Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாம் தமிழர் என முழங்குகிறார் சீமான். தி.மு.. - காங்கிரஸ் மீது சாட்டையைச் சொடுக்கும் அவர், காங்கிரஸை வீழ்த்துவதற்காக இரட்டை இலைக்கு வாக்குக் கேட்பதில் தவறில்லை என்கிறார்.

உங்கள் இயக்கத்தைச் சேர்ந்த சு.ப.முத்துக்குமார் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இச்சம்பவத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அந்தக் கொலையை என்னை அச்சுறுத்துவதற்கோ என்னை வலுவிழக்கச் செய்வதற்கோ திட்டமிட்டு செய்திருக்கிறார்களோ இல்லையோ, ஆனால் முத்துக்குமாரின் இழப்பு என்னை பலவீனப்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் அவர் எனக்கு இணையான ஒரு பெரிய களப்போராளி. எனக்கு முன்பிருந்தே தமிழ்த் தேசிய விடுதலையை முன்னெடுத்தவர். எல்லோரையும் அணுகி களத்தில் நின்று ஒரு நிமிடம்கூட சோர்வின்றி சுறுசுறுப்பாகப் பணியாற்றக்கூடியவர். அவர் இல்லை என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. எனக்கு மட்டுமல்ல, தமிழ்த் தேசிய அரசியலுக்கே ஈடுகட்ட முடியாத மிகப்பெரிய இழப்பு.

ஈழத் தமிழர் பிரச்னை மட்டும்தான் உங்கள் அரசியலாக இருக்கிறதே...?

ஈழத்தமிழர் பிரச்னைதான் எனக்கென்று ஓர் அரசியல் இல்லை என்பதை வலுவாக உணர்த்தியது. தமிழர் தேசிய இன விடுதலையைவிட, அந்த இனத்திற்கு ஒரு அரசியல் இருக்கமுடியாது. அந்த அரசியலைச் செய்ய இங்கே யாரும் இல்லை. கண் முன்னே என் இனம் மரணிக்கும்போது, என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்று நினைக்கும்போது என்னிடம் வலிமையில்லை. அந்த வலிமை எங்கே இருக்கிறது? அரசியல் அதிகாரத்தில் இருக்கிறது. அந்த அரசியல் அதிகாரத்தைப் பெற்றவர்களிடம் இனவுணர்வு இல்லை. இனவுணர்வு இருக்கிறவனிடம் அரசியல் அதிகாரம் இல்லை. எனக்கான அரசியல் வலிமையை உருவாக்குவதுதான் இதற்கான சரியான வழி.

நாம் தமிழர் கட்சியின் கொள்கை நிலைப்பாட்டை ஒற்றை வரியில் சொன்னால், இனத்தின் நலன். இனத்தின் நலன் என்று எடுத்துக்கொண்டால், இதில்தான் சாதி ஒழிப்பு இருக்கிறது. பெண்ணிய விடுதலை இருக்கிறது, சமூக நீதி இருக்கிறது, முல்லைப் பெரியாறு பிரச்னை இருக்கிறது, பாலாற்றுக்கு இடையிலான அணையைத் தடுக்கும் உரிமை இருக்கிறது, என் மீனவனுக்காக வாழ்வுரிமையைப் பெற்றுத்தருவது இருக்கிறது, அனைவருக்குமான கல்வி, மருத்துவம் இதில்தான் இருக்கிறது. இவையெல்லாமே இனத்தின் நலன் என்பதில் அடங்கிவிடுகிறது. அதைத்தவிர எனக்கு வேறு நோக்கம் இல்லை.

ஏழைக்கு ஒரு கல்வி, பணக்காரனுக்கு ஒரு கல்வி இருக்கக்கூடாது என்று நினைக்கிறேன். ஏழைக்கு ஓர் உயிர், பணக்காரனுக்கு ஓர் உயிர் இல்லை. ஆனால் பணம் அதிகமாகச் செலுத்துகிறவனுக்கு ஒரு மருத்துவம் கிடைக்கிறது. பணம் குறைவாகச் செலுத்துகிறவனுக்கு வேறு மருத்துவம் என்றால், இந்த நாடு சரியான ஜனநாயக நாடாக இருக்கமுடியாது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். எல்லோருக்கும் எல்லாம் உண்டு. எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே என்ற முழக்கங்கள் எல்லாம் ஏமாற்று வார்த்தைகள். உண்மையல்ல. எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று சொல்லிவிட்டு ஒருவரே ஆறுமுறை அரசாளத் துடிப்பது அயோக்கியத்தனம்.

