 16ஆம் திகதி தொடக்கம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படவேண்டிய திகதியும் நிர்ணயிக்கப்படவில்லை.
இதேவேளை சிவில் உடையில் தங்கள் வீட்டுக்கு வரும் இனம்தெரியாத சிலர் இந்த சம்பவம் ஒரு தற்கொலை சம்பவம் என்று தெளிவாக தெரிவதால் அதனை ஏற்றுக் கொண்டு அது தொடர்பாக மேற்கொண்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் எச்சரிக்கை செய்வதாக குடும்பத்தினர் மனித உரிமை இல்லத்திடம் முறையிட்டுள்ளார்கள் என்று குகனேஸ்வரன் தெரிவித்தார்.
தர்ஷிகாவின் சடலத்தை மீண்டும் தோண்டுமாறு கோரவேண்டாம் என்றும் குடும்பத்தினரிடம் வலியுறுத்தப்பட்டதாகவும் வழக்கறிஞர் குகனேஸ்வரன் தெரிவித்தார். தர்ஷிகா தற்கொலை செய்து கொள்ள வேண்டிய காரணம் எதுவும் இருக்கவில்லை என்றும் சந்தேகநபரான டாக்டர் செனிவிரத்ன தர்ஷிகாவில் அக்கறை காண்பித்து வந்தது தங்களுக்கு தெரியும் என்றும் தர்ஷிகாவின் கைத் தொலைபேசி காணாமல் போனபோது அதற்குப் பதிலாக ஒரு கைத்தொலைபேசியை வாங்கிக் கொடுக்க டாக்டர் முயற்சித்த போது ஏற்பட்ட தகராறு பற்றியும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தமது தமையனார் ஒரு புதிய தொலைபேசி வாங்கித் தருவார் எனக் கூறி தர்ஷிகா டாக்டரிடமிருந்து கைத்தொலை பேசியை பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார். இந்த போன் விவகாரம் குறித்து தர்ஷிகாவின் சகோதக்கும் தெரியும் என்றும் குகனேஸ்வரன் தெரிவித்தார்.
இத்தகைய சம்பவங்களின் போது வழமையாக கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளை பின்பற்றி பொலிஸார் உரிய முறையில் வாக்குமூலங்களை பதிவுசெய்து தேவையான சட்ட மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய மாதிரிகளை சேகத்து “பி' அறிக்கையையும் தாக்கல் செய்திருந்தால் பல சாட்சிகள் பகிரங்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சந்தேக நபருக்கு எதிராக சாட்சியம் அளித்திருப்பார்கள் என்றும் குகனேஸ்வரன் தெரிவித்தார்.
ஆனால், இதற்கு பதிலாக, பொலிஸார் ஒரு ஏ அறிக்கையை மட்டுமே தாக்கல் செய்ததன் மூலம் சந்தேகநபர் பிணை மனுவை தாக்கல் செய்து 24 மணித்தியாலங்களுக்குள் அவர் பிணையில் செல்ல வழி வகுத்துள்ளனர். குறிப்பாக வழமைக்கு மாறாக ஒரு வெள்ளிக்கிழமை பிற்பகல் (ஜுலை 16) 2 மணிக்கு இந்த பிணை மனு தாக்கல் செய்யப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது என்று வழக்கறிஞர் குகனேஸ்வரன் மேலும் கூறினார்.
குற்றவியல் சட்டக் கோவையின் 373 (2) ஷரத்தின்படி ஒரு தடவை பிரேத பரிசோதனை செய்யப்பட்டால் அந்த சடலம் மீது இன்னுமொரு தடவை பிரேத பரிசீலனை செய்யக்கூடாது என்று கூறி பொலிஸார் இரண்டாம் தடவை பிரேத பரிசோதனை செய்வதற்கும் ஆட்சேபனை தெரிவித்ததையும் குகனேஸ்வரன் சுட்டிக்காட்டினார். ஆனால் பொலிஸாரின் இந்த கோரிக்கை தவறானது என்று தெரிவித்த நீதவான் இரண்டாவது தடவை பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார் என்றும் குகனேஸ்வரன் தெரிவித்தார்.
சந்தேகநபரான டாக்டரின் உறவினர் ஒருவர் வேலணை கடற்படை தளத்தில் பணியாற்றுகிறார் என்றும் டாக்டர் அங்கு கிரமமாக விஜயம் செய்வார் என்றும் தெரிவித்த குகனேஸ்வரன் கடற்படையினரும் ஆஸ்பத்திரி அதிகாரிகளும் இந்த வழக்கை இயன்ற அளவு விரைவில் ஒரு முடிவுக்கு கொண்டுவருமாறு பொலிஸாருக்கு அழுத்தம் கொடுக்கலாம் என்றும் கூறினார்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to கொழும்புக்கு அனுப்பப்பட்ட தர்ஷிகாவின் உடல் உள்ளுறுப்புகளில் முக்கிய பாகங்கள் இல்லை