வடக்கு,கிழக்கில் உள்ளூராட்சி சபைகளுக்கு நடைபெற்ற தேர்தல் மூலம், சர்வதேச சமூகத்துக்கும் சிறிலங்கா அரசுக்கும் தெளிவானதொரு செய்தியை தமிழ்மக்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.
இத்தகையதொரு தேர்தல் முடிவை சிறிலங்கா அரசாங்கம் நிச்சயம் எதிர்பார்த்திருக்காது.
ஏனென்றால் அரசாங்க வளங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து பலத்த நம்பிக்கையோடு தேர்தல் பிரசாரத்தில் இறங்கியிருந்தது மகிந்த ராஜபக்ஸவின் பட்டாளம்.
மகிந்தவின் சகோதரர் பசில் ராஜபக்ச யாழ்ப்பாணத்தையும், அவரது மகன் நாமல் ராஜபக்ச வன்னியையும் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு முழுநேரமாக பிரசாரத்தைக் கவனித்துக் கொள்ள, கடைசி நேரத்தில் மகிந்தவே வந்து நேரடியாக களமிறங்கினார்.
கடைசி மூன்று நாட்களும் மகிந்த ராஜபக்ஸ வடக்கிலேயே தங்கியிருந்து பிரசாரங்களை மேற்கொண்டார்.
உள்ளூராட்சித் தேர்தல் ஒன்றுக்கு இந்தளவுக்கு பிரசாரம் மேற்கொள்ளப்பட்ட வரலாறு முன்னெப்போதும் இல்லை என்றளவுக்கு பிரசாரங்களை அரசாங்கத் தரப்பு மேற்கொண்டிருந்தது.
அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று வடக்கிலே குவிந்து நின்று பிரசாரங்களை செய்தனர்.
அவை அத்தனையுமே மலினத்தனமானவை.
தேர்தல் பிரசாரம் என்று அழைத்தால் மக்கள் வரமாட்டார்கள் என்று திறப்பு விழாக்கள் என்ற போர்வையிலும், நலத்திட்டங்கள்- அபிவிருத்தித் திட்டங்கள் என்ற பெயரிலும் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.
அத்தனையிலுமே அரசியல்வாடை தான் வீசியது. தமிழ்மக்களுக்கு சலுகைகள் அள்ளி வீசப்பட்டன.
இவையெல்லாவற்றையும் பார்த்தபோது தமிழ்த் தேசிய உணர்வாளர்களுக்கு ஒருவித அச்சம் ஏற்பட்டது உண்மை.
அபிவிருத்தி என்ற மாயைக்குள் தமிழ்மக்களின் அரசியல் உரி்மைகள் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டு விடுமோ என்ற அச்சம் மேலோங்கியது.
என்றாலும் தேர்தல் முடிவு அத்தகைய அச்சத்தைப் போக்கி விட்டது.
அதுமட்டுமன்றி அரசாங்கத்தின் வாயை முற்றிலும் அடைக்கச் செய்து விட்டது.
குறிப்பாக மகிந்த ராஜபக்ஸவையும், அவரது சகோதரர் பசில், மகன் நாமல் போன்றோரின் வாய்களுக்குப் பூட்டுப் போட்டு விட்டதென்றே கூறலாம்.
அந்தளவுக்கு தேர்தல் முடிவு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
அமைச்சர்கள் சிலர் தேர்தல் முடிவுகளுக்குப் புதுப்புது வியாக்கியானம் கொடுக்க முனைந்துள்ளனர்.
அரசுடன் இணைந்து செயற்படவே மக்கள் ஆணை கொடுத்துள்ளனர் என்கிறார் ஒரு அமைச்சர்.
இதை வைத்துக் கொண்டு அதிகமாக துள்ளக் கூடாது என்று எச்சரிக்கிறார் மற்றொருவர்.
மகிந்தவோடு சேர்ந்து கொண்டு தேர்தலில் நின்ற டக்ளஸ் தேவானந்தாவோ தேர்தல் முடிவு எல்லோருடைய கண்களையும் திறக்கச் செய்துள்ளது என்கிறார்.