தமிழ்த் தேசியம் கடைசியில் அதிமுகவைச் சார்ந்து இப்போது இருக்கிறதா?

இது புரிதல் இல்லாமல் பேசுவது. தமிழத் தேசியம் என்பது திராவிடக் கட்சிகளைச் சார்ந்து இருக்கமுடியாது. எங்களுக்கு அரசியல் வலிமை இல்லாததால், நாதியற்று நிற்கிறோம். என்னை வைத்துக்கொண்டு என் நிலைப்பாட்டிலேயே பார்ப்போமே. நான் ஒரு நாதியற்றவன். நான் ஓர் அனாதை. நான் ஓர் ஆதரவற்ற பிள்ளை. எந்த இடத்திலும் போய் நிற்கமுடியவில்லை. எனக்கென்று உதவ உலகில் யாரும் இல்லை. உலகம் தழுவி நேசித்தேன் எல்லோரும் என் உறவுகள் என்று நினைத்தேன். சர்வதேசியம் பேசினேன். இந்திய தேசியம் பேசினேன். திராவிடம் பேசித் திரிந்தேன். கடைசியாக சாகும்போது எனக்கென்று யாரும் வரவில்லை என்கிறபோது நான் தனித்துவிடப்பட்டேன். நான் தமிழன் என்று விட்டுவிட்டீர்கள். ஆமாம், நான் தமிழன் என்பதை உணர்ந்து கொண்டேன். கருணாநிதிக்கு மாற்றாக ஜெயலலிதா இல்லை. ஜெயலலிதாவுக்கு மாற்று கருணாநிதியும் இல்லை.

இந்தச் சூழலில், என் இனம் மொத்தத்தையும் காங்கிரஸ் அழித்துவிட்டது. பாகிஸ்தானையும் சீனாவையும் பக்கத்தில் பகையாக வைத்திருக்கிறோம் காலடியில் இருக்கிற இலங்கையையும் பகையாக மாற்றவேண்டுமா என்று அது நினைக்கிறது. அது நியாயமாக செய்திருக்கவேண்டியது. தமிழீழக் குடியரசை தனியாக பிரித்துவிடுதலே. அப்படிச் செய்திருந்தால், எப்போதுமே அது இந்தியாவை தந்தையர் நாடாகக் கருதி, நட்பு நாடாக பாதுகாப்பு அரணாக இருந்திருக்கும். அதைச் செய்யாத பெரும் வரலாற்றுப் பிழையை இந்தியா செய்துவிட்டது. இச்சூழலில் எங்கள் வலிமையை உணர்த்துவதற்கு இந்தத் தேர்தல் களத்தைப் பயன்படுத்துகிறோம். எங்கள் கட்சியின் கொள்கை முடிவு... ஒற்றைக் கட்சி ஆட்சிமுறை இந்த தேசம் முழுமைக்கும் இருக்கக்கூடாது. ஒரே கட்சி நாட்டை ஆளக்கூடாது. எந்த மொழிவழி தேசிய இனத்துக்கும் தேசிய கட்சியின் தலையீடு இருக்கக்கூடாது என்று நினைக்கிறோம். காங்கிரஸோ பாஜகவோ எனக்கு வேண்டாம்.

காங்கிரஸை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதாகச் சொல்கிறீர்கள். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைச் சொல்வீர்களா?

கை சின்னத்தை எதிர்த்து இரட்டை இலையும் சுயேட்சையும் நின்றார்கள் என்றால், சுயேட்சைக்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொல்ல முடியாது. சுயேட்சைக்குச் சொல்வதற்குப் பதிலாக நானே ஒரு வேட்பாளரை நிற்க வைத்துவிடலாம். அது எதிரியின் வாக்குகளைப் பிரிக்குமே தவிர, அந்த எதிரியின் தோல்வியை உறுதிப்படுத்த முடியாது. இரட்டை இலைக்குப் போட்டால்தான் கை சின்னம் தோற்கும். பம்பரத்துக்கு, கதிர் அரிவாள் சுத்தியலுக்குப் போட்டால்தான் கை சின்னம் தோற்கும்.

ஈழப்பிரச்னையில் காங்கிரஸ் மட்டும்தான் குற்றவாளியா? உங்களுக்கு தி.மு.க. மீது கோபம் இல்லையா?

தி.மு..வும்தான் குற்றவாளி. ஆனால் இறுதிக்கட்டப் போரின்போது சர்வதேச நாடுகள் நெருக்கிய நிலையில், இந்தியாவைக் கேட்டுக்கொண்டுதான் முடிவெடுக்கமுடியும் என்று இலங்கை அரசு அறிவித்தது. போரை நடத்தியதே இந்தியாதானே. காங்கிரஸ் தலைமையில் ஆளுகிற அரசுதானே. பதவி ஆசைக்காக கடவே துணையிருந்து தி.மு.. செய்தது துரோகம். மத்தியில் ஆட்சிக்கு ஆதரவளித்த அனைத்துக் கட்சிகளுமே குற்றவாளிகள்தான். நாங்கள் காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில் தி.மு..வை எதிர்த்து உறுதியாகப் பேசுவோம்.

நீங்கள் நேரடியாக அ.தி.மு.க.வை ஆதரிக்கிறீர்களா?

அதிமுகவை ஆதரிப்பது என்றால் அக்கட்சி நிற்கும் எல்லாத் தொகுதிகளிலும் போய் பிரச்சாரம் செய்ய வேண்டும். அப்படி செய்யவில்லை. காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில் மட்டுமே பிரசாரம் செய்யப்போகிறோம். அது அதிமுக ஆதரவு என்பதாகாது. காங்கிரஸை எதிர்க்கும் ஒரு வலுவான கட்சிக்கு வாக்கு கேட்க வேண்டும். அது அதிமுகவாக இருக்கிறது. எதிரியின் தோல்வியை உறுதிப்படுத்த அக்கட்சியை ஆதரித்து வாக்குக் கேட்கவேண்டிய நிலையில் இருக்கிறோம்.

திராவிடம் என்பதை எதிர்க்கிறீர்களா? ஏன் என்ன காரணம்?

ஆரியத்துக்கு எதிரான திராவிடம் என்பதை ஆதரிக்கிறேன். ஆனால் நான் ஒரு திராவிடன் என்பதை மறுக்கிறேன். நான் ஒரு தமிழன். இந்தியா ஒரு தேசியம் என்பதே இல்லை. மொழிவழி தேசிய இனங்களின் உரிமைகளுக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கும்போதுதான் அது சாத்தியமாகும். இந்திய தேசிய ஒருமைப்பாடு என்பது பிரிட்டிஷ்காரர்களின் துப்பாக்கி முனையில் உருவாக்கப்பட்டது என்று கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்டார். அதுதான் உண்மை. திராவிடம் என்பது தெலுங்கு, கன்னடம், மலையாளம் என எல்லோரையும் அடக்கியதாக இருந்தது. இங்கு யாரும் திராவிடர்கள் இல்லை. நான் இனத்தால், மொழியால் தமிழனாக இருக்கிறேன்.

நீங்கள் சினிமாவை பின்னணியாகக் கொண்டவர். உங்களுக்கு ஓர் அங்கீகாரம் இருக்கிறது. உங்களது உணர்ச்சிகரமான அரசியலைப் பின்தொடரும் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாதா?