கூட்டமைப்புக்கு வழங்கப்பட்ட ஆணை தெருவிளக்குகளைப் பராமரிக்கவே என்கிறார் பசில்.
ஆக மொத்தத்தில் அமைச்சர்கள் அனைவருமே இந்தத் தேர்தல் முடிவை சரியாகப் புரிந்து கொள்ள முடியாதளவுக்குக் கலங்கிப் போயுள்ளனர் என்பதே உண்மை.
தெற்கிலே தமக்கு வழங்கப்பட்டுள்ள ஆணைக்கு ஒரு விதமாக கற்பிதம் கூறும் சிறிலங்கா அரசாங்கம் வடக்கிலே தமிழ் மக்கள் கொடுத்துள்ள ஆணைக்கு மற்றொரு வகையான விதண்டாவாதக் கற்பிதம் கொடுக்கிறது.
இந்தத் தேர்தலில் சிறிலங்கா அரசுக்கு ஏற்பட்ட தோல்வி தனியே உள்ளூர் அரசியல் பரிமாணம் ஒன்றைக் கொண்டதல்ல.
அதற்கும் அப்பால் இதற்கு சர்வதேச முக்கியத்துவம் உள்ளது.
இது வெறும் உள்ளூராட்சித் தேர்தல் தான் என்று இப்போது சிறிலங்கா அரசினால் கூறிவிட முடியாது.
ஏனென்றால் தேர்தலுக்கு முன்னரே சிறிலங்கா அரசின் அமைச்சர்கள் இந்தத் தேர்தல் மூலம் வடக்கிலுள்ள தமிழ் மக்கள் சர்வதேசத்தின் வாயை அடைத்து விடுவார்கள் என்று கூறியிருந்தனர்.
போர்க்குற்ற விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் சர்வதேசத்தின் வாயை அடைப்பதற்கான ஒரு கருவியாக இந்தத் தேர்தலை மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் பயன்படுத்த முனைந்தது.
ஆனால் இப்போது தமிழ் மக்கள் சிறிலங்கா அரசினது வாயை அடைத்து விட்டுள்ளனர்.
போர்க்குற்ற விசாரணைகள் தேவையென்பதையும், அபிவிருத்தியல்ல உரிமைகளே அவசியம் என்ற உண்மையையும் அவர்கள் உறுதியாக எடுத்துக் கூறியுள்ளனர்.
இது சிறிலங்கா அரசு எதிர்பாராத ஒரு அதிர்ச்சி.
ஏனென்றால் முள்ளிவாய்க்காலில் நிகழ்த்திய நரபலி வேட்டையை தமிழ் மக்கள் இலகுவில் மறந்து போய் விடுவார்கள் என்று சிங்கள அரசு பகல்கனவு கண்டிருந்தது.
வேட்டியும், சேலையும், நிவாரணப் பொருட்களும், அபிவிருத்தி என்ற மாயையும் தமிழ்மக்களின் உரிமைப் போராட்டத்தையும் அவர்களின் கடந்தகால அனுபவங்களையும் அழித்து விடும் என்று மகிந்த அரசு கனவு கண்டது.
ஆனால் அந்தக் கனவு வெறும் பகல் கனவாகிப் போயுள்ளது.
தமிழ்மக்கள் அபிவிருத்தி அரசியல் மாயைக்குள் விழுந்து விடப் போவதில்லை என்ற உண்மையை எடுத்துக் கூறியுள்ளனர்.
தனை இனியாவது சிறிலங்கா அரசு உணர்ந்து கொண்டால் தான் இதுபோன்ற மூக்குடைபடுதலில் இருந்து தப்பிக் கொள்ள முடியும்.
இல்லையேல் இதுபோன்று அவ்வப்போது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சிறிலங்கா அரசு மூக்குடைபட்டு தலைகுனிவுகளை சந்திப்பது தொடர்கதையாகவே அமைந்து விடும்.
முகிலன்
ஈழநேசன்



0 Responses to ஈழத் தமிழர்கள் சிறிலங்கா அரசுக்கு கொடுத்த அடி