பாதிக்கப்படாது. பாதிக்கப்படுவதற்கு ஏன் இந்த வேலைகளை நாங்கள் செய்கிறோம்? பாதிக்கப்பட்ட பிள்ளைகள்தானே ஒன்றிணைந்துள்ளோம். திரைப்படம் என்பது இழிவான ஊடகம் அல்ல. அது உன்னதமான விஞ்ஞானம். எனக்கான ஊடகமாக அதை மாற்றாமல் விட்டதால் ஏற்பட்ட பின்விளைவுகள் இவை. தலைவர் பிரபாகரன், அதையரு ராணுவப் பிரிவாகத்தான் கருதுவார். இதுவரைக்கும் நடந்த ஈழப் போராட்டத்தை பிரேவ் ஹார்ட், சிண்ட்லர்ஸ் லிஸ்ட் மாதிரி படங்களாக எடுத்து உலகத்தரத்துக்கு கொண்டுபோக முடியவில்லையே என்ற வருத்தம் அவருக்கு இருந்தது. எந்த வேலையைச் செய்தாலும் அந்த இடத்திலிருந்து வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தினார்கள். நாங்கள் வெறும் உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறவர்களாக இருந்தால், இத்தனை லட்சம் மக்களை எங்களுடன் இணைக்க முடியாது. அறிவுபூர்வமாக சிந்தித்து, அதை ஜனநாயகப் பூர்வமாக முடிவெடுத்து, அதை உணர்வுப்பூர்வமாகச் செயல்படுத்துவோம். நாங்கள் உண்மையைப் பேசுவது உரக்கப் பேசுவது உங்களுக்கு உணர்ச்சிபூர்வமாகப் படுமே தவிர, அறிவார்ந்த கருத்துக்களைத்தான் உணர்வுபூர்வமாகச் சொல்கிறோம். அதனால் எந்த இளைஞனின் எதிர்காலமும் பாதிக்கப்படுவதற்கே வேலையே கிடையாது.

நாம் தமிழர் இயக்கத்தை பெரும் அரசியல் கட்சியாக மாற்றுகிற முயற்சிகள் இருக்கின்றனவா?

இது அரசியல் கட்சிதான். மே 18,2010 ல் அரசியல் கட்சியாக அறிவித்தோம். மாபெரும் அரசியல் சக்தியாக நாம் தமிழர் வளர்ந்துகொண்டிருக்கிறது. எங்கள் பக்கம் திரண்டு வருகிற மக்களை, அவர்கள் முன்னால் நாங்கள் பேசுகிற பேச்சுக்களை ஊடகங்கள் மக்களிடம் எடுத்துக்கொண்டு போகவில்லை. இந்த மாற்றத்துக்கு ஆறு ஆண்டுகள் வைத்திருக்கிறோம். ஆனால் ஆறு ஆண்டுகள் தேவைப்படாது. ஊடகங்களின் வழியாக மக்களிடம் எடுத்துச் சென்றால் ஆறு மாதங்கள் போதுமானது.

உங்களுடைய அரசியல் பாதை தேர்தலில் போட்டியிடுவதா அல்லது சமூக இயக்கமாகச் செயல்படுவதா?

தேர்தல் பாதைதான். சமூக இயக்கங்கள் என் இனத்திற்கு நிறைய இருக்கின்றன. எனக்கு இல்லாதது அரசியல் வலிமைதான். தேர்தலில் நிற்போம். இப்போது இல்லை. 2016 இல் தேர்தலில் நிற்பது பற்றி யோசிப்போம்.

விஜய்யுடன் இணைந்து பகலவன் படம் இயக்குவதாக பேச்சுகள் அடிபட்டன. அந்த முயற்சி எந்த அளவில் இருக்கிறது?

ரொம்ப நாட்களுக்கு முன்பே பேசி முடிவு செய்யப்பட்டுவிட்டது. இந்த வேலைகளைத் தொடங்கும் காலகட்டத்தில் சிறைப்பட்டுவிட்டேன். நான் விடுதலையாவதற்கு நாளாகும் என்று தம்பி விஜய் வேறு வேறு படங்களை ஒப்புக்கொண்டார். இப்போது இறுதி செய்துவிட்டோம். தயாரிப்பாளர் தாணு அண்ணன். எனக்கும் தேர்தல் வேலைகள் இருக்கின்றன. அவருக்கும் பல பணிகள் இருக்கின்றன. அதற்குப் பிறகு படத்திற்கான வேலைகளைத் தொடங்குவோம்.

அதிர்வு

0 Responses to ஈழப்பிரச்னையில் காங்கிரஸ் மட்டும்தான் குற்றவாளியா? தி.மு.க. மீது கோபம் இல்லையா?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com